இயற்கையை விரும்பும் இளைஞர் சித்தார்த்

ஐ.ஐ.டி. ஆர்வலராக இருந்து, எளிய விவசாயியாக மாறியிருக்கிறார் இளைஞர் சித்தார்த்.
இயற்கையை விரும்பும் இளைஞர் சித்தார்த்
Published on

நகரின் பரபரப்பான வாழ்க்கையில்இருந்து விலகி, பண்ணையில் வாழ்ந்து கொண்டே இயற்கை உணவை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார், 25 வயது சித்தார்த் குபாவத். குஜராத் மாநிலத்திலுள்ள ஜுனாகத் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த அவர், ஐ.ஐ.டி.யில் சேர விரும்பினார். ஆனால் இப்போது ஐ.ஐ.டி. ஆர்வலராக இருந்து, எளிய விவசாயியாக மாறியிருக்கிறார்.

தமது அனுபவங்களை சித்தார்த் பகிர்கிறார்…

''பறவைகளின் சத்தம் தான் இந்த நாட்களில் என் அலாரம். வாழ்க்கை மெதுவாகவும், அமைதியாகவும் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை நான் தேடிக் கொண்டிருந்தேன். அந்த நோக்கம் விவசாயமாக இருந்தது. இயற்கையுடன் நெருக்கமாக வாழும்போது மகிழ்ச்சியைக் கண்டேன். இயற்கையோடு வாழவும், என்னைப் போன்ற இளைஞர்கள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும் விவசாயத்தை தொடங்கினேன்.

இவை அனைத்தும் ஓர் எளிமையான வாழ்க்கை முறையை ஆராய்வதற்கான யோசனையுடன் தொடங்கியது. ஆசைப்பட்டபடி ஐ.ஐ.டி.யில் சேர படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என் வாழ்நாளில் அதை ஒரு நிமிடம் கூடச் செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். இது போன்ற கல்வி நிறுவனங்கள் மனிதர்களை விட அறிவியலாளர்களை உற்பத்தி செய்கின்றன என்று நான் உணர்ந்தேன். ஆனால் எனக்கு இயல்பான மனிதர்களை போலவே ஆசை இருக்கிறது. அதனால் ஐ.ஐ.டி.யில் சேரும் எண்ணத்தைக் கை விட்டேன். எதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டறிய ஓராண்டு ஆனது. ஒரு நாள் நான் இயற்கை விவசாயப் பட்டறைக்குச் சென்றபோது தான், விவசாயம் என்பது ஆராய்வதற்கு ஒரு பரந்த பகுதி என்பதை உணர்ந்தேன்.

என்னைக் கண்டுபிடிக்க இது எனக்கு உதவும் என்ற நம்பிக்கையை அளித்தது. விவசாயம் எனக்கு உத்வேகம் அளித்தது. அதன்மூலம் வாழ்க்கையை நடத்த முடிவு செய்தேன். அதன்படி, 2020-ல் கிர் காட்டு பகுதிக்கு அருகே விவசாய நிலத்தை வாங்கினேன்.

புவி வெப்பமடைதல் மற்றும் ரசாயனம் கலந்த உணவுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்படுகிறோம். இயற்கை நமக்குக் கொடுத்ததைப் பயன்படுத்தி அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

ஆரோக்கியமாகச் சாப்பிடுவதும், ஆரோக்கியமாக இருப்பதும் தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்துகிறது. மண் வீடுகளைப் பண்ணைக்குள் அமைத்து வருகிறோம். அதன்பின் மண் வீட்டில் வசிப்பேன்.

இன்றைக்கு என் வாழ்க்கை அழகாக இருக்கிறது, நான் பறவைகளின் ஒலி மற்றும் சூரிய ஒளியுடன் எழுந்திருக்கிறேன். எனக்குத் தேவையான எல்லாம் இங்கு இருக்கும் போது, வேறு எங்காவது வாழ்வதற்கு நான் ஒருபோதும் ஏங்கப் போவதில்லை'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com