நட்சத்திரங்களாய் மின்னும் ரியா..

நட்சத்திரங்கள் போன்று மின்னும் தனது ஆபரணங்களை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறார் ரியா.
நட்சத்திரங்களாய் மின்னும் ரியா..
Published on

நான் சுயதொழிலில் தனித்துவம் பெற்று திகழ விரும்பினேன். நான் வடிவமைக்கும் ஆபரணங்கள் நட்சத்திரங்கள் போன்று மின்னவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை பார்ப்பவர்கள், ஈர்க்கப்பட்டு என்னைத் தேடிவர வேண்டும் என்றும் நினைத்தேன். அப்படி பலரும் என்னை தேடிவந்தால்தான் நான் எனது தொழிலில் வெற்றி பெற்றதாக அர்த்தம். இப்போது பலரும் என்னை தேடிவந்து நான் உருவாக்கிய நகை டிசைன்களை பார்த்து வாங்கிச்செல்கிறார்கள். அதனால் தனித்துவத்தோடு இந்த தொழிலில் நான் வெற்றிபெற்றுவிட்டதாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், ரியா. இவர் கேரளாவில் காஞ்சிரப்பள்ளி என்ற இடத்தில் வசிக்கிறார். நட்சத்திரங்கள் போன்று மின்னும் தனது ஆபரணங்களை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறார்.

நான் பேஷன் டிசைனிங் படித்திருக்கிறேன். அதனால் ஆடை வடிவமைப்பு சார்ந்த சுயதொழிலை செய்யவே முதலில் ஆசைப்பட்டேன். எனக்கு பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும். அதனால் ஒருமுறை வட இந்தியாவை நோக்கி என் வாகனத்தை செலுத்தினேன். அந்த பயணத்தில் நான் பார்த்த அற்புதமான ஆபரணங்களே என்னை ஆபரண வடிவமைப்பாளராக்கியது.முதலில் நான் விரும்பிய ஆபரணங்கள் அனைத்தையும் வாங்கி எனக்காக தனிப்பட்ட முறையில் சேகரித்தேன். அதை பார்த்தவர்கள் வியப்போடு அந்த ஆபரணங்களை பற்றி விசாரித்தார்கள். அவை ஏராளமான பெண்களை கவர்ந்ததால், அவைகளை வைத்தே சிறிய அளவில் தொழிலை தொடங்கினேன். அதற்காக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்கி அதற்கு நட்சத்திரா என்று பெயர்சூட்டினேன்.அப்போது நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே எனது வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பின்பு இன்ஸ்டாகிராமில் பேஜ் தொடங்கினேன். 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் 35 பேர்தான் என்னை பின்தொடர்ந்தனர். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன வழி என்று யோசித்தேன். பிரபலம் ஒருவரை அதில் பயன்படுத்தி நானும் பிரபலமானேன். என்னை நிறைய பேர் பின்தொடர்ந்தார்கள். இது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம். நமது தொழிலை பிரபலப்படுத்திக்கொள்ள பிரபலங்களின் துணை மிக அவசியம்.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் விதவிதமான ஆபரணங்களை விற்பனை செய்யும் டீலர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களே ஆபரணங்களை வடிவமைக்கவும் செய்கிறார்கள். முதலில் அவர்கள் வித்தியாசமான டிசைன்களை எனக்கு அனுப்பிதந்தார்கள். நான் அதை எனது பேஜில் போஸ்ட் செய்தேன். தேவைப்பட்டவர்கள் என்னை தொடர்புகொண்டார்கள்.

காலப்போக்கில் நிறைய பேர் இந்த தொழிலை செய்ய தொடங்கிவிட்டார்கள். அதனால் போட்டி மிக கடுமையானது. அதனால் நான் என் தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதாவது வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து, அதற்கு ஏற்றபடி ஆபரணங்களை வடிவமைத்து கொடுக்க முன்வந்தேன். நான் கொடுக்கும் டிசைன்களை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து தருகிறது. நான் டிசைன்களை வரைந்து அனுப்புவேன். அவர்கள் அதே மாடலில் ஆபரணங்களை உருவாக்கித் தருவார்கள்.ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற காலகட்டங்களில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். சராசரி மாதங்களில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். இந்த சுயதொழிலை செய்தபடியே வீடியோ ஜாக்கியாகவும் வேலைபார்க்கிறேன். பெற்றோர் எனக்கு ஊக்கசக்தியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்" என்கிறார், ரியா.

இவர் ஆன்லைன் பிசினசில் வாடிக்கையாளர்களை எப்படி கவர்வது என்றும் சொல்கிறார்..

ஆபரணத்தின் தரத்திற்கு ஏற்றாற்போல்தான் லாபம் வைப்பேன். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக அவ்வப்போது பாதி விலைக்கும் விற்பனை செய்வேன். அழகாக பேக்கிங் செய்து அனுப்புவேன். விசேஷ நாட்களில் ஆர்டர் செய்பவர்களுக்கு பொருளோடு சிறிய பரிசும் வழங்குவேன். தொழிலுக்கு அப்பாலும் வாடிக்கையாளர்களுடன் நட்பு பாராட்டுவேன்.. என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com