

கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிலதிபர் என பல பரிணாமங்கள் கொண்ட ஜிடி நாயுடுவின் முதன்மையான நோக்கம் சமூக சேவை.
பல அறிவியல் சாதனைகளுக்கு சொந்தக்காரர், இந்தியாவின் எடிசன் என்றெல்லாம் புகழப்பட்டாலும், அவரது பணிகள் சமூகத்தின் பயன்படும் ஒன்றாகவே இருந்துள்ளன, இருந்து வருகின்றன.
என்ன செய்தார் ஜிடி நாயுடு எனக் கேட்போருக்கு பல பதில்கள் தயாராக உள்ளன. ஆனால் ஏன் செய்தார் எனக் கேட்போருக்கு அது அவரின் சமூக அக்கறை என்ற பதிலே கிடைக்கும்.
சமூக அக்கறையே வல்லோரை நல்லோராக காலம் கடந்தும் வாழ வைக்கிறது. அந்த வகையில் ஜிடி நாயுடுவின் அழியாப்புகழ் மாலைக்கு அவரின் சமூக சேவை அணி சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது.
எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் கொண்ட ரேடியோ, சுவர் கடிகாரம், ஸ்பிரிங் ஜூஸர், கிழங்கு தோல் எடுக்கும் கருவி, தானியங்கி ஒளிப்பட கருவி, ரேடியோகிராம், மின்சார பம்ப் என அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆக்கப்பூர்வமான தொழில் முன்னெடுப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, ஜிடி நாயுடு அதை எந்த நோக்கத்திற்கு மேற்கொண்டார் என்பதே முக்கியம்.
தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார்.
அதிலும் அவர் தொழில்முனைவோராக மாறிய பின் இது தெளிவாக வெளிப்பட்டு நின்றது. லாபம் பார்க்கும் நோக்கத்தில் தொழில் தொடங்கிய தொழிலதிபர்கள் மத்தியில், ஜிடி நாயுடு மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதையே தன் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டார். அதற்காக அவர் சந்தித்த தொழில் தோல்விகளை துச்சமென எண்ணி அடுத்த முயற்சி, அதற்கடுத்த முயற்சி என துவளாமல் தன் பயணத்தை தொடர்ந்தார்.
கட்டுமானப் பொருட்களை உருவாக்கிய பிரபல நிறுவனம் அதிக லாபத்திற்கு விற்றபோது, ஜிடி நாயுடு ஏழைகளுக்கான சாணம் கலந்து உருவாக்கப்பட்ட மலிவுவிலை சிமெண்ட் கலவையை அறிமுகப்படுத்தினார்.
இன்று கோவை தொழில் நகரமாக மாறி பலதரப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள மூலாதாரமாகவும் இருக்கிறதென்றால் அதற்கு பின்னால் ஜிடி நாயுடு என்ற தீர்க்கதரிசியின் உழைப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
கோவையில் அவர் உருவாக்கிய லட்சுமி மெஷின்ஸ், யுனைடெட் மோட்டார் சர்வீஸ் ஆகியன இன்றும் பலருக்கு பலனளித்து வருகின்றன.
அவர் தொடங்கிய போக்குவரத்து நிறுவனமான யுனைடெட் மோட்டார் சர்வீஸ் மூலம் 1938ல் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தனது பேருந்துகளை கோவை வட்டாரக் கழகத்திற்கு இலவசமாகவே வழங்கினார்.
ஏழை இளைஞர்களை தொழில் நிபுணர்களாக ஆக்கும் நோக்கில் 1945ல் ஜிடி நாயுடு உருவாக்கிய ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி இன்று தொழில்நுட்ப கல்லூரியாக மேம்பட்டு இளம் தலைமுறையினருக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் நல சங்கத்தை கட்டியெழுப்பினார் ஜிடி நாயுடு. தான் வாழ்ந்த காலத்திலேயே 1950ல் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் பல நற்காரியங்களை நடத்தி வந்தார். இந்நிறுவனம் இன்றளவும் அவர் கனவுகண்ட சமூக வீச்சோடு சீரிய முறையில் இயங்கி வருகிறது.
இந்த தொண்டு நிறுவனத்தின் கீழ் ஜி.டி. டெக்னிகல் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், ஜி.டி. கார் மியூசியம் மற்றும் எக்ஸ்பெரிமென்டா அறிவியல் மையம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
அவரை படிக்காத மேதை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் பள்ளிக்கூடம் செல்லாத மேதை என்று வேண்டுமானால் சொல்லாம். அந்த அளவுக்கு அனைத்தையும் தேடித் தேடி படித்தறிந்து அவற்றின் மூலம் சமூகத்திற்கு அழியாக் கொடைகளை அள்ளித் தந்தவர். ஜிடி நாயுடு ஓர் அறப் போராளி!
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/