

ஜி.டி,நாயுடு மறைந்து அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் கோயம்புத்தூர் நகரம் அவர் உருவாக்கிய சிந்தனைகள், தொழில்நுட்ப பார்வையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” என்ற சொல்லாடலுக்கு ஏற்ப பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதைவிட்டு மறையவில்லை. அவர்கள் வாழ்ந்த இடத்தின் ஒவ்வொரு கட்டிடத்திலும், தொழிற்சாலையிலும், கல்வி நிறுவனத்திலும், அடுத்த தலைமுறை மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பாடப்புத்தகப் பக்கத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அரிய மனிதர்களில் ஒருவர்தான் இந்தியாவின் “எடிசன்” என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடு. 1974ஆம் ஆண்டு ஜி.டி. நாயுடு மறைந்தார். ஆனால் அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் கோயம்புத்தூர் நகரம் அவர் உருவாக்கிய சிந்தனைகள், தொழில்நுட்ப பார்வை மற்றும் தொழில் கலாச்சாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவின் முக்கியமான பொறியியல் கல்வி மையமாக கோயம்புத்தூரை உருவாக்கிய நிறுவனங்களில் மிக முக்கியமானது பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி. பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தின் வளர்ச்சிக்கும் அதன் பொறியியல் நோக்கத்திற்கும் ஜி.டி. நாயுடுவின் சிந்தனைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு மனிதர், “ஒரு இளைஞன் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறியியல்” என்று நம்பினார்.
அந்த நம்பிக்கையே ஆயிரக்கணக்கான மாணவர்களை பொறியாளர்களாக மாற்றிய கல்வி மரபை உருவாக்கியது. இன்று பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் பி.எஸ்.ஜி. வளாகத்தின் வழியாக உலகின் பல்வேறு துறைகளில் சாதித்து வருவதற்கு ஜி.டி.நாயுடுவின் பார்வையும் காரணமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி.நாயுடு தொழில்துறை கண்காட்சி இந்தியாவின் மிகவும் தனித்துவமான பொது அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது வெறும் அருங்காட்சியகம் அல்ல, கண்டுபிடிப்புகளின் வரலாறு, தனிப்பட்ட ஆவணங்கள், சிக்கனமான பொறியியல் சிந்தனைகளின் தொகுப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது.
அங்கு ஜி.டி. நாயுடுவின் புகழ்பெற்ற “ரசன்ட்” சேவிங் ரேசர், 1937ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்மோட்டார், மண்ணெண்ணெய் விசிறி, வாக்குப்பதிவு இயந்திரம், ஜவுளித் தொழிலுக்கான கருவிகள் உள்ளிட்ட பல அரிய கண்டுபிடிப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி இன்று வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக மாற்றப்படாத காட்சிப்பெட்டிகளும், அக்கால தலைமுறையின் துல்லியமான விளக்கக் குறிப்புகளும் ஜி.டி.நாயுடுவின் பணியை வரலாற்றுச் சாட்சியாக பதிவு செய்து வருகின்றன.
கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி. நாயுடு ஹால் பல தசாப்தங்களாக முக்கிய சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான முக்கிய அரங்கமாக இருந்து வருகிறது. இந்த அரங்கிற்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டது வெறும் நினைவுச் சின்னமாக அல்ல, ஒரு நகரம் தன்னைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும்போது உருவாகும் பொதுத் தளங்களின் அடையாளமாகவே அது பார்க்கப்படுகிறது.
ஜி.டி. நாயுடு வாழ்ந்த காலத்திலேயே தொடங்கப்பட்ட ஜி.டி.நாயுடு சாரிட்டீஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, அறிவியல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. குடும்பத்தினரும் அறங்காவலர்களும் நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளை தன்னுடைய பணிகளை விளம்பரப்படுத்தாமல் அமைதியாக செய்து வருகிறது. பாராட்டுகளுக்காக அல்ல, பணிக்காகவே செயல்பட வேண்டும் என்ற ஜி.டி. நாயுடுவின் எண்ணமே இதன் அடிப்படையாக உள்ளது.
ஜி.டி.நாயுடுவின் மிகப் பெரிய பாரம்பரியம் ஒரு கட்டிடம் அல்ல, ஒரு நிறுவனம் அல்ல, அது கோயம்புத்தூரின் தொழில் கலாச்சாரமே. பீளமேடு தொழிற்பகுதிகள், திருப்பூரின் ஜவுளித் தொழில்கள், ஒண்டிப்புதூரின் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என கோயம்புத்தூரின் தொழில்துறை அமைப்புகள் அனைத்திலும் ஜி.டி.நாயுடுவின் சிந்தனைகளின் தாக்கம் காணப்படுகிறது.
“ஒரு பவேரியன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கருவியைப் போலவே கோயம்புத்தூரிலும் தரமான இயந்திரங்களை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்தார். “ஒரு இந்திய பொறியாளருக்கு தேவையானது ஒரு பணிமனை மற்றும் சுதந்திரம் மட்டுமே, அவர் நாட்டுக்குத் தேவையான பொருளை உருவாக்கிவிடுவார்” என்ற எண்ணத்தை வாழ்நாள் முழுவதும் அவர் வலியுறுத்தினார். இன்று இந்தியாவின் மிகவும் தன்னிறைவு கொண்ட தொழில்துறை மையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் திகழ்வதற்கு ஜி.டி. நாயுடுவின் பார்வை முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஜி.டி.நாயுடுவின் மறைவு அரை நூற்றாண்டு கடந்த நிலையில், அவரது வாழ்க்கையும் சாதனைகளும் தற்போது ஒரு திரைப்படத்தின் மூலம் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை வாரியத்தின் இறுதி அனுமதிகளுக்கு உட்பட்டு வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும்.
ஒரு பாடப்புத்தகம் செய்ய முடியாத ஒன்றை ஒரு திரைப்படம் செய்யக்கூடும். பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பாளரின் முகம், குரல், பணிமனை மற்றும் கனவுகளை இந்திய மக்களின் முன் மீண்டும் கொண்டு வர முடியும். இந்த திரைப்படம் ஜி.டி. நாயுடுவின் கதையின் முடிவு அல்ல, மாறாக அவரது பாரம்பரியத்தை நாடு முழுவதும் மீண்டும் அறிமுகப்படுத்தும் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
ஜி.டி. நாயுடு இன்று இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில்துறை கலாச்சாரம், அறக்கட்டளைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. கோயம்புத்தூரின் தெருக்களில் நடந்து சென்றாலும், தொழிற்சாலைகளில் நுழைந்தாலும், பொறியியல் கல்லூரி வகுப்பறைகளில் அமர்ந்தாலும், ஒரு மனிதனின் பாரம்பரியம் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதை உணர முடியும். மனிதர் மறைந்தார். ஆனால் அவர் செய்த வேலை இன்னும் வாழ்கிறது. கோயம்புத்தூரின் ஒவ்வொரு இயந்திரத்தின் ஓசையிலும், ஒவ்வொரு தொழிற்சாலையின் சக்கரச் சுழற்சியிலும், ஜி.டி. நாயுடுவின் கனவு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் ஜிடிஎன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
மேலும் தகவல்களுக்கு.. https://events-dailythanthi.com/gdn/