

மன்னர்களை, கடவுளாக்கிய மறுமலர்ச்சித் திட்டம் - அமுதன்
கம்போடியா நாட்டு வரலாற்றில் மூன்று மன்னர்கள் முக்கியமானவர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்களில் ஒருவர், 8-வது நூற்றாண்டில் அங்கே ஆட்சியில் இருந்த இரண்டாம் ஜெய வர்மன்.
சிதறிக்கிடந்த கம்போடியாவை, தற்போது இருப்பது போன்ற ஒரே நாடாக ஆக்கி, ஒருங்கிணைந்த புதிய கம்போடியாவைத் தொடங்கி வைத்த பெருமை மன்னர் இரண்டாம் ஜெயவர்மனுக்கு உண்டு.
ஏழாம் நூற்றாண்டு இறுதியின் போது, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல, கம்போடியாவின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் மன்னராக இருந்து ஆட்சி செய்து வந்தனர்.
போதாக்குறைக்கு, மலேயா பகுதியில் இருந்த ஸ்ரீவிஜய பேரரசும் கம்போடியா மீது அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அப்போது, கம்போடியா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் ஜெயவர்மன், ஸ்ரீவிஜயத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
திடீர் என்று ஒரு நாள், அவர் தனது ஆதரவாளர்களைக் கொண்ட படை பலத்தை திரட்டிக் கொண்டு கம்போடியா வந்தார். அங்கே சிற்றரசர் போல இருந்த ஒவ்வொருவரையும் போரில் தோற்கடித்தார். விஜய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் கம்போடியாவை முழுவதுமாக மீட்டார்.
கம்போடியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த அவர், கம்போடியா ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அசுரவேகத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, மன்னர்கள் கடவுளின் அவதாரம் என்ற புதிய கொள்கையை கம்போடியாவுக்குக் கொண்டு வந்தார், மன்னர் ஜெயவர்மன்.
அதாவது, மன்னர் என்பவர், தேவராஜா என்று மக்களால் வணங்கப்பட வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தினார்.
கம்போடியாவில் இப்போதும் மன்னர் இருக்கிறார். இப்போதைய மன்னரையும், கடவுள் அந்தஸ்துக்கு வைத்து மக்கள் மரியாதை கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
1,300 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் ஜெயவர்மன் கொண்டுவந்த கடவுளின் அவதாரமே மன்னர் என்ற கொள்கை, இன்றளவும் அங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பதன் மூலம், அவர் விதைத்த வித்து நாட்டு மக்களிடம் எவ்வளவு ஆழமாகப் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இடையே சில ஆண்டுகள் கம்போடியா நாடு, சிவ வழிபாட்டில் இருந்து புத்த மத வழிபாட்டுக்கு மாறிய போதும் கூட தேவராஜா என்ற கோட்பாடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்தது போன்ற லிங்க உருவ வழிபாட்டை கம்போடியாவில் முதல் முறையாக ஏற்படுத்தியவரும் இந்த மன்னர் தான்.
சிற்றரசர்களாக இருந்த ஒவ் வொருவரையும் போரில் தோற்கடித்து, கம்போடியாவை ஒரே தேசமாக ஆக்கிய ஜெயவர்மன், தனக்கு ஏற்ற தலைநகருக்கான இடத்தைத் தேடினார்.
முதலில் ரோலஸ் என்ற பகுதியில் உள்ள ஓர் இடத்தை அவர் தேர்ந்தெடுத்து அங்கே புதிய தலைநகரை அமைத்தார்.
லிங்க வழிபாட்டில் அவர் தீவிரம் காட்டியதால், அந்த தலைநகருக்கு சிவன் பெயரில் ஹரிகராலயா என்று பெயர் சூட்டினார்.
அதேசமயம், அவரால் தோற்கடிக்கப்பட்ட சிற்றரசர்களால் அவருக்குத் தொல்லைகள் தொடர்ந்தபடி இருந்தன.
இதனால் அவர் அடிக்கடி தலைநகரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று.
சியம் ரீப் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் குலென் என்ற மலைப்பகுதி உள்ளது. அந்த மலைப்பகுதியில் தலைநகரை ஏற்படுத்தினால், எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் எண்ணி, அங்கே தலைநகரை மாற்றினார்.
அந்த தலைநகருக்கு மகேந்திரபர்வதம் என்ற அழகிய பெயரைச் சூட்டினார்.
அந்தக் காலத்தில், ஸ்ரீவிஜய பேரரசின் சக்கரவர்த்தியாக தன்னை அறிவித்துக் கொண்டு வலம் வந்தவர், சைலேந்திரர்.
ஸ்ரீவிஜயத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய போது, தானும் என்றாவது ஒரு நாள் கம்போடியாவின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஜெயவர்மன், ஒருங்கிணைந்த கம்போடியாவை உருவாக்கிய போது, நாட்டின் முதலாவது சக்கரவர்த்தி ஆக திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர், தனது தலைமை புரோகிதரான சிவகைவல்யா என்ற இந்திய அந்தணரிடம், அதிக அதிகாரம் மிக்க சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூட்டிக் கொள்ள விரும்புவதாகவும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் வினவினார்.
உடனே தலைமை புரோகிதர் சிவகைவல்யா, இந்தியாவில் மந்திர தந்திரங்களில் புகழ் பெற்ற ஹிரண்யதாமா என்பவர் இருக்கிறார். அவரை அழைத்து வந்து, குறிப்பிட்ட மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகளை நடத்தினால், அதன் மூலம் நீங்கள் பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தி ஆக முடியும்; எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் தப்பலாம். இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மன்னர்கள் எல்லாம் இவ்வாறு தான் சக்கரவர்த்தி ஆனார்கள் என்று ஆலோசனை கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஹிரண்யாதாமா என்பவர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
அவர், தலைமை புரோகிதருக்கு பல மந்திரங்களைக் கூறி அதன்படி சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்றார். அவரது வழிகாட்டுதல்படி, குலென் மலைப்பகுதியில் சிவகைவல்யா சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
பூஜைகளின் இறுதியில், ஜெயவர்மன், பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தி என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டார்.
பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தி என்பது கம்போடிய மொழியில் கம்ரதென் ஜகத் தா ராஜா என்று அழைக்கப்பட்டது.
ஜெயவர்மன் முடிசூட்டு விழா, 802-ம் ஆண்டு குலென் மலைப்பகுதியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
(அப்போது ஜெயவர்மனுக்காக நடத்தப்பட்ட பிரமாண்ட யாகங்களின் எச்சங்கள், சமீபத்தில் தொல்பொருள் ஆய்வு மூலம் குலென் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன).
இன்று முதல் இந்த நாடு காம்புஜ தேசம் (கம்போடியா) என்று அழைக்கப்பட வேண்டும் என்று தனது முடி சூட்டு விழாவின் போது மன்னர் ஜெயவர்மன் ஆணையிட்டார்.
இதன் மூலம் ஒருங்கிணைந்த கம்போடியா நாட்டுக்கான ஆரம்ப வித்து அப்போது தான் முதன் முறையாக அங்கே ஊன்றப்பட்டது.
ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு மன்னர் ஜெயவர்மன், அம்ரிதா என்ற பெண்ணை மணந்து கொண்டார்.
ஒருங்கிணைந்த கம்போடியாவை 35 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டாம் ஜெய வர்மன் மறைவைத் தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்தார்.
அதன் பிறகே கம்போடியாவில் ஏராளமான கோவில்கள் கட்டும் பணி தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
ஒருங்கிணைந்த கம்போடியாவை உருவாக்கி தொடங்கி வைத்தது, பிரபஞ்ச சக்கரவர்த்தியாக தன்னை அறிவித்துக் கொண்டது, லிங்க வழிபாட்டு முறையை தீவிரமாக அமல்படுத்தியது, மன்னர் தான் கடவுள் என்ற தேவராஜா கோட்பாட்டைக் கொண்டு வந்தது ஆகிய புரட்சித் திட்டங்கள் காரணமாக, இரண்டாம் ஜெயவர்மன் ஆட்சி, கம்போடியா நாட்டின் பொற்காலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
சியம் ரீப் நகரின் மேற்குப் பகுதியில் அம் யுக் என்ற சிவன் கோவில் இருக்கிறது. 8-ம் நூற்றாண்டு கோவிலான இதனைக் கட்டியவர் யார் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் ஏதும் இல்லை.
கம்போடியாவில் பின்னர் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு இந்தக் கோவிலே முன்னோடி என்றும், மன்னர் இரண்டாம் ஜெயவர்மன் தான் இந்தக் கோவிலைக் கட்டி இருக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
குலென் மலைப்பகுதியில் மகேந்திரபர்வதம் என்ற தனது தலைநகரை அமைத்தபோது, அங்கேயும் மன்னர் ஜெயவர்மன் ஏராளமான கோவில்களை கட்டி இருக்கலாம் என்றும், அவை மண்ணுக்குள் புதையுண்டு போய் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதினார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர் பிலிப்பி ஸ்டெர்ம் என்பவர், 1936-ம் ஆண்டு குலென் மலைப் பகுதி காட்டுக்குள் அலைந்து திரிந்து, அங்கு இடிபாடுகளாகக் காட்சி அளித்த 30-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களைக் கண்டுபிடித்தார். அவை அனைத்தும் செங்கற்களாலும், எரிமலைக் கற்களாலும் கட்டப்பட்டு இருந்தன.
ஆனால் அதன் பிறகு, தொல்பொருள் ஆய்வில் தொய்வு ஏற்பட்டது.
1975 முதல் 1998-ம் ஆண்டு வரை கம்போடியாவை கெமெர் ரூஜ் என்ற கொரில்லாப் படைகள் ஆட்டிப்படைத்தன.
அப்போது அவர்கள் குலென் மலைப்பகுதியைத் தங்களது மறை விடத்தின் தலைமையிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, அங்கே யாரும் வர முடியாத அளவுக்கு ஏராளமான கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர்.
ஆபத்தான பூமியாக இருந்த குலென் மலைப் பகுதி சீரமைக்கப்பட்டு, அங்கே 7 ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆய்வுகள் மீண்டும் தொடங்கின.
அப்போது பல இந்துக் கோவில்கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதுபோல நடைபெற்ற தொல் பொருள் ஆய்வுகள் மூலம், கம்போடிய மன்னர்கள், தமிழக மன்னர்களின் செயல்களைப் பின்பற்றி கோவில் களைக் கட்டியதோடு மக்களுக்குப் பயனளிக்கும் பிரமாண்ட நீர்ப்பாசன திட்டங்களையும் அங்கே அமைத்தார்கள் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
கம்போடிய மன்னர்கள் அமைத்த வியப்பான நீர்ப்பாசன திட்டங்கள் பற்றி அடுத்துப் பார்க்கலாம்.
(ஆச்சரியம் தொடரும்)
ஆயிரம் லிங்க வழிபாடு
மன்னர் ஜெயவர்மன், மகேந்திர பர்வதம் என்ற பெயரில் தலைநகரை அமைத்துக் கொண்ட குலென் மலை, வேறு பல சிறப்புக்களையும் தாங்கி இருக்கிறது.
இந்த மலைப்பகுதியில், சேண்ட் ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் மணல் கற்களும், எரிமலைக் கற்களும் அதிகம் கிடைக்கின்றன. இந்த கற்களை அங்கு இருந்து வெட்டி வந்து, 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சியாம் ரீப் நகரில் ஆயிரக்கணக்கான கோவில்கள் அந்தக் காலத்தில் கட்டப்பட்டன.
குலென் மலைப் பகுதியில் ஆறு ஒன்று ஓடுகிறது.
இந்த ஆறு, பாறைகள் வழியாக வரும் இடத்தில், அந்தப் பாறைகளின் மீது ஆயிரக்கணக்கான லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அதாவது, அந்த லிங்கங்களுக்கு நீர் அபிஷேகம் செய்தபடி ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மறைந்து கிடந்த இந்த ஆயிரம் லிங்கங்கள் 1969-ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் கம்போடியா, அமெரிக்கப் போரையும், அதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போரையும் சந்தித்துக் கொண்டு இருந்தது.
கெமர் ரூஜ் என்ற கொரில்லா படையினர் வைத்த கண்ணிவெடிகள் நிறைந்த இடம் என்பதால், அங்குள்ள ஆயிரம் லிங்கங்களைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
போர்கள் ஓய்ந்து, கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிறகு, 1999-ம் ஆண்டு முதல் அங்கு சுற்றுலாப் பயணிகளும் ஆய்வாளர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.