

அர்த்தசாஸ்திரம் மற்றும் மனு ஸ்மிருதி நூல்களில் வரி விதிப்பு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. மவுரியர் ஆட்சிக்காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவது, காட்டுப் பொருட்களுக்கு வரி, உலோகங்களுக்கு வரி, உப்பு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன. அதன் பிறகு சுல்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் கிராஜ் என்று நில வரி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அல்லாதோர் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டு வந்தது.
அக்பர் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் பல்வேறு வரி முறைகளை கொண்டு வந்தார். தற்போதுள்ள வருமான வரி அமைப்பு போல் ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து வரியை விதிக்கக்கூடிய முறை கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சுரண்டல் நோக்கில் பல்வேறு வரி முறைகள் கொண்டு வரப்பட்டன. மகல்வாரி முறை, ரயத்துவாரி முறை, ஜமீன்தாரி முறை என பல்வேறு வரி முறைகளைக் கொண்டு வந்தனர். 1922-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. வரி பிரிவை கண்காணிப்பதற்கென வரித்துறை அமைப்பு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது.
மறைமுக வரியில் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை அடங்கும். இந்த மறைமுக வரி அனைத்தையும் ஒரே வரியாக மாற்றி, நாடு முழுவதும் ஒரே வரி முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டு உள்ளது. 2000-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, முதன்முதலில் நாட்டில் உள்ள மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒருமுனை வரியை கொண்டு வர, அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது..
அதன் பிறகு 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் ஜி.எஸ்.டி. மசோதாவை 2010-ம் ஆண்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைத்தார். இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டிற்கு வாட் வரியை கொண்டு வருவது மிகக்கடினம் என்ற கருத்து நிலவியது. ஆனால், அதனை 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ப.சிதம்பரம் அமலுக்கு கொண்டு வந்தார். 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜி.எஸ்.டி. வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய விற்பனை வரியில் இருந்து வழங்குவோம் என்று அறிவித்தது. அதையொட்டி மாநிலங்கள் ஆதரவு தந்த நிலையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது.