சூரிய ஒளியும்... இரவு தூக்கமும்..!

உடல் மற்றும் மன நலனுக்கு இரவு தூக்கம் முக்கியம். அது மட்டுமின்றி மனநிலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழ்ந்த தூக்கம் மூளைக்கு போதுமான ஓய்வு அளிக்க வித்திடும். அதனால்தான் தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியையும், மனஅமைதியையும் உணர்கிறீர்கள்.
சூரிய ஒளியும்... இரவு தூக்கமும்..!
Published on

இதற்கு எதிர்மாறாக தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் காலையில் எழும்போதே சோர்வும் குடிகொண்டுவிடும். கூடவே ஒருவித எரிச்சல் உணர்வும் எட்டிப்பார்க்கும். இன்றைய நவீன வாழ்க்கையில் மன அழுத்தமும், பதற்றமும் பொதுவான விஷயங்களாகி விட்டன. மேலும் தூக்கம் தொடர்பான தொந்தரவுகளும் அதிகரித்துள்ளன. சிலர் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மாத்திரை உட்கொள்கிறார்கள். அது தூக்கத்தை வரவழைப்பது போல் தோன்றலாம். அதனால் பக்கவிளைவுகள் இல்லாமல் இல்லை. இயற்கையான வழிமுறையில் தூங்கி எழுவதுதான் ஆரோக்கியமானது.

பகல் நேரத்தில் சூரிய ஒளி படும் பகுதியில் அதிக நேரத்தை செலவிடுவது இரவில் சிறந்த தூக்கத்திற்கு உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய ஒளிக்கும், தூக்கத்தின் தரத்துக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அலுவலகத்தில் பணி புரிபவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இறுதியில், அலுவலகத்தில் போதுமான வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் அல்லது பிரகாசமான சூரிய ஒளி படும் பகுதியில் இருப்பவர்கள் இரவில் நன்றாக தூங்கி எழுந்தார்கள். அப்படி சூரிய ஒளியின் தாக்கத்தை அனுபவிக்காதவர்களை விட மனச்சோர்வு, மன அழுத்தத்தை குறைந்த அளவிலேயே உணர்ந்தனர் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.

இந்த கிரகத்தில் உள்ள மற்ற உயிரினங்களைப் போலவே மனிதர்களும், சர்க்காடியன் ரிதம் எனப்படும் உயிர் கடிகாரத்தைக் கொண்டுள்ளனர். இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் இந்த சுழற்சியை கடைப்பிடிக்க செய்கிறது. உடல், மன செயல்பாடுகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்கவும் செய்கிறது.

ஆனால் தூங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சரியான நேரத்தை நிர்ணயிக்காததால், இந்த கடிகாரம் சமநிலையற்றதாகிறது. சர்க்காடியன் ரிதம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும், அது நம் மூளையில் உள்ள ஹைபோதலாமஸால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதில் உள்ள நரம்பு செல்கள் பார்வை நரம்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படும். வெளிச்சத்தை பார்க்கும்போதோ, உணரும்போதோ பார்வை நரம்புகள் உடனே மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

அப்போது உடலின் வெப்ப நிலை உயரும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இந்த ஹார்மோன்தான் நம்மை தூங்க வைக்கிறது. சூரியன் மறையும்போது இது நேர்மாறாக நடக்கும். சமிக்ஞைகள் மூளையை அடையும்போது வெப்ப நிலை குறையும். இதய துடிப்பும் குறையும். மெலடோனின் சுரப்பு தூண்டப்பட்டு தூக்கத்தை வரவழைத்துவிடும்.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, பகலில் அதிக வெளிச்சத்தையும், இரவில் குறைந்த வெளிச்சத்தையும் உணரும்போது, அது சர்க்காடியன் ரிதத்தை அளவீடு செய்து, சிறந்த தூக்கத்திற்கு உதவும். ஆனால் இரவில் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவது போன்ற செயல்கள் அதை சீர்குலைத்துவிடும்.

ஏனென்றால், சூரிய ஒளியை ஒத்த நீல நிற ஒளி திரையில் இருந்து வெளிப்படும். அது உடல் இன்னும் வெளிச்சமான பகுதியில் இருப்பதற்கான சமிக்ஞையாக மாறிவிடும். அதனால் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க வைத்து தூக்கத்தை சீர்குலைத்துவிடும். எனவே, சிறந்த தூக்கத்திற்கு, பகலில் போதுமான சூரிய ஒளியைப் பெறுங்கள் என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com