சண்டே ஸ்பெஷல்: ருசியான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-
தேங்காய் - 1 (பெரியது)
பாஸ்மதி அரிசி - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 2
முந்திரி பருப்பு - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புதினா இலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
முதலில் தேங்காய் பால் தயார் செய்ய வேண்டும். மிக்சி பெரிய ஜாரில் பாதி தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும். பின்னர், அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அரை முறி தேங்காயை இவ்வாறு 2 முறை எடுத்து தயார் செய்தால் 3 கப் அளவுக்கு தேங்காய் பால் கிடைக்கும். இதை தனியாக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். நெய், எண்ணெய் இரண்டும் கலந்து நன்கு சூடாகியதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய் (இரண்டாக கீறியது) ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
தொடர்ந்து, நீள வாக்கில் வெட்டிட பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். பெரிய வெங்காயம் கண்ணாடி பதம் அளவுக்கு வெந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து, சிறிது சிறிதாக வெட்டிய புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். நீள வாக்கில் சிறிய துண்டுகளாக வெட்டிய தக்காளியையும் சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்கவும். தேங்காய் பால் நன்றாக கொதிக்க தொடங்கியதும், அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை வடிகட்டி சேர்க்கவும். 1 கப் அரிசிக்கு 1½ கப் தேங்காய் பால் என்ற அளவில் இருக்க வேண்டும். பாஸ்மதி அரிசியை விரும்பாதவர்கள், சாப்பாடுக்கு பயன்படுத்தும் பொன்னி அரிசியையும் சேர்க்கலாம்.
குக்கரை மூடும் முன்பு உப்பு சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துக்கொள்ளவும். தேவை ஏற்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை அரிசியை வேகவிடவும். 2 விசிலுக்கு பிறகு அடுப்பில் தீயை குறைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும். அடுத்து அடுப்பை 'ஆப்' செய்து விடவும். விசிலில் உள்ள காற்று தானாக வெளியேறிய பிறகு, குக்கர் மூடியை திறக்கவும். மணமான, சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
இந்த தேங்காய் பால் சாதத்தை வெஜிடபிள் குருமா, பன்னீர் கிரேவி, சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி ஆகியவற்றுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

