இயற்கையை பாதுகாக்க உறுதியேற்போம்..! இன்று உலக வனவிலங்குகள் தினம்

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இயற்கையை பாதுகாக்க உறுதியேற்போம்..! இன்று உலக வனவிலங்குகள் தினம்
Published on

வனவிலங்குகளின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கும், வன விலங்குகளின் பாதுகாப்பிற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி சர்வதேச வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (3.3.2025) உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "வனவிலங்கு பாதுகாப்பு நிதி: மக்கள் மற்றும் கிரகத்தில் முதலீடு செய்தல்" என்பதாகும். மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள நிதி வளங்களின் செயல்திறன் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.

இந்த கருப்பொருளுடன், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு யோசனைகள் பற்றி விவாதிக்கும் கல்வி நிகழ்வுகள், ஆதரவு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

பெருகிவரும் மக்கள் தொகையால் உலகம் முழுவதும் காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு வனப்பகுதி சுருங்கி வருகிறது. மருந்துக்கும், கட்டிட வேலைக்கும், நிழலுக்கும், மழைக்கும், பிராண வாயு வெளியீட்டிற்கும், உணவு வகைகளுக்கும் ஆதாரமான மரங்கள் குறைந்து வருவதால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூமி வெப்பமாகிக் கொண்டிருக்கிறது. வனவளம் குறையும்போது ஆண்டாண்டு காலமாக வனப்பகுதியில் வாழும் விலங்கினங்களும் குறைகின்றன. இதுதவிர கடுமையான வறட்சியின் காரணமாக நீரின்றி மரங்கள் பட்டுப்போவதும், தீவிபத்துகளால் காட்டு மரங்களும், விலங்குகளும் கருகிப்போகின்றன.

காடுகளும், காடுகளில் வசிக்கும் விலங்குகளும் அழியத் தொடங்குவதால் பூமிப்பந்தின் இயற்கைச் சமன்பாட்டில் மாறுபாடு ஏற்படுகிறது. இது உலகிற்கு நல்லதல்ல. வனவிலங்குகளின் வாழ்விடத்தை மனிதன் தனது சுயநலத்தால் ஆக்கிரமிக்கும்போது, அவை மனிதனின் வசிப்பிடத்தை நோக்கி உணவுக்காகவும், நீருக்காகவும் இடம்பெயர்கின்றன. அப்போது மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்படுகிறது. இடம்பெயரும் விலங்குகளால் மனித குலத்திற்கு ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் பிரச்சினைகள் இல்லை. வனவிலங்குகள் தினமான இன்று இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க உறுதியேற்போம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com