

மதுரை மற்றும் சின்னாளப்பட்டி பகுதிகளின் பாரம்பரிய அடையாளமான சுங்குடி சேலைகள், மென்மையான பருத்தியில் கைவேலையாகச் செய்யப்பட்ட 'டை அண்ட் டை' (Tie & Dye) மற்றும் மெழுகு வடிவமைப்பு முறைகளால் உருவாகின்றன. உடலுக்குக் குளிர்ச்சியையும், எளிமையான தோற்றத்தையும் தரும் இச்சேலைகள் தமிழகப் பெண்களின் விருப்பமான பாரம்பரிய உடையாகும். இந்த பாரம்பரிய சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதுடன், ரெயில் நிலையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
நூறு ஆண்டு கால வரலாறு கொண்ட சுங்குடி சேலை உற்பத்தியில் சவுராஷ்டிரா இனத்தவர் பின்னணியில் உள்ளனர். 'சுங்கு' என்றால் தெலுங்கில், 'மடிப்பு' என பொருள். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்தும் சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக தகவல்கள் உண்டு.
மதுரை, சின்னாளப்பட்டி உட்பட ஓரிரு இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா சுங்குடி சேலைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். கோராகாட்டன் போன்ற மிக்ஸடு காட்டன் சேலைகள் போலின்றி, சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுங்குடி சேலைகள் வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறார்கள். சுங்குடி சேலைகள் ரூ.150 முதல் 750 வரை விற்பனையாகின்றன. தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது.
சின்னாளபட்டியில் சுங்குடிச்சேலை தயாரிப்பு என்பது பாரம்பரியமிக்க தொழிலாகவே இருந்து வருகிறது. இந்த சேலை தயாரிக்க மொத்தமாக வரவழைக்கப்பட்ட வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர். அச்சு வேலை முடிந்த பின்பு, ஜவ்வரிசி கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர வைக்கின்றனர். சுங்குடிச் சேலை ரெடி. சிங்கிள், டபுள்கலர், முடிச்சு, கல்கட்டா, கைபுட்டா என பல்வேறு வகைகளில் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.
சுங்குடிச்சேலை தயாரிப்பில் கைத்தறியில் சேலை நெசவு முதல் சாயம் ஏற்றுவது, பிரிண்டிங் செய்வது என அனைத்துமே இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல் மனித உழைப்பினால் மட்டுமே நடைபெறுகிறது என்பதால் சேலை தயாரிப்பது முதல் விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் வரை இத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சுங்குடிச்சேலை மட்டுமின்றி சின்னாளப்பட்டி பட்டு சேலைகளும் இங்கு தயாராகிறது.
அடுத்து மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் 400 ஆண்டுகளுக்கு முன் மஸ்லின் நெய்யும் மசூலிப்பட்டினக் கலைஞர்களை தமிழ்நாட்டின் மதுரைக்கு அழைத்து வந்தார். அவர்களே தமிழ்நாட்டின் பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகை இழைகளையும் சேர்த்து சுங்குடி என்ற புதிய துணிவகையை அறிமுகம் செய்தனர் என்பதே இதன் வரலாறு. மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின்னணியில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும்.
ரெயில் நிலையங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரெயில் பயணிகளுக்கு, அந்தந்த ஊரில் தயாராகும் முக்கிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள், விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.