

புதுடெல்லி
உலக சுகாதார தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்தியர்களின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் மெட்ரோ நகரங்கள் மற்றும் அடுத்தடுத்த நிலையில் உள்ள 3 நகரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. ஏறக்குறைய 5 ஆயிரம் தனிநபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சி முடிவுகள் வெளிவந்தன. என்னவென்றால், இந்தியர்கள் தங்களுடைய வீட்டுவேலைகளை கவனிப்பதிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
எல்லோரும் தினசரி செய்ய கூடிய விசயத்தில் என்ன விசேஷம் உள்ளது? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், வீட்டு வேலைகளிலேயே மூழ்கி போய், தங்களுடைய உடற்பயிற்சி, தூக்கம் போன்றவற்றுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தில் இருந்து தவறி விடுகின்றனர்.
தூக்கத்தில் சமரசம் செய்து கொள்ளும்போது, ஆரோக்கியத்திற்கான முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இதுபற்றிய ஆய்வில், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை ஆகியவற்றில் பெரிய இடைவெளி இருப்பதும், அது அதிகரித்து வருவதும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
பரபரப்பான காலகட்டத்தில் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் அதனை ஒதுக்கி விடுகிறோம் என்று 42.5 சதவீத இந்தியர்கள் உண்மையை ஒப்பு கொண்டுள்ளனர். 57.8 சதவீதத்தினரோ, எங்களுக்கு நல்லது எவை என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவற்றை முறையாக பின்பற்றுவதில் தோற்று போய் விடுகிறோம் என கூறியுள்ளனர்.
46 சதவீதத்தினர் உடலை முறையாக பராமரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதனை தொடர்ந்து மேற்கொள்வதில் தவறி விடுகின்றனர். இதனால், இந்தியர்களின் முன் உள்ள சவாலானது விழிப்புணர்வு தொடர்பானது இல்லை என தெரிகிறது. அதற்கு மாறாக, தினசரி வாழ்வில் சுகாதார பழக்க வழக்கங்களை ஒன்றிணைத்து மேற்கொள்ள வேண்டும் என்பதே தெரிகிறது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.