

இன்றைய வேகமான உலகில், அலுவலகக் கெடுபிடிகளுக்கும் குழந்தைகளின் உணர்வுப்பூர்வமான தேவைகளுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது என்பது பெற்றோருக்கு ஒரு பெரும் போராட்டமாகவே உள்ளது. வேலை, பள்ளி, வீட்டுப் பொறுப்புகள் என ஓடிக்கொண்டே இருப்பதால், நாள் முடிவில் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைந்து விடுகிறார்கள்.
இதனால் குழந்தைகளுடன் போதிய நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இது தொடர்ந்தால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு, மன மற்றும் உடல் நலத்தையும் பாதிக்கும். இதிலிருந்து விடுபட பெரிய மாற்றங்கள் தேவையில்லை. அன்றாட வாழ்வில் செய்யும் சிறிய மாற்றங்களே போதுமானது.
பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த பெற்றோர்கள் மேற் கொள்ள வேண்டிய மாற்றங்களை பார்ப்போமா..
வீட்டின் அனைத்து வேலைகளையும் ஒருவரே சுமப்பது தேவையற்ற அழுத்தத்தையும் மனக்கசப்பையும் உருவாக்கும். இதற்குப்பதிலாக, தம்பதிகள் தங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற சிறிய வேலைகளைக் கொடுப்பது பெற்றோரின் சுமையைக் குறைக்கும். குழந்தைகளை பொறுப்பு உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாவிட்டாலும், தினமும் சில மணி நேரங்களாவது அவர்களுக்காக ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் பகிரப்படும் சிறிய தருணங்களே போதுமானது. காலையில் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்பது அல்லது இரவில் தூங்கும் முன் கதை சொல்வது போன்ற எளிய விஷயங்கள் உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். இது பெற்றோர்-குழந்தை இடையிலான உறவை வலுப்படுத்தும். பெற்றோர்கள் தங்கள் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாற வாய்ப்பாக அமையும்.
அலுவலகத்தில் கூடுதல் வேலைகள் அல்லது வீட்டில் நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகள் போன்றவற்றுக்கு 'சரி' என்று சொல்வது உங்களை அதிக சோர்வடைய செய்யும். அளவுக்கு அதிகமான அர்ப்பணிப்பு ஒருவரின் நல்வாழ்வையும் பாதிக்கும். எல்லைகளை நிர்ணயிப்பதும், உங்களால் முடியாத விஷயங்களுக்கு 'இல்லை' என்று சொல்ல பழகுவது மன அழுத்தத்தை தவிர்க்க உதவும்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பல பெற்றோர்கள் சோர்வையும் இடைவிடாத உழைப்பையும் ஒரு இயல்பான விஷயமாக மாற்றிக்கொள்கிறார்கள். எப்போதும் பரபரப்பாக இருப்பதையே பெருமையாக கருதாமல், போதிய ஓய்வு எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஓய்வில்லாத வாழ்க்கை பொறுமையையும், உற்பத்தி திறனையும் பாதிக்கும். நன்கு ஓய்வெடுக்கும் பெற்றோர்கள் அதிக நிதானத்துடனும், மகிழ்ச்சியுடனும் குழந்தைகளை வளர்க்க முடியும்.
இந்த மாற்றங்கள் மிகச்சரியான சமநிலையை உடனடியாக உருவாக்கிவிடாது என்றாலும், பணிச்சுமையால் தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறையை உருவாக்க இவை நிச்சயம் உதவும். உங்கள் நல்வாழ்வே உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி என்பதை நினைவில் கொண்டு, இச்சிறு மாற்றங்களை இன்றே தொடங்குங்கள்!