சென்னைக்கு இன்று 387 வயது: பிறந்த நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி!

சென்னையின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளால், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாகி வருகிறது.
சென்னை தினம், நம்ம சென்னை
Published on

சென்னை,

சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடும் நிலையில், அதை காக்க உறுதிமொழி எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அன்னையான சென்னை

பெற்றெடுத்த பிள்ளைகளை பேணி காக்கும் 'அன்னை' போல், வாழ்வு தேடி வந்தவர்களுக்கு எல்லாம் வளர்ப்பு அன்னையாக இருந்து ஆதரவு அளித்து வருவது தலைநகர் 'சென்னை' மாநகரம்.

உழைக்கும் எண்ணத்துடன் இந்த மண்ணில் கால் வைத்தவர்கள் யாரும் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை. இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரம் இன்று (ஆகஸ்டு 22) தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை

இன்று பிறந்த நாள் கொண்டாட என்ன காரணம்?

இந்த குறிப்பிட்ட நாளில், பிறந்த நாள் கொண்டாட என்ன காரணம்? என்று பார்த்தால், 1639-ம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே, சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடம் இருந்து, தற்போது தலைமைச் செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில் இருந்த சிறிய கிராமத்தை விலைக்கு வாங்கினார்.

அந்த இடத்திற்கான பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி. அன்றைய நாளே சென்னையின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் சென்னை தினமும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சென்ட்ரல் ரெயில் நிலையம்

பாரம்பரியத்தின் பொக்கிஷம்

முந்தைய காலத்தில் மதராசப்பட்டணம், சென்னப்பட்டணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை மாநகரம், பின்னாளில் சென்னை ஆனது. பழமையும், புதுமையும் வாய்ந்த கட்டிடங்களை கொண்ட சென்னை, பாரம்பரியத்தின் பொக்கிஷமாகவும், நவீன காலத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

பிறந்த நாள் கொண்டாடும் இந்த நன்னாளில், சென்னையின் கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்து பூரிப்படைவதைவிட, எதிர் கால தேவைகளை தேடிப்பிடித்து, அதை நிறைவேற்றி மீட்டெடுப்பதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

கை ரேகை ஜோதிடம்

ஜோதிடத்தில் ஒரு வகை, கை ரேகையை பார்த்து வாழ்க்கையை கணித்து சொல்வது. அதாவது, கை ரேகையின் ஓட்டத்தை வைத்தே எதிர்கால வாழ்க்கையை கணித்து சொல்லிவிடுவார்கள். அதுபோல, ஒரு மாநகரத்தின் செழுமையை 2 ரேகைகளின் ஓட்டத்தை வைத்து சொல்லிவிட முடியும்.

சென்னை மாநகரத்தை உயரே பறக்கும் விமானத்தில் இருந்தபடி, கழுகுப் பார்வையில் கீழே பார்த்தால், அந்த 2 ரேகைகளும் தெரியும். அதாவது, நீர்வழித்தடமான ஆறுகளும், நிலவழித்தடமான சாலைகளும்தான் அந்த 2 ரேகைகள். நூல் போன்று தெரியும் இந்த இரண்டு கோடுகளும் நன்றாக இருந்தால், அந்த மாநகரம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

சென்னை பல்லாவரம், பம்மன் பகுதியில் உள்ள நீர்வழிப்பாதை

மாற்றம் கண்ட நீர், நில வழித்தடங்கள்

ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை பொறுத்தவரை நீர்வழித்தடமான ஆறுகள் கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டன. நிலவழித்தடமான சாலைகளும் முறையான பராமரிப்பு இன்றி, பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. ஆக்கிரமிப்பிலும் சிக்கித் தவிக்கின்றன.

சென்னை இப்போது, கல்வி, மருத்துவம், தொழிற்சாலை, ஆன்மிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. எதிர்காலத்திலும் இது தொடர வேண்டும் என்றால், நகர கட்டமைப்பு அதற்கு ஏற்ற வகையில் தரமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடம்

தூய தண்ணீர் கிடைக்காத அவலம்

போக்குவரத்திற்கு, விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என்று அனைத்து வசதிகளும் இருந்தாலும், வாழத் தகுதியுள்ள நகரமாக சென்னை உயிர்ப்புடன் இருக்கிறதா? என்றால், அது கேள்விக்குறிதான். நகர வாழ்க்கை என்பது இப்போது நரக வாழ்க்கையாக மாறிவருகிறது. அதற்கு காரணம், நீர் மாசு, காற்று மாசு. இவை இரண்டும் மாசுபட்டுவருவதற்கு முக்கிய காரணம், பொதுமக்களாகிய நாம் தான்.

ஒரு காலத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடம்தான் நகரின் உயரமான கட்டிடமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு வானுயர்ந்த கட்டிடங்கள் ஏராளம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உருவாகி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதையும் சுத்திகரித்தால்தான் குடிக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலத்தடி நீர் என்பதே இல்லை. அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் லாரி தண்ணீரை நம்பியே வாழ்க்கை நடத்தும் அவல நிலை உள்ளது.

சென்னையின் தாழ்வான பகுதியில் தேங்கிய வெள்ளம்

வினோத நகரம் சென்னை

இந்த பிரச்சினை ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளால், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாகி வருகிறது. மின்சார ரெயில், மெட்ரோ ரெயில், அரசு நகர பஸ்கள் என்று போக்குவரத்துக்கு பல வழிகள் இருந்தாலும், வாகன பெருக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

அடுத்த 2 மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க இருக்கிறது. பொதுவாக, கிராமங்களில் மழை வந்தால், அதை மனம் குளிர்ந்து வரவேற்பார்கள். ஆனால், சென்னைவாசிகளுக்கு மழை வந்தாலே பீதிதான் ஏற்படுகிறது. காரணம், ஆங்காங்கே வெள்ள நீர் குளம்போல் தேங்கி, இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய செய்துவிடுகிறது. அதாவது, மழை காலத்தில் தண்ணீரால் பிரச்சினை, மற்ற காலங்களில் தண்ணீர் இல்லாமல் பிரச்சினை என்று வினோத நகரமாக சென்னை விளங்குகிறது.

புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை

"எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி" என்று பழமொழி ஒன்று சொல்வார்களே, அதுபோல் இன்றைக்கு தமிழகத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு பஸ்கள், ரெயில்கள் உள்ளன. வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் இங்கே வசிக்கிறார்கள். தமிழக மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்கு பேர் சென்னையில் தான் இருக்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகளுடன் 387-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த வேளையில், சென்னை மாநகரம் மீட்டெடுக்கப்பட வேண்டிய அபாய நிலையிலேயே உள்ளது. 1 கோடி பேருக்கு அன்னையாக விளங்கும் சென்னைக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சென்னை கூவம் ஆறு

'ஆட்சி' மாறியது, 'காட்சி' மாறியதா?

சென்னையில் பாயும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றை கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்டு, நல்ல நீர் ஓடும் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1935-ம் ஆண்டு வரை கண்ணாடி போன்ற தூய்மையான தண்ணீரே இந்த ஆறு, கால்வாயில் பாய்ந்து ஓடியுள்ளது. கடந்த 91 ஆண்டு காலமாக கழிவுநீர் ஓடையாக உள்ள இந்த நீர்நிலைகளை நூற்றாண்டை தொடுவதற்கு முன்பாக (2035) மீட்டெடுக்க வேண்டும்.

இதுபோன்ற மீள் உருவாக்கத்திற்கான முயற்சிகளை கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்டாலும், 'ஆட்சிகள்' மாறினாலும் 'காட்சிகள்' மாறவில்லை என்ற நிலையிலேயே அந்த நீர்நிலைகள் இருக்கின்றன.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

தற்போது, த.வெ.க. ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளை தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் செயலாக்கம் பெறும் என்பது ஆட்சியாளர்களின் நடவடிக்கையை பொறுத்தே இருக்கிறது.

அதுபோல், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி தீர்வை ஏற்படுத்திவிட முடியும். நீண்ட கால தீர்வுக்குத்தான் ஏனைய நடவடிக்கைகள் தேவை.

உறுதிமொழி

இந்த நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி

பாலூட்டி, சீராட்டி வளர்த்த பெற்ற அன்னையை, எப்படி நாம் கண்மணி போல் பாதுகாக்கிறோமோ, அதேபோல் வளர்ப்பு அன்னையான சென்னை மாநகரையும் போற்றி பாதுகாப்பது நம் தலையாய கடமையாகும். அதற்கான உறுதிமொழியை இந்த நன்னாளில் எடுத்துக்கொள்வோம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com