முதல் வைரமும், கிம்பர்லி வைரச் சுரங்கமும்..!

வைரம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் முகாமிட்டு நகரம் ஒன்றை உருவாக்கினர். அந்த நகரம்தான் தற்போது வைரச்சுரங்கத்திற்குப் பெயர் போன ‘கிம்பர்லி’.
முதல் வைரமும், கிம்பர்லி வைரச் சுரங்கமும்..!
Published on

தென்ஆப்பிரிக்காவின் கேப் காலனியில் உள்ள ஆரஞ்சு நதியை அடுத்த ஒரு கிராமம் அது. 18-ம் நூற்றாண்டு வரை அது ஒரு சாதாரண கிராமம். ஆனால் ஒரு சிறுவன் கண்டெடுத்த பளபளக்கும் கண்ணாடிப் பொருள் ஒன்று, அந்த கிராமத்தையே பிரபலமாக்கியது. விநோதமான அந்த பொருள், விலைமதிப்பில்லாத வைரம் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. சிறுவனின் தந்தை, அண்டை வீட்டாரிடம் அதை காட்ட, அவரோ வேட்டையாட வந்த ஒரு ஆங்கிலேயரிடம் காண்பித்தார்.

அதை அவர் ஒரு நிபுணரிடம் கொடுத்துப் பரிசோதிக்கச் சொன்னார். அந்தப் பரிசோதனையில் அந்தக் கண்ணாடிக்கல் 21.25 காரட் எடையுள்ள வைரம் என்பது தெரியவந்தது. அப்போதே அதன் மதிப்பு 550 பவுண்டு! உடனே அதை பட்டை தீட்டி மெருகேற்றி, 10 காரட் வைரமாக்கி அதற்கு 'யுரேகா வைரம்' (அதிசய கண்டுபிடிப்பு வைரம்) என்று பெயரிட்டனர். அப்போது தென் ஆப்பிரிக்கா ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்ததால், அதை விக்டோரியா மகாராணிக்கு பரிசாகக் கொடுத்தனர்.

அதன் பின்னர் அந்த இடத்தில் வைரம் இருக்கும் என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கேப் மாநிலத்தில் வைரவேட்டையைத் தொடங்கினர். வைரம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் முகாமிட்டு நகரம் ஒன்றை உருவாக்கினர். அந்த நகரம்தான் தற்போது வைரச் சுரங்கத்திற்குப் பெயர் போன 'கிம்பர்லி'.

தற்போது கிம்பர்லியில் ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்படும் வைரங்களின் எடை கிட்டத்தட்ட 30 டன். அள்ள அள்ள குறையாமல் அட்சயபாத்திரம் போல வைரத்தை கொடுத்து வருகிறது கிம்பர்லி வைரச் சுரங்கம்.

இதற்கிடையே பல கைகளுக்கு மாறிய முதல் வைரம் 1967-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கே மீண்டும் வந்து சேர்ந்தது. தற்போது கிம்பர்லி சுரங்க அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது வரலாற்றுச் சிறப்புமிக்க யுரேகா வைரம்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com