சிலை திருட்டுகளும்...! மீட்பு நடவடிக்கைகளும்...!

இந்து சமய அறநிலையத்துறை, அர்ச்சகர்கள், காவல்துறையின் சிலை தடுப்பு பிரிவு, நீதிமன்றம், சர்வதேச சிலை திருடர்களின் நுட்பமான வலைப்பின்னல், வெளிநாட்டு கலை அருங்காட்சியகங்களின் பொறுப்பின்மை, பக்தர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் களச்செயல்பாடு என பலதரப்பட்ட பரிமாணங்களைக் கொண்டதே சிலை திருட்டும், சிலை மீட்பும்!
சிலை திருட்டுகளும்...! மீட்பு நடவடிக்கைகளும்...!
Published on

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது நடராஜர் சிலை. சிலை மீண்டு வந்த சம்பவம் ஒரு பரவச நிகழ்வாக மாறிப்போனது.

கடந்த சில வருடங்களாக சிலைகள் திருடு போகும் செய்திகளும், சிலைகள் மீட்கப்பட்ட செய்திகளும் ஊடகங்களில் பரபரப்புடன் அடிபட்டு கொண்டுள்ளன. அதுவும் புகழ்பெற்ற, மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ள கோவில்களிலேயே சிலை திருடுபோகுமென்றால், பாழடைந்த பழம்பெருமை வாய்ந்த ஏராளமான கோவில்களின் நிலைமையை கேட்கவும் வேண்டுமா? தற்போது நமது கோவில் சிற்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

கலைப்பொக்கிஷங்களின் குவியலாக திகழும் தமிழகம்

தமிழக சிற்பங்களுக்கு உலக அளவில் பெரும் முக்கியத்துவம் உள்ளது. தமிழக சிற்பங்கள் பல்லவர், பாண்டியர், சோழர், நாயக்கர் என நான்கு அரச வம்சத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவை. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது தான் சிற்பக் கலை. பல்லவர் கால சிற்பங்கள் பெருமளவில் மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டவை.

சுமார் 34 மலைகளையும், குன்றுகளையும் குடைந்து பல்லவர்கள் உருவாக்கிய அரிய சிற்பங்களை களவாட வேண்டுமென்றால், மலையோடு பெயர்த்து எடுத்தால்தான் இயலும்.

அதே போல பாண்டியர்களும் சுமார் 60 மலைகளை குடைந்து அரிய சிற்பங்களை உருவாக்கினர். (கிரானைட் கொள்ளையர்கள் அந்த கலை சிற்பங்களின் பெருமை உணராமல் சில மலைகளையே பெயர்த்துள்ளது தனிக் கதை) நாயக்கர்கள் கோவில் கோபுரங்களிலும், பிரகாரங்களிலும், மண்டபங்களிலும், கற்தூண்களிலும் அதிக சிற்பங்களை வடித்தனர்.

ஆனால், சோழர்களோ, கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நமது மரபுக்கு ஏற்ப தலைநகரங்கள் தொடங்கி சிற்றூர் வரையிலும் கோவில்களை எழுப்பியதோடு, அதில் அரிய தனித்துவம் மிக்க சிற்பங்களையும் வழிபாட்டிற்காக ஏற்படுத்தி தந்தனர். ஆகவே, இந்த சோழர்கால சிலைகளை திருடுவதில் தான் உலக சிலை திருடர்கள் அதிக கவனம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களும், சிற்பங்களும்!

தமிழகத்தில் மொத்தம் சுமார் 49 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில் மக்கள் அதிகமான அளவில் சென்று அதன் மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் பெறும் கோவில்கள் வெறும் 305 தான். மற்றவையெல்லாம் குறைந்த வருமானமுள்ளவைகளே!

இதில் முற்காலத்தில் பெரும் முக்கியத்துவத்துடன் திகழ்ந்து இன்று கேட்பாரற்று கிடக்கும் கோவில்கள் ஏராளம். அம்மாதிரியான கோவில்களில் விலை மதிக்க முடியாத அளவு பெருமை கொண்ட சிற்பக்கலையம்சம் பொருந்திய கோவில்கள் 11,512 உள்ளன. இந்த மாதிரியான கோவில்களாக பார்த்துத் தான் களவாணிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.

ஏனெனில், இக்கோவில்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. ஒரு கால பூஜைக்கு கூட வழியின்றி பல கோவில்கள் மூடப்பட்டிருக்கின்றன. மக்களுக்கோ, அரசுக்கோ இதன் அருமை, பெருமைகள் தெரியவில்லை. ஆனால் கொள்ளையர்களுக்கு இவை எப்படியோ தெரிந்துவிடுவதால் அவர்கள் களவாடி சென்று விடுகின்றனர்.

அப்படி களவாடப்பட்ட சிலைகள், கலை பொருட்கள் வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் அழகிய கண்ணாடி பேழைகளில் காட்சி பொருளாகிவிடுகின்றன. அவற்றின் பெருமை உணர்ந்த வெளிநாட்டு கலை ஆர்வலர்கள் பல கோடிகள் தந்து அவற்றை வாங்கிச்சென்று தங்கள் ஆடம்பர மாளிகைகள் அல்லது ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் அலங்கார பொருளாக்கி விடுகின்றனர்.

1972-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய சட்டம் ஒன்று, 100 வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட பழம் பொருட்களை நாட்டை விட்டு வெளியே எடுத்து செல்வதை, தடை செய்கிறது. 1972-க்கு பிறகு இப்படி எடுத்து செல்லப்பட்ட பழம் பொருட்களை, இழப்பீடு எதுவும் பெறாமல், அவற்றை வைத்திருக்கும் நாடுகள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. விதிமுறைகள் கூறுகின்றது.

சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில்

12-ம் நூற்றாண்டில் புகழுடன் திகழ்ந்த இந்த கோவிலில் தான் சுந்தரேசுவரர் கோவில் சிலைகளும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. அப்படி இக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த 20 ஐம்பொன் சிலைகளை, சஞ்சீவி அசோகன் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருடினான்.

ஆனால், ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்காக கோவில் திறக்கப்பட்டபோது தான் அவை திருடப்பட்டது தெரிய வந்தது. இந்த சிலைகளில் 10 சிலைகள் அமெரிக்காவில் இருக்கும் சுபாஷ் கபூருக்கு போய் சேர்ந்தன. அதில் நடராஜர் மற்றும் அவரது ஜோடியான உமையவள் சிலைகளை மட்டுமே சுபாஷ் கபூர் ரூ.34 கோடிக்கு விற்றான்.

இந்த சிலைகளில் சோமாஸ்கந்தர், சக்கரத்தாழ்வார் சிலைகளை சுபாஷ் கபூரிடமிருந்து மீட்டு அமெரிக்க அரசே இந்திய அரசிடம் 2016-ல் ஒப்படைத்துவிட்டது. தற்போது இந்த இரு தெய்வ திருமேனிகளும் வழிபாட்டில் உள்ளன.

ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் கோவில்

10-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பெரும் கீர்த்தியுடன் திகழ்ந்த ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் இருந்தன. இவற்றை 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 சிலைகளும், மே மாதம் 3 சிலைகளும், அடுத்த ஓரிரு மாதத்தில் மூன்றாவது தவணையாக மேலும் இரண்டு சிலைகளுமாக சஞ்சீவி அசோகன் கூலிப்பட்டாளத்தை வைத்து திருடினான்.

ஆனால் இச்சிலைகள் காணாமல் போனது ஜூன் 2008-ல் தான் இந்து அறநிலையத்துறைக்கு தெரியவந்தது. இதில் அற்புதமான நடராஜர் சிலையை 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியிடம், அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்பாட் ஒப்படைத்தார்.

கடத்தல் மன்னன்

சர்வதேச சிலை கடத்தல்காரரான கபூர் கைது செய்யப்பட, அவரின் முன்னாள் காதலியான கிரேஸ் பரமேஸ்வரி தான் முக்கிய காரணமாக இருந்தார். கபூர் எங்கு செல்கிறார் என்ற தகவல்களை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தார். அதை வைத்து கபூர் கைது செய்யப்பட்டார்.

10.76 கோடி டாலர்கள் (ரூ.764 கோடி) மதிப்புடைய 2,622 பழம் பொருட்கள் கடத்தப்பட சுபாஷ் கபூர் காரணமாக இருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

அறநிலையத்துறை அதிகாரிகள் கைது

பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் பழனி முருகன் கோவிலில் மூலவரான பழனி ஆண்டவரின் நவபாஷாண சிலை பழுதுபட்டதாக கூறி புதிய ஐம்பொன் சிலை செய்ய முடிவானது. ஆனால் புதிய சிலை செய்வதில் பல கோடி மோசடி நடந்தது நிரூபணமானது.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. அதில் ஏலவார் குழலி, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலைகள் சிதிலமானது. புதிய சிலை ஐம்பொன்னில் தயாரான போது அதில் முறைகேடு நடந்தது நிரூபணமானது.

2.82 கோடி ரூபாய் மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் மாயமானது எப்படி? என்ற கேள்வி எழுந்தது. பழனி மற்றும் காஞ்சீபுரம் கோவில் விவகாரத்தில் பிரபல முத்தையா ஸ்தபதி கைதானார்.

மதுரை சவுடார்பட்டி மீனாட்சி கோவில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வழக்கில் கூடுதல் ஆணையர் கவிதா, பழனி கோவில் வழக்கில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோரும் கைதாகினர். இப்படியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலால் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் எம்.கவிதாவிடம் கேட்டபோது, முறையாக விசாரிக்காமல் அவசர கோலத்தில் பொன் மாணிக்கவேல் எங்களை கைது செய்து விளம்பரம் தேடுகிறார். ஆனால் அவரால் இது வரை என் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடியவில்லை என்றார்.

காணாமல் போன சிலைகளும், கண்டெடுக்கப்பட்ட சிலைகளும்

இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல்படி, தமிழகத்தில் கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் 387 கோவில்களில் 1,204 சிலைகள் களவு போயுள்ளன. 2017-ம் ஆண்டு வரையில் மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 56 மட்டுமே.

சிலை கடத்தல் என்பது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது என்பது 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் களவாடப்பட்டு குஜராத்தில் உள்ள ஆமதாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த மாமன்னர் ராஜராஜ சோழன் அவரது மனைவி லோகமாதேவி சிலைகளை பொன் மாணிக்கவேல் தற்போது தான் மீட்டு வந்தார் என்பதிலிருந்து அறியலாம்.

சிலைகள் மீட்பு விஷயத்தில் எஸ்.விஜயகுமார் போன்ற பாரம்பரிய சிலைகள் மீது பற்று கொண்ட பக்தர்கள் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், சர்வதேச காவல் துறையினர், கறாரான சட்டங்கள், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆவணங்கள் ஆகியவற்றின் துணையில்லாமல் தமிழக போலீசாரால் எதையுமே சாதித்திருக்க முடியாது.

ஐகோர்ட்டு கண்டனம்

சிலைகள் களவாடப்படுவதை தடுக்க, சிலை பாதுகாப்பு மையங்களில் பழைய சிலைகள் வைக்கப்பட்டு உற்சவம் மற்றும் விழாக்காலங்களில் மட்டும் எடுத்து மீண்டும் வைக்கும் நடைமுறை உள்ளது. அப்படி எடுக்கும்போது சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் துணையுடன் உண்மையான வெண்கல சிலைகள் களவாடப்பட்டு, பித்தளைச் சிலைகள் வைக்கப்படும் குற்றங்களும் நடக்கின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 1,700 கோவில்களில் போலிச்சிலைகள் உள்ளது கவலையளிக்கிறது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சிலை திருட்டை தடுப்பதில் தமிழக அரசுக்கு போதுமான அக்கறையும், உறுதியும், முனைப்பும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு பலமுறை கண்டித்துள்ளது.

கச்சிதமாக செய்யப்பட்ட சிலை திருட்டுகள்

அவர்கள் செயல்பட்ட விதம் மிகவும் எளிமையானது. தமிழகத்தின் பழமையான கோவில்களை பற்றி அசோகன் பரிச்சயம் கொண்டவர். ஒரு சிலை திருடர்கள் கும்பலின் உதவியுடன் அவற்றை கொள்ளையடிப்பார். அந்த திருடர்களிடம், தான் கொள்ளையடிக்க விரும்பும் கோவில்களின் புகைப்படங்களை காட்டுவார்.

சில கைவினைஞர்களின் உதவியுடன் சிலைகளின் புகைப்படத்தை கொண்டு, அதே போன்ற பிரதிகளை செய்வது மற்றொரு சூழ்ச்சி. பிறகு இந்த பிரதிகளுக்கு, பிராந்திய கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு பெற்ற போலி நிறுவனத்தின் மூலம், கைவினை பொருட்கள் என்று சான்றிதழ் பெறப்படும்.

சுங்கத் துறையின் பார்வையில் இருந்து தப்ப, இவற்றின் மதிப்பு மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டு, இவற்றுடன், அசல் சிலையும் சேர்த்து ஏற்றுமதி செய்யப்படும். மாற்றாக, இவை பழமையான பொருள் அல்ல என்ற சான்றிதழ் பெற்று, அதை இந்திய தொல்பொருள் துறையிடம் சமர்ப்பிப்பதன் மூலம், ஏற்றுமதி செய்யப்படும் போது, ஆய்வு செய்யப்படுவதில் இருந்து விலக்கு பெறப்படுகிறது. பிரதிகளுடன் அசல் சிலையை கலந்து அனுப்புவது எளிதான காரியம் தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com