

2018-ம் ஆண்டு இறுதியில் வெளியான கன்னடத் திரைப்படம் கே.ஜி.எப். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதில் அகீரா என்ற முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இவரது காட்சிகள் பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் மற்றொரு அங்கமாக விளங்கும் டோலிவுட்டிலும், சஞ்சய்தத்தை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. அது தற்போது கைகூடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் தற்போது சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. கீதா கோவிந்தம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த பரசுராம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் பொங்கலை (மகர சங்கராந்தி) முன்னிட்டு வெளியிடப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக மகேஷ்பாபு, அத்தாரின்டிக்கி தாரெதி, அலா வைகுண்டபுரமுலோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே, நபா நடேஷ் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.