வரிக்குதிரை பற்றி சில தகவல்கள்

பார்ப்பதற்கு குதிரையைப் போலவே இருக்கும் இது, ஒரு பாலூட்டி விலங்கினம்.
வரிக்குதிரை பற்றி சில தகவல்கள்
Published on

உடல் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்டுள்ளதால், இதனை தமிழில் வரிக்குதிரை என்று அழைக்கிறார்கள்.

காட்டில் சுமார் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் வரிக்குதிரையானது, மிருகக்காட்சி சாலையில் கூடுதலாக 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

வரிக்குதிரை, நின்றபடியே தூங்கும் தன்மை கொண்டது. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும்.

நன்கு வளர்ச்சி அடைந்த வரிக்குதிரை, சுமார் 2 மீட்டர் உயரமும், 3 மீட்டர் நீளமும் கொண்டிருக்கும். எடையானது, 250 கிலோ முதல் 500 கிலோ வரை இருக்கும்.

மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வரிக் குதிரை, ஒரு நாளில் சாதாரணமாக 80 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கும்.

மனிதர்களின் கைரேகைக்கு தனித்தன்மை உண்டு. ஒரு வருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு கைரேகைகள் இருக்காது. அதே போலத்தான் வரிக்குதிரையின் உடலில் உள்ள வரிகளும் தனித்தன்மை கொண்டவை. ஒரு வரிக்குதிரைக்கும், மற்றொரு வரிக்குதிரைக்குமான வரிகளில் தனித்துவம் இருக்கும்.

வரிக்குதிரை ஒரு சமூக விலங்காகும். இது கூட்டமாகத்தான் வாழும். வரிக்குதிரையை தனித்து எப்போதும் பார்க்க முடியாது. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட வரிக்குதிரைகள், பெரும்பாலும் புல்வெளிகளில்தான் அதிகமாக காணப்படும். கூட்டமாக புல்மேயும் வேளைகளில் அனைத்து வரிக்குதிரையும் ஒரு திசையில் நின்று புல் சாப்பிட்டால், ஓரிரு குதிரைகள் மட்டும் அதற்கு எதிர் திசையில் நின்று புல் சாப்பிடும். அது ஆபத்து ஏதாவது வருகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக என்கிறார்கள்.

வரிக்குதிரையின் கர்ப்ப காலம் 350 முதல் 390 நாட்கள். பெரும்பாலும் இவை டிசம்பர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில்தான்அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்.

வரிக்குதிரையின் முக்கியமான எதிரிகளாக இருப்பவை, ஆப்பிரிக்க சிங்கம், சிறுத்தைகள், புலிகள், முதலை.

வரிக்குதிரையை, சாதாரணமான குதிரையைப்போல பழக்கப்படுத்துவது முடியாத காரியம் அதற்கான பல முயற்சிகள் தோல்வியையே கண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com