

உடன்பிறப்புகளின் பாசப்பிணைப்பு மற்றும் மாறாத அன்பை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவைக் கொண்டாடும் பண்டிகை ரக்சா பந்தன். உடன்பிறப்புகளுக்கு இடையிலான பிணைப்பின் அடையாளமாக, இந்த நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள். மேலும், ‘என் மீதான இந்த அன்பு ஆயுள் முழுவதும் இருக்கவேண்டும். எனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும்’ என்று அன்புக்கட்டளையிட்டு ஆசி பெறுகிறார்கள். அதற்கு பதிலாக அந்த சகோதரர்கள், தன் சகோதரிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அன்பளிப்புகளை கொடுத்து மகிழ்கிறார்கள்.
உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், வழிகாட்டும் ஆசிரியர்கள், பிடித்தமான தலைவர்கள், நாட்டை பாதுகாக்கும் வீரர்கள், அன்போடு பழகும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்கிறார்கள்.
குஜராத் மாநிலம் வதோதராவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு 'ராக்கி' கட்டி மாணவிகள் ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினர். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்புரில் பழங்குடியினப் பெண்கள், மரங்களுக்கு ராக்கிகளை கட்டி மகிழ்ந்தனர்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் மங்கள ஆரத்தியின்போது, இறைவனுக்கு அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமான புனிதமான 'ராக்கி' சமர்ப்பிக்கப்பட்டது.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் காயத்ரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு, பகவான் ஜெகநாதருக்கு புனிதமான ராக்கி கட்டி வழிபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வட இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த பண்டிகை, இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ரக்சா பந்தனை முன்னிட்டு கடைகளில் வண்ண வண்ண ராக்கி கயிறுகள் விற்பனை களைகட்டி உள்ளது. ஆரம்ப காலத்தில் சாதாரண நூலில் ராகி கயிறு கட்டி மகிழ்வார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு வண்ணங்களிலும், விதவிதமான டிசைன்களிலும் ராக்கி கயிறுகள் சந்தைக்கு வந்துள்ளன.
புராணங்களின்படி, மகா விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தின்போது நடந்த ஒரு சம்பவத்துடன் இந்த பண்டிகை தொடர்புடையது. பகவான் கிருஷ்ணரின் கையில் காயம் ஏற்பட்டபோது, பாண்டவர்களின் மனைவியான திரவுபதி தனது சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து காயம்பட்ட மணிக்கட்டில் கட்டினார். திரவுபதி வெளிப்படுத்திய அன்பின் காரணமாக திரவுபதியை எப்போதும் பாதுகாப்பேன் என கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.
அஸ்தினாபுரம் அரசவையில் கவுரவர்கள் திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்த முயன்றபோது கிருஷ்ணர், திரவுபதியின் மானத்தை காப்பாற்றி, தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். கிருஷ்ணரின் கையில் திரவுபதி தன் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்சா பந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ரக்சா பந்தன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. இது இந்திராணி தேவி மற்றும் இந்திர கடவுளுடன் தொடர்புடையதாகும். இது புனிதமான கயிற்றின் சக்தியை விவரிக்கிறது. கொடூரமான அரக்கர்களின் சவாலை ஏற்று இந்திரன் போர்க்களம் செல்கிறார். அரக்கர்களின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாது எனத் தெரிந்த நிலையில் இந்திராணி தேவி இந்திரனின் கையில் ரக்ஷா எனும் புனித கயிற்றை கட்டுகிறார். இதன் விளைவாக அரக்கர்களை போரிலும் வீழ்த்துகிறார்.
இவ்வாறு ரக்சா பந்தன் பண்டிகைக்கு பல நிகழ்வுகள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும், சகோதர - சகோதரிகள் மீதான மாறாத அன்புதான் ஒரே நோக்கம் ஆகும்.
ரக்சா பந்தன் நன்னாளில் அனைவரும் சகோதரத்துவத்துடன் மகிழ்ச்சியாய் வாழ உறுதி ஏற்போம்!