கண் சிமிட்டிய தேவதை காதல் பாட்டு பாடுகிறார்

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள சினிமாவில், கவர்ச்சியாக கண்சிமிட்டி இந்தியா முழுவதும் இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த நடிகை பிரியா வாரியர் இப்போது, காதல் பாட்டு பாடும் பின்னணி பாடகியாக புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
பிரியா வாரியர்; பெற்றோர் மற்றும் தம்பியுடன் பிரியா வாரியர்
பிரியா வாரியர்; பெற்றோர் மற்றும் தம்பியுடன் பிரியா வாரியர்
Published on

பைனல்ஸ் என்ற மலையாள சினிமாவில் நீ மழை வில் போலே.. என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.

காதல் பற்றியும், காதல் பாட்டு பற்றியும் அவரது கலந்துரையாடல்!


பாடகியாகும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

ஒரு அடார் லவ் சினிமாவில் நடித்ததில் இருந்து அதன் கேமராமேன் சினு சித்தார்த்தும், இசை அமைப்பாளர் கைலாஷ் மேனனும் எனக்கு நண்பர்களாகிவிட்டார்கள். நான் படப்பிடிப்பு நேரத்தில் அவ்வப்போது பாடிக்கொண்டிருப்பேன். அதை சினு பதிவுசெய்வார். பைனல்ஸ் படத்தில் மேற்கத்திய சாயலில் ஒரு பாடலை பாட வேண்டும் என்பதற்காக, புதிய பாடகியை கைலாஷ் தேடிக்கொண்டிருந்தபோது நான் பாடிய ஆங்கில பாடல் ஒன்றை சினு, அவருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அப்படித்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

நான் யு.கே.ஜி. படித்த போதிலிருந்து கர்நாடக இசை பயின்றுகொண்டிருக்கிறேன். ஆனாலும் சினிமாவிற்காக பாடுவதற்காக சென்றபோது எனக்குள் பதற்றம் உருவாகிவிட்டது. முதலில் நான் கேமரா முன்னால் நின்றபோதுகூட அந்த அளவுக்கு பதற்றம் அடைந்ததில்லை.

நீ மழை வில் போலே.. என்று நான் பாடிய பாடலைக்கேட்டுவிட்டு, நிறைய பேர் என்னை அழைத்து பாராட்டினார்கள். நான் என் திறமையை பற்றிய விமர்சனங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். மோசமான விமர்சனம் வந்து எனக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை கெடுத்துவிடக்கூடாது என்ற பயமும் எனக்கு உண்டு. நேரமின்மையால் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே நான் நாட்டிய பயிற்சியை நிறுத்திவிட்டாலும், இசை பயிற்சியை இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்ன சொன்னாலும் அது உடனே பிளாஷ் நியூஸ் ஆகிவிடுகிறது. நீங்கள் பிளாஷ் நியூஸ் பிரியா ஆகிவிட்டதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

பிரியா நீ என்ன சொன்னாலும் அது பிளாஷ் ஆகிவிடும் என்று, என்னை நானே தயார் செய்துவைத்திருக்கிறேன். இனி என்னை பற்றி எந்த பிளாஷ் நியூஸ் வந்தாலும் நான் கவலைப்படபோவதில்லை. எனக்கு அது பழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் என்னை பற்றிய செய்திகளும், எதிரான விமர்சனங்களும் வந்தால் கவலை வரும். அதை எல்லாம் நான் ஒரு பொருட்டாக இப்போது கருதுவதில்லை என்று சொன்னாலும் அவ்வப்போது அது பற்றிய கவலை வரத்தான் செய்கிறது. நல்ல நண்பர்கள் என்று கருதியவர்கள்கூட மோசமாக பேசும்போது அதிர்ச்சி யாகிவிடுகிறது. அப்படி அவர்கள் சொல்லும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்திடவில்லை.

எனக்கு எதிராக இணையதள வன்முறைகள் நடந்தபோதிலும், சினிமாவுக்கு வந்ததை நான் தவறான விஷயமாக ஒருபோதும் கருதியதில்லை. சினிமாவுக்கு வருவது எனது சிறுவயது ஆசை. பெற்றோர் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். படிப்புக்கு இடைஞ்சல் ஏற்படாத அளவுக்கு நடிப்பை தொடர சொல்கிறார்கள். இப்போதும் எதிர்மறையான விமர்சனங்களை பார்த்து நான் மனந்தளர்ந்து போனாலும் பெற்றோர்தான் எனக்கு ஊக்கம் தருகிறார்கள்

காதலிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?

காதலிக்க எனக்கு நேரமில்லை. அடார் லவ் கதாநாயகன் ரோஷனுக்கும் எனக்கும் காதல் என்று செய்திகள் வருகின்றன. கேமராவுக்கு முன்னாலும், கேமராவுக்கு பின்னாலும் எங்களுக்குள் ஜாலியான கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆனால் அது வெறும் நட்பு மட்டும்தான். ரோஷன் எனது நல்ல நண்பன்

ஸ்ரீதேவி பங்களாவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் நடித்திருக்கும் ஸ்ரீதேவி பங்களாவிற்கும், நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 19 வயதான நான் அதில் 35 வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது ஒரு சவாலான கதாபாத்திரம். அது எனக்கு புகழைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

கவர்ச்சியாக நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?

கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று நான் சொல்ல வில்லை. கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக தோன்றுவது நடிகையின் கடமை. ஆனாலும் எனது எல்லையைத்தாண்டி நான் வரமாட்டேன். உடை விஷயத்திலும் நான் வெளிப்படையாக பேசிவிடுவேன். லவ் ஹாக்கர்ஸ் என்ற இந்தி படத்தின் படப் பிடிப்பு செப்டம்பர் மாதம் நடக்க இருக்கிறது. தெலுங்கு, கன்னட படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன்

விரும்பி சாப்பிடும் உணவு எது?

என் அம்மா பிரீதா நன்றாக சமைப்பார். அவர் தயாரிக்கும் ஆலு பிரியாணியை நான் விரும்பி சாப்பிடுவேன். சிறுமியாக இருந்தபோது மும்பையில் வசித்ததால் வடஇ்ந்திய உணவுகளோடு எனக்கு பிரியம் அதிகம். நான் சுத்த சைவம். உணவுக் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நிறைய சாப்பிடுவேன். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக என் உடல் எடை அதிகரிக்காது.

என் வாழ்க்கையில் கிடைத்த புகழ் திடீரென்று ஒரே நாளில் உருவானது. அது எப்படி கிடைத்தது என்பதை புரிந்துகொள்ளக்கூட எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ நேரம் கிடைக்கவில்லை. முதலில் ஜூனியர் ஆர்டிஸ்டாக அறிமுகமானேன். பின்பு கதாநாயகி, அடுத்து பாடகி என்ற திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் வாழ்க்கை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்தது. அதை நினைத்து எனக்கு கர்வம் வந்துவிடகூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்

நல்ல வேண்டுதல்தான்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com