

புதுடெல்லி
பொதுத்துறையைச் சேர்ந்த எம்.எஸ்.டி.சி. நிறுவனத்திற்கு பங்கு வெளியிட்டு நிதி திரட்ட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்து இருக்கிறது.
உருக்கு அமைச்சகம்
எம்.எஸ்.டி.சி. நிறுவனம் மத்திய உருக்குத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் மின்னணு ஏலம், மின்னணு விற்பனை போன்ற ஆன்லைன் வணிகம் தொடர்பான சேவைகளை இது வழங்குகிறது. மூலப்பொருள்கள் மொத்த வர்த்தகத்திலும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது.
மத்திய அரசுக்கு இந்த நிறுவனத்தில் தற்போது 89.85 சதவீத பங்குகள் இருக்கின்றன. இந்நிறுவனம் பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்தது. எனவே அதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்பிற்கு விண்ணப்பித்து இருந்தது. இப்போது செபி அனுமதி வழங்கி உள்ளது.
இந்த வெளியீட்டில் 1.76 கோடி பங்குகள் (அதாவது 25 சதவீதம்) பங்குகள் ஏலமுறையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் வெளியீட்டிற்குப் பிறகு எம்.எஸ்.டி.சி. நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 64.85 சதவீதமாக குறைந்து விடும்.
இவ்வெளியீட்டை ஈக்விரஸ் கேப்பிட்டல் நிறுவனம் நிர்வகிக்கிறது. எதிர்வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்குப் பின் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
சென்ற நிதி ஆண்டில் (2017-18) மார்ச் 31 நிலவரப்படி இந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.560 கோடியாகவும், நிகர லாபம் ரூ.72 கோடியாகவும் இருக்கிறது.
விற்பனை இலக்குகள்
நடப்பு நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பொதுத்துறை பங்குகள் விற்பனையில் திரட்டப்பட்டுள்ள நிதி ரூ.53,558 கோடியை எட்டி உள்ளது. வரும் நிதி ஆண்டில் (2019-20) இந்த வழிமுறையில் ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.