

கொரோனா காரணமாக தமிழக கல்விச்சூழல் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் எந்த தேர்வு எழுதவுமே மாணவ சமுதாயம் தயாரில்லாத நிலை நிலவுவதால், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்யும் நீட் தேர்வை தமிழகத்தில் நடத்த முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத குறைவான தமிழக மாணவர்களே விண்ணப்பித்து இருந்தனர் என்பதும் கவனத்திற்குரியது ஆகும். அதிலும் அரசு பள்ளி மாணவர்கள் மிகக்குறைவாகவே இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 630 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டோ அதில் பாதியளவு மாணவர்கள்கூட விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது கவலையளிக்கிறது. விண்ணப்பித்தவர்களிலுமே கூட தற்போது பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வை தவிர்க்க கூடிய சூழலே நிலவுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதுபோன்ற தமிழக அரசின் முயற்சிகள் ஒருபுறம் நடக்கின்ற போதிலும், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களிடம் ஆர்வம் இல்லை என தெரியவருகிறது. அதுவும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு முற்றிலும் தயாரற்ற நிலையில் உள்ளனர் என ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து கடுமையாக எதிர்த்து போராடி வந்தாலும், அதில் பங்கெடுத்து கொள்வதில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்தே வந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக 17 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களிலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு செல்லாமல் பின்வாங்கியவர்கள் 15 ஆயிரத்து 919 பேர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 60 சதவீதம் குறைந்துள்ளனர். மேலும், இதில் 90 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பில்லை என்பதால் இப்படி பின்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரியவருகிறது.
தமிழக அரசு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்த 412 பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. ஆனால், இந்த ஆண்டு அவை மிக காலதாமதமாக செப்டம்பர் மாதம்தான் செயல்பட ஆரம்பித்தது. ஒன்றிரண்டு வகுப்புகளே அங்குமிங்குமாக நடந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல், பொங்கல் ஆகியவற்றால் பயிற்சி மையங்களின் செயல்பாடு முற்றிலும் தடைபட்டது.
ஆனால், பொங்கல் முடிந்து தொடங்கலாம் என்ற நிலையில் மாணவர்கள் இறுதி தேர்வுக்கு மும்முரமாக தயாராக வேண்டிய சூழல் வந்து விட்டது. ஆகவே, இறுதி தேர்வு முடிந்தவுடன் நீட் பயிற்சி வகுப்புகளை தீவிரமாக நடத்துவதன் மூலம் மாணவர்களை ஓரளவாவது தயார்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில், கொரோனா பிரச்சினை விசுவரூபமெடுத்து விட்டது. அதைத்தொடர்ந்து ஊரடங்கு என்பதால், சமூகமே முடங்கி விட்டது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வை தமிழில்தான் எழுதி வருகின்றனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இன்னதென அடையாளம் காணப்பட்டவற்றை தமிழில் மொழிபெயர்த்து மாணவர்களுக்கு வழங்கவில்லை. அரசு மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த தரமான ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. எனவே, எல்லா சூழல்களையும் கணக்கில் கொண்டு பார்த்தால், தேர்வு என்ற போர்க்களத்திற்கு செல்வதற்கான ஆயுதங்களுமற்ற நிராயுதபாணியானவர்களாக அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பதே நிதர்சனம்.
கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங் உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செப்டம்பரில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், நீட் தேர்வு ஏற்கனவே இருமுறை அறிவித்து ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உக்கிரமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தங்களை முழுவதுமாக தயார் செய்து கொண்டு பங்கேற்பது சந்தேகமே. அதற்கான தேர்வு மையங்கள் தற்காலிக கொரோனா மருத்துவ முகாம்களாக மாறியுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து மாநில கட்சிகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட தேசிய கட்சிகளும் நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்ற கருத்தில் ஒருமித்த நிலையில் உள்ளதால், தற்போதைய அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு மீண்டும் ஒரு மசோதா கொண்டு வர வேண்டும் என்ற கருத்து அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே நிலவுகிறது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் கேட்டபோது, கல்வி என்பது கன்கரண்ட் லிஸ்டில்தான் உள்ளது. அதாவது கல்வி விஷயத்தில் மத்திய அரசு, மாநில அரசு இருவருக்குமே சம அதிகாரம் உள்ளது. ஆகவே, கல்வி தொடர்பாக சட்டம் கொண்டு வரும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. ஏற்கனவே அனுப்பிய மசோதா திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், அதில் எந்த காரணத்திற்காக என்பது சொல்லப்படவில்லை. ஆகவே, அந்த மசோதாவிற்கு புத்துயிரூட்டி திருப்பி அனுப்பி மாணவர்களின் எதிர்காலம் கருதியும், அசாதாரண சூழல் கருதியும் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரலாம். இந்த விலக்கு கோருவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு தடையாக அமையாது. இந்தியா முழுக்க இருக்கும் ஒரு சட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியுமா? என்றால், முடியும் என்பது ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு அடுத்தநாளே ஒப்புதல் கிடைத்த வரலாறே எடுத்துக்காட்டாகும் என்றார்.
தற்போதைக்கு தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் இல்லாத நிலையில் அதை தள்ளி வைக்க கடந்த கால மசோதாவை மீண்டும் புதுப்பிப்பது ஒன்றே தமிழக அரசின் முன்புள்ள ஒரே வழியாக தெரிகிறது. மாநில அரசுக்கு கல்வி தொடர்பான சட்டங்கள் கொண்டுவர உரிமையுள்ளது என பாராளுமன்ற நிலைக்குழுவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் நீட் தேர்வு நடத்தினால் ஏற்கனவே பலமுறை தேர்வு எழுதியவர்களே மீண்டும் எழுதி கணிசமான இடங்களை கைப்பற்றி விடுவார்கள். கடந்த ஆண்டு தேர்வின் முடிவு நமக்கு பல உண்மைகளை பட்டவர்த்தனமாக உணர்த்தியது. வெற்றி பெற்றவர்களில் 66 சதவீதத்தினர் பலமுறை தேர்வு எழுதியவர்கள்தான். எனவே, பலமுறை பணம் கட்டி தன்னை தயார்படுத்திக் கொண்டவர்கள் நிறைந்துள்ள ஒரு சூழலில் முதல் முறையாக களம் காணும் தமிழக கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தயார் செய்யப்படாத அரசு பள்ளி மாணவர்கள் எப்படி போட்டி போடமுடியும்?
எனவே, நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டாவது தமிழக அரசு விலக்கு பெற்று தந்தால் அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த வரவேற்பை பெறலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
மருத்துவக்கல்லூரிகள் ஒரு பார்வை
இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் -----------------465
மொத்த மருத்துவ இடங்கள் ----------------------------66,771
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் -------------24
மொத்த இடங்கள் --------------------------------------3,350
தேசிய ஒதுக்கீடு 15 சதவீதம் போக தமிழகத்திற்கானவை ---3,100
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் ---------24
மொத்த இடங்கள் -------------------------------------3,350
அரசு மருத்துவ கல்லூரி கட்டணம் (ஆண்டுக்கு) ------- ரூ.13,600
அரசு பல் மருத்துவ கல்லூரி கட்டணம் (ஆண்டுக்கு)----- ரூ.11,600
தனியார் கல்லூரியில் அரசு கோட்டாவுக்கான ஆண்டு கட்டணம் - ரூ.4 லட்சம்
தனியார் கல்லூரி நிர்வாக கோட்டாவிற்கான கட்டணம் - ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை
நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆண்டு கட்டணம் - ரூ.18.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை
நீட் தனியார் பயிற்சி மையக்கட்டணம்- ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை.