குழந்தையை தத்தெடுக்கும் முறை

குழந்தை தத்தெடுப்புக்காக தமிழகத்தில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தையை தத்தெடுக்கும் முறை
Published on

குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்கு குழந்தைகள் இல்லாததே. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக குழந்தைப் பேறின்மை உருவெடுத்து நிற்கிறது.

நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என சொல்லிக்கொண்டே செல்லலாம். அவற்றில், நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத்தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது. பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்துவள ஆதார மையம் செயல்படுகிறது.

சுருக்கமாக இதை கர என்று அழைக்கிறார்கள். இதுபோக அனைத்து மாநிலங்களிலும் மாநில தத்துவள ஆதார மையம் இருக்கின்றன. தமிழகத்தில், சமூக நலத்துறை ஆணையர் தலைமையில் தத்துவள மையம் செயல்படுகின்றது.

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயதுடைய குழந்தையை தத்தெடுக்க, அந்த தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4 முதல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தம்பதியின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுப்பதே சிறந்த வழி. இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கும் போது, பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். பாசமாக வளர்த்த குழந்தைகளும் கைவிட்டு போகக்கூடிய சூழலும் வரலாம் என்பதால் இதில் மிகவும் கவனம் தேவை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com