இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை கொரோனா பாதிப்புகள், எண்ணெய் விலை உள்ளிட்ட உலக நிலவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை கொரோனா பாதிப்புகள், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட உலக நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை கொரோனா பாதிப்புகள், எண்ணெய் விலை உள்ளிட்ட உலக நிலவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நிகர சரிவு

கடந்த வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 3,473.14 புள்ளிகள் சரிவடைந்து 34,103.48 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1,034.25 புள்ளிகள் இறங்கி 9,955.20 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில், இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். கொரோனா ஏற்படுத்தும் தாக்கம், எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற உலக நிலவரங்கள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ்

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகள் சந்தைகளில் இன்று (திங்கள்கிழமை) பட்டியலிடப்படுகிறது. பங்குச்சந்தைகள் தடுமாறி வரும் நிலையில் இப்பங்கு விலை ஏறுமா, இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்போது பங்கு வெளியீட்டில் களம் இறங்கி உள்ள ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனம் வெற்றிகரமாக அதனை நிறைவு செய்யுமா என்ற ஐயப்பாடும் இருக்கிறது.

இந்த வெளியீடு இம்மாதம் 4-ந் தேதி தொடங்கியது. முதலில் திட்டமிட்டபடி கடந்த 6-ந் தேதியே (வெள்ளிக்கிழமை) வெளியீடு நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் இறுதி நாளில் முதலீட்டாளர்கள் மத்தியில் 50 சதவீத பங்குகளுக்கு மட்டுமே தேவைப்பாடு இருந்தது. அந்த நிலையில், பங்கு வெளியீட்டுக் காலம் மார்ச் 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் சந்தை வட்டாரங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் தொடர்பாகவும், முதல் 11 மாதங்கள் (2019 ஏப்ரல்-2020 பிப்ரவரி) தொடர்பாகவும் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. மொத்த விலை பணவீக்கம் குறித்த தகவல் இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஏற்பவும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

நிபுணர்கள் கருத்து

உலக நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், பல மைய வங்கிகளும் ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்க தயாராகி இருப்பதாக தகவல் வெளியானதால் ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடங்கின. எனவே ஊக்குவிப்பு சலுகைகளைப் பொறுத்து உலக பங்கு வர்த்தகம் ஏற்றம் காணவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் பீதியால் உலகமே குலுங்கி உள்ள நிலையில் சென்ற வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் ஏற்றத்தாழ்வுகளை கண்டது. நடப்பு வாரத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற வெளிநிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com