சிட்டுக்குருவி

உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சிட்டுக்குருவி
Published on

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

மேலும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன்பின்னர் இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் ஆகும்.

சிதறும் தானியங்கள், விதைகள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு. சிட்டுக்குருவிகளின் குஞ்சுகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே உணவாக உட்கொள்கின்றன. முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். தற்போது விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக சிட்டுக்குருவிகளின் சந்ததிகளும் அழிகிறது. மேலும் செல்பேன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சுகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை பதம் பார்த்து விடுகிறது.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். எனவே சிட்டுக்குருவிக்கு தானியம், தண்ணீர், தங்க சிறிய இடம் மற்றும் முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து கொடுப்போம். அவ்வாறு செய்தால் சின்னச் சிங்காரத் தேவதைகள் நம் வீட்டுக் கதவைத் தட்டும். நமது குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை சிட்டுக்குருவிகள் கொண்டு வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com