

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பணியாற்றியிருக்கும் பாப்பையாவிடம், பட்டிமன்றம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொள்ள, மதுரையில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம். அவர் பட்டிமன்றத்தின் வரலாறு தொடங்கி, இன்றைய நிலவரம் வரை விளக்கமாக பேசினார். அதை பார்ப்போம்.
* பட்டிமன்ற மேடை, பாப்பையாவிற்கு எப்படி பழக்கமானது?
சிறு வயதில் இருந்தே பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். இருப்பினும் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தான் பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன். எனக்கு பட்டிமன்றங்களில் பேச்சாளராக பங்கேற்பதில் தான் அதிக ஆசை. இருப்பினும் காலம், என்னை நடுவர் இருக்கையில் அமர்த்தியது. ஆரம்பத்தில் மூத்த பேச்சாளர் களின் ஆட்சேபனையை எதிர்கொண்டாலும், மக்களின் ஆதரவு என்னை நடுவர் இருக்கையிலேயே நிரந்தரமாக அமர வைத்தது.
* பட்டிமன்றத்திற்கு என பிரத்யேக வரலாறு இருக்கிறதா?
சங்க காலத்திலேயே பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த காலத்தில் பட்டிமண்டபம் என்ற பெயரில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இலக்கியத்தில் கூறப்பட்ட கருத்துகளை விவாத பொருளாக எடுத்து புலவர்கள் பேசியுள்ளனர். தமிழ் பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில்,
ஒட்டிய சமயத்து உறு பொருள்வாதிகள்
பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
செற்றமும், கலாமும் செய்யாது அகலுமின்
என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அதாவது, சமயம் சார்ந்த பெரியவர்கள் பங்கேற்கும் பட்டிமண்டபத்தில் (பட்டிமன்றத்தில்) கோபப் படாமலும், கலகம் செய்யாமலும் பேச வேண்டும் என்று இந்த பாடல் வரிகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே பட்டிமன்றங்களில் கடும் வாக்குவாதங்கள் எழுந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. அதேபோல மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் பட்டிமன்றம் பற்றி பாடியிருக்கிறார்.
* இதுவரை எத்தனை பட்டிமன்றங்களை வழிநடத்தியிருக்கிறீர்கள்? எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் சென்று பட்டிமன்றங்களை நடத்தியிருக்கிறீர்கள்?
இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசியும், வழி நடத்தியும் இருக்கிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டத்தில் சாம்பியா போன்ற சில நாடுகள், மொரீசியஸ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று பட்டிமன்றங்களை வழிநடத்தி இருக்கிறேன்.
* பட்டிமன்றங்களை, இளைய தலைமுறையினர் ரசிப்பதில்லையே ஏன்?
இதற்கு காலமாற்றம் தான் காரணம். மக்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. சமூக ஊடகங்களின் தாக்கமும் பட்டிமன்றங்களின் மீதான ஆர்வத்தை திசை திருப்புகிறது என நினைக்கிறேன்.
* உங்களது பட்டிமன்ற வழிநடத்துதலை, பிரபலங்கள் பார்த்து வியந்தது உண்டா?. பட்டிமன்றத்தின் மூலம் கிடைத்த பரிசு மற்றும் பட்டங்களை பற்றியும் கூறுங்கள்?
2000-ம் ஆண்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இருந்து கலைமாமணி பட்டம் பெற்றேன். 1998-ம் ஆண்டு முத்தமிழ் பேரவை சார்பில் நடந்த விழாவில் கருணாநிதி பாராட்டி பட்டம் வழங்கினார். அவர் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய பட்டிமன்ற தீர்ப்பை பாராட்டி, புகழ்ந்து பேசினார். இது தவிர, டெல்லி தமிழ்ச்சங்கம் உள்பட ஏராளமான சங்கங்களும் பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கியுள்ளன.
* பட்டிமன்றத்தில் நீங்கள் வழங்கிய தீர்ப்பு, ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட அல்லது பாராட்டப்பட்ட அனுபவங்களை கூறுங்கள்?
பெரும்பாலான பட்டிமன்ற தீர்ப்புகளை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சில தீர்ப்புகளை சிலர் குறை கூறுவார்கள். அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்பேன். ஆனால் அவர்கள் சரியான காரணத்தை இதுவரை கூறவில்லை. என்னுடைய தரப்பு நியாயத்தை விளக்கி கூறினாலும் ஏற்பதில்லை.
* நீங்கள் ஏராளமான பட்டிமன்றங்களுக்கு தீர்ப்பு வழங்கி இருக்கிறீர்கள். ஆனால் உங்களை மிகவும் குழப்பிய, தடுமாற வைத்த பட்டிமன்ற விவாதம் எது?
தீர்ப்பு வழங்குவதில், இதுவரை இரண்டுமுறை மட்டுமே நெருக்கடி நிலவியது. ஒரு குடும்பத்தின் பெருமையை காப்பதில் முதலிடம் வகிப்பது ஆணா? பெண்ணா? கணவனா? மனைவியா? என்ற தலைப்பும், ஒரு ஆணை பெருமைக்குரியவனாக மாற்றுவது தாயா? தாரமா? என்ற தலைப்பும் என்னை வெகுவாக சிந்திக்கவைத்தன. இருப்பினும் என்னுடைய தீர்ப்பு, சில எதிர்ப்புகளை சந்தித்தாலும், பலரது வரவேற்பை பெற்றது.
* பட்டிமன்ற வாழ்க்கையில் உங்களோடு ஏராளமான பேச்சாளர்கள், பயணித்திருக்கிறார்கள். அவர்களில் உங்களுக்கு பிடித்தமான பேச்சாளர்கள் யார்?
நிறைய பேச்சாளர்களின் பேச்சுத்திறன் எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காந்தி மதியம்மாள், பாரதிபாஸ்கர், ராஜா போன்றவர்களின் பேச்சுகளை கூறலாம். இவர்கள் தங்களின் தலைப்புகளுக்கு வலு சேர்க்கும் கருத்துகளை ஆழமாக கூறுவார்கள். இதற்காக தங்களை நன்றாக தயார்படுத்தி வருவார்கள். அவர்களின் பேச்சுக்கு மேல் என்னுடைய கருத்து மேலோங்கி இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.
* பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் இரண்டில் எது சவாலான பணி?
பேச்சாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் பேசிவிட்டு செல்கின்றனர். ஆனால் நடுவரின் பணி என்பது இரு தரப்பு கருத்துகளையும் உள்வாங்கி தீர்ப்பு அளிப்பது. எனவே நடுவரின் பணி தான் மிகவும் சவாலானது.
* பட்டிமன்ற நடுவர் என்பதை தாண்டி பாப்பையாவின் இயல்பான பணி என்ன? அவருக்கு பட்டிமன்றங்களை தவிர வேறு என்ன பிடிக்கும்?
என்னுடைய வழக்கமான பணி என்பது புத்தகங்கள் வாசிப்பது தான். பேராசிரியராக பணியாற்றும் போதே, எனது மனைவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். அதன்படி எனது சம்பளத்தை மனைவியிடம் கொடுத்துவிடுவேன். பட்டிமன்றங்களில் பங்கேற்பதன் மூலமாக கிடைக்கும் தொகையை வைத்து புத்தகங்கள் வாங்கி படிப்பேன். இதுதவிர ஓவிய திறனும் இருந்தது. ஆனால் தற்போது தூரிகை பிடிப்பதை விட்டுவிட்டேன்.
* ஒரு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது அல்லது நடக்கிறது என்றால், அதற்கு பின்னால் நடக்கும் வேலைகள் மற்றும் ஏற்பாடுகளை பற்றி விளக்கமாக கூறுங்கள்?
முதலில் பட்டிமன்றத்துக்கான தலைப்பை தேர்ந்தெடுப்போம். அதன்பின் பேச்சாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான தலைப்பை ஒப்படைப்போம். இந்த பணியை பட்டிமன்ற நடுவர் தான் செய்வார்.
இதுதவிர, பட்டிமன்றத்தில் பேச இருக்கும் கருத்துகளை, முன்கூட்டியே பேசி ஒத்திகை பார்ப்பது இல்லை. ஒத்திகை பார்த்து பட்டிமன்றம் நடத்தினால், அது நாடகமாக மாறிவிடும். ஒரு பேச்சாளர் பேசும்போது அவர் கூறிய கருத்து பற்றி விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் அந்த இடத்தில் நடப்பது தான்.
பட்டிமன்றத்திற்கும், தமிழர்களுக்கும் உள்ள இணக்கம் என்ன?
பட்டிமன்றம், தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. தமிழ் மொழியையும், தமிழர்களையும் தவிர வேறு எங்கும் பட்டிமன்றங்கள் நடத்தப் படுவதில்லை. இன்று பல நாடுகளில் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டாலும், அதை நடத்துவதும், ரசிப்பதும் தமிழர்களாகவே இருப்பார்கள்.