

புதுடெல்லி,
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2023-24-ல் ரூ.1,253 கோடி இருந்த இந்தியாவின் முழு ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு, 2025-26-ல் ரூ. 4,149 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த இரண்டாண்டுகளில் மும்மடங்கு உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2025-26ம் நிதியாண்டில் 4,149 கோடி ரூபாய்க்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 2023 - 24ம் நிதியாண்டின் 1,253 கோடி ரூபாயை விட மும்முடங்கு அதிகம். இதேபோல் 2023-24ல், 7,674 டன் ஏற்றுமதியான நிலையில், கடந்த 2025 - 26ல், 16,399 டன் ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்தாண்டில் சர்வதேச சந்தையில் ஏலக்காய்க்கு அதிக தேவை ஏற்பட்டது.
அதேபோல், நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. தரம், மணம் ஆகியவற்றில் நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச வர்த்தகர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, சீனா, எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் இந்தியாவிலிருந்து இந்த நறுமணப் பொருளை இறக்குமதி செய்கின்றன.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி முக்கியமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் 'சிறிய ஏலக்காய்' (small cardamom) மற்றும் இமயமலை அடிவாரத்தையொட்டிய வடகிழக்கு பிராந்தியத்தில் பயிரிடப்படும் 'பெரிய ஏலக்காய்' (large cardamom).
சிறிய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 56-58 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இது கொண்டுள்ளது. இடுக்கி, வயநாடு மற்றும் பாலக்காடு ஆகியவை இங்கு ஏலக்காய் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும்.
தொடர்ந்து தமிழகம், கர்நாடகாவில் ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2025-26ல், 24,715 டன்னும் முந்தைய 2023-24ல், 25,230 டன்னும் உற்பத்தியானது. கடந்தாண்டில் 1 கிலோ ஏலக்காய் விலை 2,470 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், 2023 - 24ல், 1,763 ரூபாய்க்கே விற்பனையானது. கடந்த 2025-26ல் உற்பத்தி, விலை இரண்டும் சாதகமாக இருந்தது. நடப்பு சீசனில் போதுமான மழை இல்லாததால், விளைச்சல் குறையும் என நறுமண பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆண்டு - உற்பத்தி - ஏற்றுமதி - மதிப்பு
2023-24 - 25,230 - 7,674 - 1,253
2025-26 - 24,715 - 16,399 - 4,149