

வடக்கு பிரேசிலின் பியாயுயி மாகாணத்தின் லிலா இர்மா டுல்சி என்ற இடத்தில் வாழும் ஒரு சமூகத்தினர், போதை மருந்து கடத்தும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு மிகவும் சவாலாக உள்ளது.
போலீசார் வருவது குறித்து இவர்களுக்கு முன்கூட்டியே எப்படித் தெரிகிறது என்பது பிடிபடாமல் இருந்தது. இந்நிலையில்தான் ஒரு கிளி குறித்த விஷயம் போலீசாருக்குத் தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்தக் கிளிக்கு போலீசார் வந்தால் போலீஸ்... போலீஸ்... என்று கத்தி சிக்னல் கொடுப்பதற்குப் பழக்கி வைத்திருந்தனர்.
அதைப் பற்றி அறிந்த போலீசார், அந்தக் கிளியைக் கைது செய்துள்ளனர்.
அக்கிளியைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், அது மிகவும் கீழ்ப்படியும் ஒரு கிளியாகும். போலீசார் கைது செய்தவுடன் அது தன் வாயை இறுக மூடிக்கொண்டது. இதுவரை அதனிடம் இருந்து ஒரு சப்தம் கூட வரவில்லை. அந்த அளவுக்கு அக்கிளிக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இந்தக் கிளியை ஒப்படைத்துவிடலாமா எனப் போலீசார் யோசித்து வருகின்றனர்.