சங்க இலக்கியம் - புறநானூறு : உண்பது நாழி, உடுப்பது இரண்டே

ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் என்பது பிறருக்குக் கொடுப்பதுதான். தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் பல நன்மைகளை இழக்க நேரிடும் என்கிறது இப்பாடல்.
சங்க இலக்கியம் - புறநானூறு : உண்பது நாழி, உடுப்பது இரண்டே
Published on

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பது இரண்டே

பிறவும் இல்லாம் ஓரொக்குமே,

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறம்: 189)

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் விளக்கம்:

உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்கும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் கல்வியற்ற ஒரு வேடுவனுக்கும் உண்கிற உணவு ஒரு நாழிதான், மேலாடை, கீழாடை என்கிற இரண்டு ஆடைகள்தான். இது அனைவருக்குமே பொதுவானது. ஆகவே, ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் என்பது பிறருக்குக் கொடுப்பதுதான். தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் பல நன்மைகளை இழக்க நேரிடும் என்கிறது இப்பாடல்.

பாடலில் வருகின்ற உண்பது நாழி உடுப்பவை இரண்டே, செல்வத்துப் பயனே ஈதல் போன்ற வரிகள் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துகின்ற உன்னத வரிகளாகத் திகழ்கின்றன.

நாட்டை ஆளுகின்ற அரசன் மக்களைத் துன்புறுத்தாமல் சட்டங்கள் இயற்றி வரி வசூல் செய்ய வேண்டும். செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்தான் மன்னன் என்ற பெயர் சிறக்க வேண்டும்.

அளவோடு செல்வங்களையும், சொத்துக்களையும் வைத்திருந்தாலே போதும் என்ற மனப்பான்மையுடன் திகழ வேண்டும். பிறருக்கு உதவி செய்கிற நல் மனம் கொண்டவராக இருந்தாலே வாழ்வின் உயர்ந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக திகழ முடியும். செல்வத்தின் பயன் என்பது கொடுத்தல் என்கிற மேன்மையையே குறிக்கிறது.

அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் உணவும், உடையும் எல்லோருக்கும் ஒன்று தான். அதுவே பொது உடமை தத்துவத்தின் ஆணிவேர். அளவுக்கு அதிகமான செல்வம் இருந்த போதிலும் அச்செல்வத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது என்கிற உணர்வு மானுடப்பற்றை உலகுக்கு பறை சாற்றும் நல்மனதை உருவாக்கும். ஆகவே, உதவி செய்து வாழ்வது என்பது மனிதகுலத்தின் மாண்பாக திகழ வேண்டும் என்பதே இப்பாடல் நமக்குச் சொல்லும் நன்னெறியாகும்.

பொது உடமை தத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அக்கொள்கையின் ஊற்றுக்கண்ணாகும். இந்தத் தத்துவம் எங்கிருந்து தொடங்குகிறது என்று நாம் யோசித்துப் பார்த்தால், மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே தோன்றியது எனலாம். பூமித் தேரை இழுத்து வரும் மனித சமுதாயத்தின் தன்னலம் கருதாத கொள்கைதான் இந்தப் பொதுவுடமைக் கொள்கை.

கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரி மன்னன், தன்னை நாடி வந்த புலவர்களுக்கு முன்னூறு ஊர்களைப் பரிசாகத் தந்தான். ஊர்களைப் பரிசாகக் கொடுத்ததற்காக இவ்வுலகம் அவனைப் பாராட்டவில்லை. முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த அந்தக் கருணை உள்ளத்தையும், உதவிய கரங்களையும்தான் பாராட்டுகின்றது.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சக மனிதர்களை உண்மையாக நேசிக்கின்ற போதும், அன்போடு அவர்களை அரவணைத்துக் கொள்கிற போதும் வெளிப்படுகிற அழகை விட, வேறு எதுவும் அழகானதாக இல்லை.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரம் நீட்டிய அன்னை தெரேசாவும், சுதந்திர தேசத்தின் விடியலுக்காக அன்பையும், சகிப்புத்தன்மையையும் தந்த மகாத்மா காந்தியடிகளும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானும் பிறர் துயர் தீர்ப்பதையே பெருந் தொண்டாகக் கருதி உதவிக் கரங்கள் நீட்டியதால்தானே இன்றளவும் இந்த உலகம் சுழன்று கொண்டு வருகிறது.

செல்வத்தை ஈட்டுதல் என்பது ஈகையின் பொருட்டே என்பதைத் தெளிவுபடுத்துகிறது இப் பாடல். ஒன்றுமில்லாத ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதே ஈகை என்பதை வரையறுத்தார்கள். தானம் கொடுப்பதால் மோட்சம் கிடைக்காது என்று அறுதியிட்டு வாதிட்டாலும், நாம் தானம் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்தக் கூடாது. தன் நிலையைக் காட்டிக் கொள்ளாமல், உதவி கேட்டு வருகிறவர்களுக்கு முடிந்த அளவு கொடுக்கக் கூடிய குணமே, உயர்ந்த குடியில் பிறந்தவர்களுக்கு இயல்பான ஈகைப் பண்பாகும்.

பிறருக்குக் கொடுத்தால் குறைந்து விடும் என்று தன்னிடம் உள்ளதைத் தானே உண்பது, பிச்சையெடுப்பதை விடக் கேவல மானது என்று இரத்தலின் இன்னாது என்ற குறளில் வள்ளுவர் அறுதியிட்டு பேசுவார். இறப்பு என்பது பெரும் துன்பமானது. ஆனால், எதுவும் கொடுக்க முடியாத நிலை உண்டாகும் போது, சாவு கூட இன்பம்தான் என்றும் வள்ளுவர் ஈகையின் பண்பை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

சங்ககாலத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஈதலின் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். அவ்வாறு மன்னன் வாழாத நிலையில், அவனை நல்வழிப்படுத்தி, அறநெறிப்படுத்தும் அரிய பணியினை செவ்வனே செய்து வந்தனர் புலவர் பெருமக்கள்.

மன்னனிடம் கொடுப்பதின் இன்பத்தைத் துணிவுடன் உணர்த்தி உள்ளனர். அந்த வகையில் அமைந்துள்ள புறநானூற்றுப் பாடல்தான் இது.

மனிதர்கள் யாவருக்கும் வேறுபாடுகள் என்பது இல்லை. சேர்த்து வைத்த செல்வத்தாலும், கட்டி வைத்த மாளிகைகளாலும், கணக்கில்லா நில புலன்களாலும் வேறுபாடு கொண்டு அளவிட முடியாது. மன்னனுக்கும், சாமான்ய மனிதனுக்கும் நாழி உணவுதான். உடுப்பது இரண்டுதான் என்கிற உலகத் தத்துவத்தை நம் முன்னோர்கள் ஊருக்கு உரக்கச் சொல்லியிருக் கிறார்கள்.

-தொடரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com