பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு கிடையாதா?

திருச்சி, சமயபுரம் டோல்கேட் பிரதான சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகம் தொடர்பான அச்சத்தை எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு கிடையாதா?
Published on

பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் மற்றும் நகைகளின் பாதுகாப்பு கருதி, அதனை தங்கள் வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பில்லை என கருதி தான் வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகத்தை நாடி வருகிறார்கள். இதனை உணர்ந்து தான் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டக வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மேலும் இந்த பாதுகாப்பு பெட்டகத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் மாதந்திர அல்லது வருடாந்திர கட்டணத்தை வங்கிகள் வசூலித்துக்கொள்கின்றனர். இவ்வாறு மாத, வருட கட்டணம் செலுத்தி வங்கி பெட்டகத்தில் தான் பொருட்களை வைக்க வேண்டுமா என நீங்கள் சாதாரணமாக கேள்வி கேட்டால், அதில் எவ்வித நியாயமும் இல்லை. ஏனென்றால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் பொருளின் மதிப்பு மற்றும் அதன் மேலான உழைப்பு அபரிவிதமானது. மேலும் நம் நாட்டில் நடக்கும் துர் சம்பவத்தின் காரணமாகவும், அதன் பெயரிலான பொதுமக்களின் இயல்பான பயமும் கூடதான். பொதுமக்களை வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகத்தின் பால் உந்தப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாவலனாக கருத்தப்படும் வங்கிகளும், அதன் பாதுகாப்பு பெட்டகமும் எந்த அளவிற்கு திட்டமிட்டு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தரமான இரும்பு கதவுகள் அலாரம், சி.சி.டி.வி. கேமரா மட்டும் போதாது என்பது தமிழகத்தில் இதற்கு முன் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் கோடிட்டு காட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போதைய திருச்சி, சமயபுரம் டோல்கேட் கொள்ளை சம்பவமும் இதனையே உணர்த்துகிறது. ஒரு பிரதான சாலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் ஒருவன், சினிமாவில் வருவது போல் பபூன் வேடமிட்டு தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவான் என நாம் கேள்வி கேட்டால் வங்கி அதிகாரிகள் கோபப்படுவார்கள். மேலும் அனைத்து பாதுகாப்பு அம்சமும் வங்கியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தங்களது விளக்கத்தை தெரிவிப்பார்கள்.

நியாயம் தான். இன்று பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளரின் பணம், நகை மற்றும் ஆவணங்கள் மட்டுமல்லாது, வங்கியின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையும் கொள்ளை போய் உள்ளது என்பது எதார்த்த உண்மை. வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி பிரதான சாலையில் அமைவதையும், தங்கள் அதிகாரிகள் வசதிக்கு ஏற்ப தனியார் கட்டிடங்களில் அமைப்பதிலேயே ஆவலாக இருந்து பொதுமக்களின் பொருட்களுக்கு பாதுகாப்பை சிந்திக்க மறந்ததற்கான அபராதம் இன்று அப்பாவி பொதுமக்களின் 4 கிலோ தங்கம், பல லட்சம் பணம் மற்றும் ஆவணம், வங்கியின் நன்மதிப்பு கொள்ளை போய் உள்ளது. ஆனால் இதற்கான இழப்பீட்டை வங்கிகள் ஏற்றுக்கொள்ளுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் வங்கி எக்காலத்திலும் பொறுப்பேற்காது என்ற விதி வேறு. இனி வங்கி அதிகாரிகள் காவல்துறையில் புகார் கொடுப்பார்கள். இனி காவல்துறை தான் பதில் சொல்ல வேண்டும் என்பது அடுத்த நிகழ்வு என்பதால் காவல்துறை பக்கம் நமது பார்வையை செலுத்துவோம்.

ஒரு பகுதியில் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக கொலை, அடிதடி சம்பவம் நடைபெற்றால், அதனை காவல்துறையால் சம்பவம் நடக்கும் முன்பாக தடுக்க முடியாது. ஆனால் தண்டிக்க முடியும். இதுவே ஒரு பகுதியில் கொள்ளை உள்ளிட்ட திருட்டு சம்பவம் நடைபெறுகிறது என்றால், அதனை காவல்துறை தடுக்க முடியும். எப்படி என்றால் தீவிரமான கண்காணிப்பு மற்றும் ரோந்தின் காரணமாக தடுக்க முடியும். மேலும் பூட்டிய வீடு, விடுமுறை விடப்பட்ட அலுவலகம் என்ற வகையில் வங்கியும் இந்த வரிசையில் உள்ளடங்கியது தான்.

மேலும் காவல்துறை குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்தை தீவிரப்படுத்த தவறியதன் வெளிப்பாடு ஜனவரி மாதத்தில் திருச்சி, உப்பிலியாபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மேலும் திருச்சி, சமயபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியும், திருச்சி, மண்ணச்சநல்லூர் கொசமட்டம் அடகு கடையில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. இவ்வளவு ஏன் கடந்த 2013-ம் ஆண்டு தற்போது கொள்ளை நடந்த வங்கியின் ஏ.டி.எம்.மில் சுமார் 26 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் இதில் கடந்த இரண்டாண்டுக்கு முன்பாக ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்ற கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக திருச்சி சமயபுரம், மண்ணச்சநல்லூர், உப்பிலியாபுரம் என வங்கிகளை குறிவைத்து திட்டமிட்ட கொள்ளையர்களின் திட்டம், இறுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தான் தோன்றுகிறது.

முதல் சம்பவத்திலேயே காவல்துறை தனது பார்வையையும், வாகன சோதனை உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய பிடியை இறுக்கியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த கொள்ளை சம்பவம் வங்கியையும், குறிப்பாக அதன் லாக்கர் அமைந்துள்ள இடத்தை நேரில் பார்த்த நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது புலனாகிறது. ஏனெனில் லாக்கர் அமைந்துள்ள இடத்தில் எந்த பக்கத்தில் துளையிட்டால், லாவகமாக லாக்கர் உள்ள அறைக்கு செல்ல முடியும் என்பதை திட்டமிட்டு, அதனை வெளிப்புறமாக மார்க் செய்து கொள்ளையர்கள் துளையிட்டு வங்கிக்குள் சென்றுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

அதே போன்று வங்கி அலாரம், சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க் கழற்றப்பட்ட விதம் உள்ளிட்டவை சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. ஏனெனில் வங்கி லாக்கர் மற்றும் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்த நபரின் உதவியில்லாமல் இந்த கொள்ளையை அரங்கேற்ற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே அனைத்து வங்கி நிர்வாகமும் தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பெட்டகம் தொடர்பாக, பாதுகாப்பு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், குறிப்பாக விடுமுறை காலங்களில் உரிய பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். காவல்துறையும் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றப்பிரிவு காவலர்களை அதிக எண்ணிக்கையில் பணி அமர்த்துவதுடன், குற்றப்பிரிவு காவல்களுக்கு வேறு பணிகளை ஒதுக்காமல், நவீன பயிற்சி மற்றும் உபகரணங்களுடன் நாடு தழுவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இனி தனது காவல் எல்லையில் பூட்டிய வீட்டில், அலுவலகத்தில் குற்ற சம்பவம் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிஷோர்குமார், வக்கீல், திருச்சி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com