

புதுடெல்லி,
காப்பீட்டுத் திட்ட விவரங்களை அறிய செல்போன் எண் தேவையில்லை. தனிப்பட்ட தகவல்களை கேட்கக்கூடாது என புதிய விதிமுறைகளை கொண்டு வர இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.) திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது திட்டங்கள் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வழங்க வேண்டும். குறிப்பாக, காப்பீட்டு கட்டணம், திட்டத்தின் சிறப்புகள், செயல்பாடு மற்றும் தரம் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்கக்கூடாது.
சில இணையதளங்களில் காப்பீட்டுத் திட்டத்தின் விலையை தெரிந்து கொள்வதற்கு முன்பே செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை கேட்கும் நடைமுறை உள்ளது. இதுபோன்ற நடைமுறையை தடை செய்யப்படும். மேலும், காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடு, காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பான தகவல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்த விவரங்களையும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் வழங்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் கமிஷன் மற்றும் விற்பனைச் செலவுகள் குறைக்கப்பட்டால், அதன் பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அக்டோபர் 25-ந்தேதி வரை கருத்துகள் பெறப்படுகின்றன. அதன்பிறகு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டால், 2027-ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.