

வாலிப பருவத்தில் துள்ளி விளையாடி சாதனைகள் பல புரிந்தாலும், முதுமையில் அவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம். பல்வேறு நோய் களையும், உடல் தள்ளாட்டத்தையும் அவர்கள் எதிர்கொண்டு வாழவேண்டியது இருக்கிறது. முதுமையில் பலரும் மருத்துவமனைகளில் அடைக்கலமாக வேண்டியதிருக்கிறது. இதுதான் முதுமையின் விதியாக இருந்தாலும், இதை முறியடித்துக்கொண்டு வாழ்க்கையில் சாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனஉறுதியாலும், உடற்பயிற்சியாலும் அவர்கள் நிமிர்ந்து நின்று சாதனைகளுக்கே சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பவர், செல்வராஜ்.
72 வயதான இவர், சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த உலக அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார். ஈட்டி வீசுதல், குண்டு எறிதல் போன்ற வைகளில் தனது திறமையை நிரூபித்து, தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். செல்வராஜ், நாகர்கோவில் புன்னைநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மனைவி எலிசபெத் ராணி. 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
போட்டிகளுக்காக இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து, தனது திறமையை நிரூபித்து 4 பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமைதேடி தந்திருக்கும் இவர், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம்கொண்டவர். மாலை நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம், முதுமையில் பதித்த முத்திரைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு கலந்துரையாடினோம்!
நான் பள்ளிக் கல்வியை புன்னைநகர் ஆர்.சி.தொடக்கப்பள்ளியிலும் பின்பு கார்மல் பள்ளியிலும் படித்தேன். பி.யூ.சி. படிப்பை இந்து கல்லூரி யிலும், உயர்கல்வியை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் முடித்தேன். பள்ளிப் பருவத்தின்போதே எனக்கு கால்பந்து போட்டி யில் ஆர்வம் உண்டு. கல்லூரி காலத்தில்தான் எனக்கு தனிநபர் போட்டிகளில் சாதிக்கும் எண்ணம் உருவானது. அதனால் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் பங்குபெற்றேன்.
நான் தனிநபர் போட்டிகளில் பங்குபெற போலீஸ்காரர் ஒருவர்தான் தூண்டுகோலாக இருந்தார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் என்னிடம், உன்னிடம் நிறைய திறமை இருக்கிறது. நீ குழு போட்டிகளில் கலந்துகொண்டு உன் திறமையை காட்டுவதைவிட தனிநபர் போட்டிகளில் கலந்துகொள். அதன் மூலம் நீ வெற்றிகளை முழுமையாக ருசிக்க முடியும் என்றார். அதை நான் வேதவாக்காக ஏற்றுக்கொண்டு ஈட்டி எறிதலிலும், குண்டுவீசுவதிலும் முழுமூச்சாக ஈடுபடத்தொடங்கினேன் என்கிறார்.
கல்லூரியில் படிக்கும்போது பல் கலைக்கழக அளவில் ஈட்டி எறிதலில் முதல் பரிசை பெற்றதுதான் செல்வராஜின் முதல் சாதனை. அதன் பின்பும் சாதனைகள் தொடர, அதை அடிப்படையாகக்கொண்டு சிறப்பு தகுதி அடிப்படையில் அரசு போக்கு வரத்து கழகத்தில் அலுவலக ஊழியர் பணி கிடைத்திருக்கிறது. அதன் பிறகும் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
2005-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 2-வது பரிசை பெற்று, அவர் பணி ஓய்வு பெறும் காலகட்டத்தில் வெளிநாட்டில் முதல் முத்திரையை பதித்தார். அடுத்து இலங்கையில் குண்டு எறிதலிலும், ஈட்டி எறிதலிலும் பதக்கங்கள் பெற்றார். செல்வராஜ் பல்வேறு நாடுகளில் 20-க் கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஈட்டி எறிதல் போட்டியில் கிடைத்தவை.
நான் விளையாட்டில் வென்று வெற்றிகளை குவிப்பதற்கு என் மனைவி பக்கபலமாக இருக்கிறார். நான் போட்டிகளில் வெல்லும் பதக்கங்களை அவர் பொக்கிஷமாக பாதுகாக்கிறார். இப்போதும் அவைகளை பார்த்து ரசித்து, எனக்கு ஊக்கம் தந்துகொண்டே இருக்கிறார் என்று, செல்வராஜ் தனது மனைவியை புகழ்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பணி ஓய்வுக்கு பிறகு சராசரியாக பெரும்பாலான முதியோர்களுக்கு ஏற்படுவதுபோல் இவருக்கும் அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூன்று முறை ஆபரேஷன் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் என்னை விளையாட அனுமதிக்கவில்லை. நானும் உடல்நிலை கருதி பத்து ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தேன். ஆனாலும் தொடர்ந்து இயன்ற அளவு உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். உடல்நிலை ஓரளவு சீரானதும், 2016-ம் ஆண்டு மீண்டும் மூத்தோர் தடகள போட்டியில் குதித்தேன். அதற்கு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டினார்கள் என்கிறார்.
வாட்டிய முதுமையையும், உடல்நிலை பாதிப்பையும் ஓரம்கட்டிவிட்டு கடந்த மாதம் மலேசியாவில் நடந்த உலக தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த 36 பேருடன் பங்கேற்றார். அதில் தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டி ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கத்தையும், குண்டு எறிதலில் தங்க பதக்கத்தையும் வென்று அசத்தினார். தொடர்ந்து இந்தோனேசியாவில் நடந்த போட்டியிலும் இடம் பிடித்து குண்டு வீசுவதிலும், ஈட்டி எறிதலிலும் தங்க பதக்கங்களை கைப்பற்றி சிகரத்தை தொட்டிருக் கிறார்.
சாதனையாளரான செல்வராஜ் முதியோர்களுக்கு சொல்லும் ஆலோசனை என்ன தெரியுமா?
முதுமை, உடல்நிலை பாதிப்பு பற்றி கவலைபட்டுக் கொண்டிருந்தால், அதற்கு விடை கிடைக்காது. முதுமையும், நோயும் வரத்தான் செய்யும். அதனை வென்று முதியவர்கள் அனைவரும் சாதனை படைக்க முன்வர வேண்டும். உடலுக்கு தகுந்த உணவினை உட்கொள்ளவேண்டும். தினமும் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவேண்டும். முதியோர்கள் கவலைகளை சுமக்கும் கூடாரமாக உடலை மாற்றிவிடக்கூடாது. முதியவர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்கிறார், செல்வராஜ்.