

யோகா மீது நாட்டம் இல்லாமல் இருந்தவர்களையும் அந்த பயிற்சி மீது ஆர்வம் கொள்ள வைத்திருக்கிறது. அவரது பெயர் அர்பிதா ராய். மேற்குவங்காள மாநிலத்திலுள்ள பாராக்பூர் பகுதியை சேர்ந்தவர். 20 வயது வரை அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் கடந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி அர்பிதா, தனது தோழியுடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருக் கிறார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார்கள்.
அர்பிதாவின் இரு கால்களிலும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவை சிதைந்து போனது. ரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த இடத்திற்கு எதிரே மருத்துவமனை இருந்திருக்கிறது. அங்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அர்பிதா, ஆபத்தான நிலையில் இருந்ததால் கொல்கத்தாவிலுள்ள உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துமனைக்குஅவரை கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு கால்களை காப்பாற்றுவதற்கு உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.
ஆனால் குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாக உடனே அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போனது. தனது வாழ்க்கையை புரட்டிபோட்ட அந்த சோக சம்பவத்தை நினைவு கூர்கிறார்.
எங்களிடம் போதுமான பணம் இருந்திருந்தால், என் கால்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அந்த கசப்பான மாத்திரையை விழுங்கி யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டேன். கடுமையான பாக்டீரியா தொற்று காரணமாக கால்களில் உள்ள உடல் திசுக்கள் இறக்க தொடங்கின. கேங்கிரீன் எனும் இந்த வகை திசு பாதிப்பால் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றேன் என்கிறார்.
உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனதால் செயற்கை கால்களை நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அபிர்தா தன் முழு நம்பிக்கையையும் செயற்கை கால்கள் மீது வைத்திருக்கிறார். தன்னால் மீண்டும் நடக்க முடியும் என்ற மன வலிமைதான் செயற்கை கால்களையும் இயங்க வைத்திருக்கிறது. ஆனால் மூட்டுகள் மீது முழு சுமையையும் திணிப்பது கடினமான செயலாக இருந்திருக்கிறது. சிகிச்சையின்போது சேதமடைந்த பகுதியில் மற்ற பகுதியில் உள்ள தசைகளை வைத்து தைத்திருக்கிறார்கள். இந்த நடைமுறையின் காரணமாக தினமும் ஒரு மணிநேரம் நிற்கும் பயிற்சி மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் அறி வுறுத்தி இருக்கிறார்கள்.
செயற்கை கால்களுடன் நிற்கும் முயற்சி என்பது மிகவும் கொடூரமான பயிற்சி முறையாகும். அப்போது உடலில் வெளிப்படும் வலியை வார்த்தை களால் விவரிக்க முடியாது. யாரோ காலை வெட்டுவது போலவோ அல்லது நெருப்பில் எரிப்பது போலவோ உணர்ந்தேன் என்பவர் வலியை சகித்துக்கொண்டு பயிற்சி செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு மெல்ல மெல்ல நடப்பதற்கு பழகி இருக்கிறார். இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்ற வைராக்கியம்தான் அவரை நடை பயில வைத்திருக்கிறது.
என் சகோதரரின் வருமானத்தை நம்பித்தான் குடும்ப செலவுகள் நடந்தது. ஏற்கனவே எனக்கு நிறைய மருத்துவ செலவுகளை செய்துவிட்டார். இதையெல்லாம் கடந்து அக்கம் பக்கத்தினர் நான் வீட்டுக்கு சுமையாக இருப்பதாக ஏளனமாக பார்த்தார்கள். அதனால் வேலைக்கு செல்ல விரும்பினேன். அதற்காக எவ்வளவு தூரமும் பயணிக்க தயாராக இருந்தேன் என்பவர் கால் சென்டர் வேலையில் சேர்ந்திருக்கிறார்.
அங்கு ஆரம்ப நாட்கள் கடினமாக இருந்திருக்கிறது. அதனை சமாளித்தபடி இரண்டரை ஆண்டுகள் வேலையில் தொடர்ந்திருக்கிறார். செயற்கை கால்கள் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் சுமப்பதற்கு ஏற்ப உடல் எடையை சீராக பரா மரிக்க வேண்டியிருந்திருக்கிறது.அதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டவரின் கவனம் யோகா மீது திரும்பி இருக்கிறது. அது உடலையும், மனதையும் இலகுவாக கையாளும் பயிற்சியாக அமைந்திருந்ததால் அதில் முழு ஈடுபாடு காண்பிக்க தொடங்கி இருக்கிறார்.