

சென்னை,
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளியாகும் இரண்டாம் பாகப் படங்கள், முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.
ஒரு காலத்தில் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வெளியாகிய சில முக்கியமான இரண்டாம் பாகங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியுள்ளன.
தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பின்னர் ரசிகர்களை ஏமாற்றியதாக விமர்சிக்கப்பட்ட சில இரண்டாம் பாகப் படங்கள்
சந்திரமுகி 2
சாமி 2
பில்லா 2
சண்டக்கோழி 2
விஸ்வரூபம் 2
விஐபி 2
இந்தியன் 2
முதல் பாகங்களின் வெற்றி மற்றும் ரசிகர்களிடம் உருவான எதிர்பார்ப்பு காரணமாக, இந்தப் படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத படங்களாக இந்த சில இரண்டாம் பாகங்கள் அமைந்தன.
இரண்டாம் பாகப் படங்கள் தொடர்பாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்தாலும், தமிழ் திரையுலகில் அதன் மீதான ஆர்வம் குறைந்தபாடில்லை.
அடுத்ததாக வெளியாகவுள்ள அல்லது உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள சில இரண்டாம் பாகங்கள் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளதாகக் கூறப்படும் ‘விக்ரம் 2’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், ‘இந்தியன் 3’, ‘காஞ்சனா 4’ உள்ளிட்ட படங்கள் மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதல் பாகங்களின் வெற்றியைத் தாண்டி, புதிய கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் வரும் இந்த இரண்டாம் பாகங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.