பலகாரங்களும்.. பூர்வீகமும்..

நாம் விரும்பி ருசிக்கும் சில வகை உணவுகள், பலகாரங்கள் வேறு நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. இங்குள்ள மன்னர்கள் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு விரும்பி ருசித்தவைகளை அறிமுகப்படுத்தினார்கள்.
பலகாரங்களும்.. பூர்வீகமும்..
Published on

அதுபோல வெளிநாட்டினர் இங்கு வந்தபோது தங்களுக்கு பிடித்தமான உணவுகளின் மூலப் பொருட்களை கையோடு எடுத்துச் சென்று அங்கே அறிமுகப்படுத்தினார்கள். அவைகளின் சுவையும், ருசியும் நிரந்தரமாக நம்மை விட்டு நீங்காமல் புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய உணவு பலகாரங்கள்:

சமோசாவின் பூர்வீகம், மத்திய ஆசியா. அங்கு சம்புசக் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதில் இறைச்சி வகைகள்தான் இடம் பிடித்திருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் சமோசாவில் உருளைக் கிழங்குதான் முதன்மையாக இடம்பிடித்தி ருக்கிறது. இந்தியாவில் சில இடங்களில் சமோசா வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதன் வடிவமும் சற்று மாறுதலாக இருக்கிறது.

சமையலில் உருளைக்கிழங்கு தவிர்க்க முடியாத பொருளாக இடம் பிடித்திருக்கிறது. அதன் தாயகம் மெக்சிகோ. அங்கு உள்ளவர்களை விட இந்தியர்கள்தான் விதவிதமாக சமையலில் உருளைக்கிழங்கை பயன்படுத்து கிறார்கள். குழம்பு, பொரியல், சமோசா, வறுவல், சிப்ஸ் என உருளைக்கிழங்கு பல விதங்களில் பரிமாறப்படுகிறது.

காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. டீயை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் தங்கள் தேவைக்காக அசாமில் தேயிலை தோட்டங்களை உருவாக்கினார்கள். பின்பு அவை இந்தியாவின் பல பகுதிகளில் பயிரிடப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் குலாப் ஜாமுனின் பூர்வீகம் பாரசீகம். ஷாஜஹானின் அரண்மனையில் வேலை பார்த்த சமையல் கலைஞர்களால் இந்தியாவிலும் அது அறிமுகமானது.

ஆப்பிரிக்காதான் காபியின் பூர்வீகம். குறிப்பாக எத்தியோபியா, சூடான் நாடுகளில்தான் ஆரம்பகாலத்தில் அதிகமாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்று மதியாகி இருக்கிறது. ஏமனில் இருந்து 1670-ம் ஆண்டு இந்தியாவிற்குள் காபி அறிமுகமாகி இருக்கிறது.

வட இந்தியாவில் பரவலாக பரிமாறப்படும் ராஜ்மா, மெக்சிகோவில் இருந்து வந்திருக்கிறது. உருளைக்கிழங்கை போல இதுவும் இன்று வட இந்தியர்களின் விருப்பமான உணவாக மாறிப்போய்விட்டது.

ஜிலேபியின் பூர்வீகம் பாரசீகம். பாரசீக மொழி பேசும் நாடுகளில்தான் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. முகலாயர்கள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகமாகி உள்ளது. வட மாநிலங்களில் நடக்கும் விருந்து வைபவங்களில் கட்டாயம் ஜிலேபி இடம் பிடித்துக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com