

திருடர்களோடு போராடிய அந்த அதிரடி சண்டைக்காட்சியில் கதா நாயகியாக ஜொலித்தவர் 65 வயது செந்தாமரைதான். இருப்பதை எல்லாம் எடுத்துக்குங்க.. என் கணவரை மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க என்று திருடர்களிடம் கெஞ்சாமல், அடேய் உங்களை காலிபண்ணிட்டுதான்டா அடுத்தவேலை.. என்று ஆவேசமாக களத்தில் இறங்கி அதிரடியாக தாக்குதல் நடத்தி, அவர்களை ஓடவைத்து பெண்குலத்திற்கே வீரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகிவிட்டார்.
தமிழக அரசின் அதீத துணிச்சலுக்கான விருதைபெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் செந்தாமரையுடன் நமது சிறப்பு பேட்டி:
உங்கள் பெற்றோர், பிறந்த ஊர், குடும்ப பின்னணி பற்றி கூறுங்கள்?
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி என்ற கிராமத்தில் பிறந்தேன். எனது தந்தை பெயர் சுடலைமுத்து நாடார், தாயார் பெயர் ராமசுந்தரவடிவு. என் பெற்றோருக்கு நாங்கள் பத்து பிள்ளைகள். நான் அவர்களுக்கு 2-வது குழந்தையாக பிறந்தேன். எனது தந்தை மேல கிருஷ்ணபேரியில் 10 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனது தாத்தா வேலாயுத நாடாரும் அதே பஞ்சாயத்தில் 20 ஆண்டுகள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அவரும் போட்டியின்றிதான் தேர்வு செய்யப்பட்டார்.
சிறுவயதிலேயே நீங்கள் தைரியமான பெண் தானா? இளம் பருவத்திலே உங்கள் தைரியத்தை நிரூபித்த சம்பவம் ஏதாவது இருக்கிறதா?
ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். சிறு வயதிலேயே தைரியமான பெண் தான். ஆனால் எனது தைரியத்தை நிரூபிக்கும் அளவுக்கு சிறுவயதில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.
பள்ளிப் பருவத்தில் விளையாட்டுத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா?
சிறு வயதில் விளையாடுவேன். ஆனால் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டதில்லை. வயல்களில் வேலை செய்ததால் உடல் வலுவாக இருக்கிறது.
சிறுவயதில் திருடர்களை பற்றி உங்கள் கற்பனை எப்படி இருந்தது? திருடர்களை நினைத்து பயந்ததுண்டா?
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அங்கு திருடர்கள் பயம் கிடையாது. வெளியூரில் இருந்து யாராவது எங்கள் ஊருக்கு வந்தால், யார்? எந்த வீட்டுக்கு வந்து இருக்கிறார் என்று விசாரிப்பார்கள். அதனால் திருடர்கள் வரமாட்டார்கள். நான் சிறு வயதிலேயே திருடர்களை பார்த்து பயந்ததில்லை. நான் தைரியமான பெண்ணாக வளர்க்கப்பட்டேன். எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கான வரவு, செலவு கணக்குகளை நான் தான் கவனித்து வந்தேன்.
இன்றைய வீரம் உங்கள் அம்மாவிடம் இருந்து வந்ததா? உங்கள் அம்மாவின் தைரியத்திற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்?
எனது பெற்றோர் தைரியமானவர்கள் தான். 10 பிள்ளைகளையும் பெற்று வளர்த்து ஆளாக்கினார்கள். அவர்கள் கொடுத்த பெரிய சொத்து தைரியம்தான். எனது தைரியத்திற்கு காரணம் பெற்றோர்தான்.
எத்தனை வயதில் உங்களுக்கு திருமணம் நடந்தது? அது பற்றி விளக்கமாக சொல்லுங்கள்?
உங்கள் இருவரில் யார் அதிக துணிச்சல்மிக்கவர்?
நாங்கள் 2 பேரும் தைரியமானவர்கள் தான். அப்படி தைரியம் இருப்பதால் தான் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகிறோம்.
குழந்தைகளை கர்ப்பத்தில் சுமப்பது, பிரசவிப்பது, குடும்பத்தை தனியாக நிர்வகிப்பது போன்ற செயல்களால் பெண்கள், ஆண்களைவிட மனதளவில் பலமானவர்கள் என்பது உண்மைதானே?
மனதளவில் பெண்கள் பலமானவர்கள் என்பதை மறுக்கமுடியாது. பிரசவத்தின்போது பெண் மறு பிறவி எடுக்கிறாள். குடும்பத்தையும் பெண்கள் நிர்வாகம் செய்தால்தான் சிறப்பாக இருக்கும். அதற்காக ஆண்களை பலவீனமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆண்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பெண்களால் எந்த காரியத்தையும் சிறப்பாக நிறைவேற்ற முடியாது.
உங்கள் மகள் பெயர் என்ன? அவரை நீங்கள் எப்படி தைரியமூட்டி வளர்த்தீர்கள்? இந்த சம்பவத்தை சி.சி.டி.வி.யில் பார்த்ததும் உங்கள் மகள் என்ன சொன்னார்?
எனக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் அசோக் எம்.பி.ஏ. படித்துவிட்டு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்கிறான். மற்றொரு மகன் ஆனந்த் எம்.எஸ்சி. ஐ.டி. படித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றுகிறான். மகள் ஜெயலட்சுமி எம்.எஸ்சி., எம்.பில். படித்துள்ளாள். கணவருடன் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறாள். அவள் தைரியமான பெண் தான். அதனால் தான் வெளிநாட்டில் குடும்பத்துடன் 10 ஆண்டுகள் வசித்து வருகிறாள். நான் திருடனுடன் போராடிய காட்சியை சமூகவலை தளத்தில் பார்த்துவிட்டு கதறி அழுதாள். நான் அவளிடம் பயப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை. நீ தைரியமாக இரு என்று கூறினேன்.
இந்த மாதிரி ஒரு கொள்ளை முயற்சி நடந்தால் உங்கள் மகளும் இதுபோல் எதிர்தாக்குதல் நடத்துவார் என்று நம்புகிறீர்களா?
கண்டிப்பாக எதிர் தாக்குதல் நடத்துவாள். அந்த அளவுக்கு அவளை நான் தைரியமாக தான் வளர்த்துள்ளேன்.
இதற்கு முன்பு இந்த தோட்டப் பகுதியில் எந்த மாதிரியான திருட்டு முயற்சிகள் நடந்துள்ளன?
எங்கள் வீட்டை சுற்றியிருக்கும் தோட்டம் 5 ஏக்கர்கொண்டது. அதில் எலுமிச்சை, தென்னை, மா, பலா போன்றவை உள்ளன. தோட்டத்தில் இறங்கி மாங்காய் திருட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஒருசிலர் வருவார்கள். அவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளோம். எச்சரித்து அனுப்பியுள்ளோம். சிலரை பிடித்து போலீசிலும் ஒப்படைத்துள்ளோம். அதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
அந்த சம்பவங்கள்தான் இந்த எதிர்தாக்கு தலுக்கு தேவையான தைரியத்தை உங்களுக்கு தந்தது என்று சொல்லலாமா?
இது இயற்கையிலேயே வந்த தைரியம். கண்முன் கணவர் தாக்கப்படுவதை பார்த்து எந்த பெண் சும்மா இருப்பாள். அதனால் தான் எதிர்தாக்குதல் நடத்தினேன்.
பெண்களுக்கு தற்காப்புகலை அவசியம் என்று கருதுகிறீர்களா?
அவசியம் தான். இந்த காலத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. பெண்கள் தன்னை பாதுகாக்க ஏதாவது தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும். எனது மகள் தோக்வண்டோ பயிற்சி பெற்றுள்ளாள். எந்த சூழ்நிலையிலும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்வாள்.
ஒரே நாள் இரவில் நீங்கள் இந்தியா முழுவதும், துணிச்சலான கதாநாயகி ஆகிவிட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுக்கு விளம்பரம் ஆனதற்கு மீடியாக்கள்தான் காரணம். சுடச்சுட அந்த சம்பவத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள். வாட்ஸ்- அப், முகநூலிலும் இந்த சம்பவம் பதி விடப்பட்டது. அதைபார்த்து பல தலைவர்கள், பிரபலங்கள் பாராட்டினார்கள். அதற்காக மீடியாக் களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
திருடர்களை பற்றி உங்களது பொதுவான கருத்து என்ன? அவர்கள் பலமானவர்களா? பலவீனமானவர்களா?
திருடர்களை முதலில் பார்க்கும் போது அவர்கள் பலமானவர்கள்போல் தெரியும். நாம் எதிர்தாக்குதல் நடத்தும்போது அவர்கள் பலவீனமானவர்களாக ஆகி விடுவார்கள். அதனால் இத்தகைய நெருக்கடிகள் ஏற்படும்போது நாம் எதிர்தாக்குதல் நடத்தும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கணவரை இந்த திருடர்கள் இருவரும் தாக்குவதை பார்த்த உடன் உங்கள் மனதில் என்ன தோன்றியது?
எனது கணவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்தவர். திருடர்கள் எனது கணவரை தாக்கியதை பார்த்ததும் எனது நெஞ்சு பதறிவிட்டது. உடனே செயலில் இறங்கிவிட்டேன்.
அவர்களை தாக்கித் துரத்த முடியும் என்ற தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது?
எனக்கு தைரியம் இல்லாவிட்டால், தனியாக கணவருடன் பண்ணை வீட்டில் வசிக்க முடியுமா! தோட்டத்தில் ஏதாவது சத்தம் கேட்டாலே தனியாக ஓடிப் போய் பார்ப்பேன். திருடர்கள் நுழைந்தால் அவர்களை மடக்கிப்பிடித்து கட்டிப்போட வேண்டும் என்று நினைப்பேன். அந்த தைரியத்தில்தான் தாக்குதல் தொடுத்தேன்.
இப்படி எதிர்தாக்குதல் நடத்தினால்தான் திருட்டை ஒழிக்க முடியும் என்று கருதுகிறீர் களா?
ஆமாம். திருடர்களை எதிர்த்து போராடக்கூடிய மனப்பக்குவம் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும். பெண்கள் தைரியமாக இருந்தால்தான் நகை பறிப்பு சம்பவங்கள் குறையும்.
இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையில் சில பெண்கள், கழுத்தில் கிடப்பதை கழற்றிக்கொடுத்து, திருடர்களிடம் சமாதானமாகப்போய் கணவரை காப்பாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள் அல்லவா?
கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சில பெண்கள் நகையை கழற்றி கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அந்த சூழ் நிலையிலும் கணவனும், மனைவியும் இணைந்து போராட வேண்டும். சமாதானமாகப் போனால் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும். இப்படி அதிரடியாக செயல்பட்டால்தான் திருடர்கள் பயப்படுவார்கள். கொள்ளை சம்பவங்கள் குறையும்.
அந்த இரண்டு திருடர்களையும் போலீஸ் பிடித்த பின்பு, அவர்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் அவர்களிடம் என்ன சொல்வீர்கள்?
(பதில்: அடுத்த வாரம்)