ரஷிய போர்; இந்தியாவின் வளர்ச்சி 9.1% ஆக குறையும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.1% ஆக குறையும் என மூடிஸ் நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
ரஷிய போர்; இந்தியாவின் வளர்ச்சி 9.1% ஆக குறையும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் அதிக அளவில் கச்சா எண்ணெய் வளம் கொண்டவையாக உள்ளன. கச்சா எண்ணெய்க்கு பெரும் அளவில் இறக்குமதியை சார்ந்தே இந்தியா உள்ளது. அவற்றில், இந்தியாவின் நட்பு நாடாக உள்ள ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு 2022ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.5%ல் இருந்து 9.1% ஆக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் என்ற சர்வதேச மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள இந்த சூழலில், உலகளாவிய வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் தாக்கத்தினை மேற்கோள்காட்டி, 2023ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சியானது, 5.5%ல் இருந்து 5.4% ஆக குறைந்து இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, 2022ம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7%ல் இருந்து 9.5% ஆக இருக்கும் என அந்த நிறுவனம் உயர்த்தி காட்டி இருந்தது.

எனினும், தற்போது அதன் சர்வதேச வளர்ச்சி கண்ணோட்டத்தினை குறைத்து காட்டியுள்ளது. பொருட்களின் விலை உயர்வு, அவற்றை விநியோகிப்பதில் பற்றாக்குறை, வர்த்தக இடையூறுகள் ஆகியவற்றை இதற்கான காரணிகளாக சுட்டி காட்டியுள்ளது. பணவீக்கமும் அதிகரித்து உள்ளது.

இந்தியா, தேவைக்கும் கூடுதலாக தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இதன்மீது, சர்வதேச அளவிலான அதிக விலையால் ஏற்பட்டுள்ள தாக்கம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தியாவின் வேளாண் ஏற்றுமதிகளால் குறுகிய காலஅளவிலேயே லாபம் ஈட்ட முடியும் என்று மூடிஸ் தெரிவித்து உள்ளது.

சர்வதேச பொருளாதார பாதிப்பு, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான மோதலை பொறுத்தே அமையும். அதில் இருந்து மீள்வது பாதிக்கப்பட்ட போதிலும், மீண்டெழுவது முற்றிலும் தடம்புரண்டு சென்று விடவில்லை.

எனினும், புதிய கொரோனா அலைகள், நிதி கொள்கையில் தவறான முடிவுகள் மற்றும் உயர் பணவீக்கத்துடன் தொடர்புடைய சமூக ஆபத்துகள் போன்றவை சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கான நிலையை பாதிக்க கூடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com