

மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் சர்வதேச தாய்மொழி தினத்திற்கான கருப்பொருள் "பன்மொழி கல்வி குறித்த இளைஞர்களின் குரல்கள்" என்பதாகும்.
உலக அளவில் கடைபிடிக்கப்படும் அல்லது கொண்டாடப்படும் ஒவ்வொரு நாளுக்கு பின்னும் ஒரு வரலாறு இருப்பதைப் போன்று உலகத் தாய்மொழி நாளுக்கும் பெரும் தியாக வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, இன்றைய வங்க தேசமான கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.
அதைக் கண்டித்தும், வங்க மொழியை ஏற்பளிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அப்துஸ் சலாம், அபுல் பர்கட், ரபீக் உத்தின் அகமது, அப்துல் ஜப்பார், ஷபியுர் ரஹ்மான் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வகையிலும், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அப்போது தொடங்கி உலக அளவில் 27-ஆம் ஆண்டாக இந்த நாள் கொண்டாப்படுகிறது.