

நீங்கள் வழக்கமாக கண்ணாடி அணிகிறீர்களா? அல்லது அண்ணனோ, தந்தையோ? யாராவது கண்ணாடி அணிந்திருந்தால் அதை வாங்கி ஆசையுடன் அணிந்து பார்த்து மகிழ்வீர்களா? இப்படி கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது தோன்றியது தெரியுமா? இந்த கண்ணாடி களின் கதையை நீங்கள் அறிவீர்களா?...
பார்வைத்திறனை மேம்படுத்தி வழங்க நவீன கண்ணாடி அணியும் வழக்கம் தோன்றி சில நூறு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் படிப்பதற்காக கண்ணாடிகளை பயன்படுத்தும் வழக்கம் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் சிறிய கண்ணாடி வில்லைகளை எடுத்து சிறிய எழுத்துகள் மீது வைத்து அவற்றை சற்று பெரிதாக்கிப் பார்த்து படிக்கும் வழக்கமே இருந்தது. எளிதாக படிக்கத் துணை செய்த இத்தகைய உருப்பெருக்கு கண்ணாடிகளே (லென்ஸ்) மூக்குக் கண்ணாடிகள் உருவாக வழி வகுத்தன.
அணிந்து கொள்ளும் கண்ணாடிகள் 13-ம் நூற்றாண்டில் தோன்றியதாக கணிக்கப்படுகிறது. இத்தாலியில் 1284-ம் ஆண்டு வாக்கில் பெரிய மரச்சட்டத்தில் சிறிய கண்ணாடிகள் இணைக்கப்பட்ட கண்ணாடிகள் வழக்கத்திற்கு வந்தன. கைகளில் வைத்து பயன்படுத்தும் விதமாகவும், தேவையான நேரத்தில் மூக்கில் நிறுத்தி வைத்து படிக்க உதவும் வகையிலும் அவை இருந்தன. அப்போது மரம், செம்பு, தோல் மற்றும் எலும்புகளில் கண்ணாடி பிரேம்கள் இருந்துள்ளன.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளர்கள்தான் மூக்குக் கண்ணாடியை காதுகள், கழுத்துடன் இணைக்கும் கயிறுகளை முதன் முதலில் கண்ணாடியுடன் இணைத்தவர்களாவர்.
இப்போது காதுடன் இணைக்கும் கைப்பிடி இல்லாத கண்ணாடி பிரேம்களை அணிவது ஒரு ஸ்டைல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது இல்லையா? ஆரம்ப காலத்தில் கண்ணாடிகள் அனைத்தும் கைப்பிடி இல்லாமல்தான் இருந்தன. அவை மூக்கில் இருந்து தவறி விழுந்து உடைந்தன. அதனால்தான் அவற்றுடன் கயிறுவார்களை இணைத்து காதுடன் மாட்டிக்கொள்ளும் விதமாக ஸ்பெயின் நாட்டவர்கள் கண்ணாடி உருவாக்கினார்கள். அதுவே பின்னாளில் காதுகளுடன் இணைக்கும் கைப்பிடிகள் தோன்ற காரணமாகின.
அவர்கள் இணைத்த அந்த கயிறுகள் கண்ணாடிகளை தாங்கிப்பிடித்தன, கண்ணாடிகள் மூக்கின் மீது நிலையாக அமர்ந்து பார்வை சரியாக தெரியவும் துணை நின்றன. 1700-ம் ஆண்டு வரை இத்தகைய கண்ணாடிகளே வழக்கத்தில் இருந்தன. அதன் பின்னரே கைப்பிடிகளுடன் கூடிய கண்ணாடிகள் தயாராகின.
கண்ணாடிகள் இன்று உயர் திறன் கொண்ட பிளாஸ்டிக்கில் தயாராகின்றன. பெரும்பாலானவை கண்ணாடிகள் அல்ல. இவற்றில் புற ஊதாக் கதிர்களை வடிகட்டும் திறனும் சேர்க்கப்பட்டு நவீன கண்ணாடிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த தொழில்நுட்பம் கண்களை பாதிக்கும் புறஊதாக்கதிர்களை தடுத்து கண்களை காக்கிறது. இத்தகைய கண்ணாடிகள் மெல்லிய தடிமனிலும், எடை குறைந்ததாகவும், நல்ல உறுதித்தன்மையுடனும் காணப்படுகிறது. இவை எளிதில் உடைவதில்லை மற்றும் சிராய்ப்பு, விரிசல்களையும் தாங்குவதாக உள்ளன.
அறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் அமெரிக்காவின் நிறுவன தந்தையர்களில் ஒருவராகவும், இடி தாங்கியை கண்டுபிடித்தவராகவும் அறியப்படுகிறார். அவர்தான் இருகண் பார்வைக்கான லென்ஸ்களை தயாரித்த முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை, அறிமுகம் செய்தார். மேலும் ஒரே கண்ணாடி யில் 2 ஜோடி பார்வைத்திறன் லென்ஸ்களை சரிபாதியாக வெட்டி இணைத்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்கும் வகையிலும், கீழ் பாதி லென்ஸ் மூலம் படிக்கவும், பக்கத்தில் உள்ள பொருட்களை பார்க்கவும் வழி செய்தார். இதுவே பைபோகல் கண்ணாடிகள் எனப்படுகின்றன.
கண்ணாடி அணிவதால் கண்பார்வை பாதிக்கப்படுவதாகவும், தலைவலி உண்டாவதாகவும் பரவலான நம்பிக்கை உண்டு. நீண்ட நேரம் கண்ணாடி அணிந்தால் கண் சோர்வு ஏற்படலாம். அது தலைவலியைத் தூண்டலாம். மற்ற வகையில் கண்ணாடிகள் உடல்பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. கண்ணாடி அணிபவர்களின் பார்வைத்திறன் குறைந்து கொண்டே செல்வதற்கும் கண்ணாடிகள் காரணமல்ல. உடல்மற்றும் கண்ணின் செயல்பாடுகளே அதன் திறனில் பின்னடைவு ஏற்பட காரணமாகும்.
கண்ணாடிகளை பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே அணிவதாக நினைக்க வேண்டாம். கண்ணாடிகளை ஸ்டைலுக்காக பலர் விரும்பி அணிகிறார்கள். தூசுகள் கண்களில் விழாமல் தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் பலர் கண்ணாடி அணிகிறார்கள். ஆனால் பார்வைத்திறன் பாதிக்காதவர்கள் தொடர்ந்து கண்ணாடி அணிந்தால் அது கண் பார்வையை பாதிக்க வாய்ப்பு உண்டு.
கண்ணாடிகளின் அழகில் மயங்கி, நாணய சேகரிப்புபோல, கண்ணாடி சேகரிப்பில் ஈடுபடும் ஆர்வம் பலரிடம் உள்ளது. பிரபல மேல்நாட்டு பாடகரும், பாடல் ஆசிரியருமான சர் எல்டான் ஜான் என்பவர் விதவிதமான கண்ணாடிகளை சேகரிப்பதை தனது விருப்பமான பொழுதுபோக்காக கொண்டுள்ளார். அவரிடம் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஜோடி கண்ணாடிகள் உள்ளன.
சினிமா படங்களில் கதாநாயகர்கள் மற்றும் நடிகர்கள் வித்தியாசமான பிரேம்களுடன் கூடிய கண்ணாடிகளுடன் தோன்றி நம்மை ஈர்ப்பார்கள். பாலிவுட் நடிகரான டாம் குரூஸ், டாப் கன், ரே பான் போன்ற படங்களில் நடித்தபோது அணிந்த கண்ணாடிகள் உலகப்பிரசித்தி பெற்றவை. அவை ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தினர், ஆகாயத்தில் பறக்கும்போது கண்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளாகும். இவற்றுக்கு ஏவியேட்டர் கிளாஸ் என்று பெயர்.
தற்போதைய நிலவரப்படி உலக அளவில் சரிபாதி நபர்கள் கண்ணாடி அணிவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
செல்போன்கள், கணினிகள் பயன்பாடு பெருகிய பின்னர், கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. தற்போது சிறுவர்கள் பலரும் விரைவிலேயே கண்ணாடி அணியும் பழக்கத்திற்கு தள்ளப்படுகிறார்கள். எனவே குழந்தைகள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுதான் கண்களை பாதுகாக்க சிறந்த வழி.
கண்கள் வழியேதான் உலகின் 85 சதவீத காட்சிகளை பார்த்து அறிந்து அறிவை வளர்க்கிறோம். எனவே வாழ்க்கை முழுவதும் கண்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆகவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.