

இன்று நாம் பெருமையுடன் பேசும் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) என்ற திட்டத்திற்கு, சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் மண்ணில் அடித்தளமிட்டு சாதனை படைத்துள்ளார் 'மறைந்த மாமேதை' ஜி.டி.நாயுடு
1937 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார சாதனத் தேவைகளும் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில், எவ்வித முறையான பொறியியல் கல்வியும் பயிலாத ஜி.டி.நாயுடு, கோவையில் உள்ள தமது "யுனைடெட் மோட்டார் சர்வீஸ்" பட்டறையில் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கினார்.
அக்காலகட்டத்தில் ஆங்கிலேய அரசின் தொழில்துறைக் கொள்கைகள் இந்தியர்கள் சொந்தமாகத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இருந்தன. குறிப்பாக, மோட்டார் தயாரிப்பிற்கு மிக முக்கியத் தேவையான மின்சாரத் தரம் வாய்ந்த செப்பு கம்பிகள் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தன. இருப்பினும், ஜி.டி. நாயுடு பின்வாங்கவில்லை. தனது சொந்தப் பட்டறையிலேயே செப்புப் பொருட்களை உள்ளூர் வளங்களைக் கொண்டு கம்பி இழைத்து, இரும்புப் பாகங்களைச் செதுக்கி, உலகத் தரத்திற்கு இணையாக இந்த மோட்டாரை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.
இந்த மின்சார மோட்டார் வெறும் காட்சிப் பொருள் அல்லது ஒரு சோதனை முயற்சி மட்டுமல்ல; அது கோவையின் அன்றைய ஜவுளி ஆலைகள் மற்றும் அச்சுக்கூடங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட ஒரு முழுமையான வணிகத் தயாரிப்பாகும். இந்திய மின்சார மோட்டார் உற்பத்தித் துறையின் முன்னோடியாக ஜி.டி.நாயுடு திகழ்வதற்கு இந்தத் தயாரிப்பே மிக முக்கியச் சான்றாகும்.
அவர் அன்று விதைத்த விதைதான், இன்று கோயம்புத்தூரை இந்தியாவின் முன்னணி ஜவுளி, மோட்டார் பம்ப் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றியுள்ளது. "யுனைடெட் மோட்டார் சர்வீஸ், கோயம்புத்தூர்" என்று பொறிக்கப்பட்ட அந்த சிறிய உலோக மோட்டார், இன்றும் கோவையில் உள்ள "ஜி.டி. நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்தில்" கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அது இன்றும் இயங்கும் நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப வரலாற்றில் தமிழர்களின் சுயசார்புத் திறமைக்கு மகுடமாய் விளங்கும் இந்த மின்சார மோட்டாரின் கதை, ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் மூலமாக உலகறிய வரவுள்ளது. ‘ஜி.டி.என்.’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/