

இந்திய சுதந்திர போராட்டத்தில் புதிய மைல்கல்லாக அமைந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட இடம் தான் ஆகஸ்ட் கிராந்தி (ஆகஸ்டு புரட்சி) மைதானம். சுதந்திர போராட்டத்தில் திருப்பு முனை தந்த இந்த மைதானம் மும்பை கிரான்ட் ரோடு அருகே உள்ளது.
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி மவுலானா அபுல்கலாம் ஆசாத் தலைவராக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தொடங்கியது. மாநாடு நள்ளிரவு தாண்டி மறுநாள் வரை நீடித்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பங்கேற்க மைதானத்திற்குள் சுமார் 10 ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். இதேபோல ஒலிப்பெருக்கியில் தலைவர்களின் பேச்சை கேட்க மைதானத்திற்கு வெளியிலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டனர். ஆகஸ்டு 8-ந் தேதி மாநாட்டுக்கு மகாத்மா காந்தி வருகை தர இருந்ததால் அவரை பார்க்கவும், பேச்சை கேட்கவும் மேலும் கூட்டம் சாரை சாரையாக வந்தது.
பெருந்திரளான மக்கள் கூடிய இந்த கூட்டத்தின் மத்தியில் மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
காந்தியின் இந்த பேச்சு ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பட்டி, தொட்டி எங்கும் மக்களிடையே விடுதலை வேட்கையை உருவாக்கியது. மக்கள் தன்னெழுச்சியாக சுதந்திர போராட்டத்தில் குதித்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஓரிரு நாட்களில் நாடு முழுவதும் 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கம், நீண்ட நாட்கள் இந்தியாவை ஆள முடியாது என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களிடம் விதைத்தது.
ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஆகஸ்டு 9-ந் தேதி தேசிய கொடியேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது. கூட்டத்தில் நேரு பேச இருந்தார். 8-ந் தேதி நள்ளிரவே முக்கிய தலைவர்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது. மும்பையில் குறிப்பாக ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. போலீசாரின் கட்டுப்பாட்டில் அந்த இடம் இருந்தது. போலீசாரின் தடியடியையும் தாண்டி அருணா அசப் அலி என்ற பெண் அங்கு வந்து, மக்களிடையே சில வார்த்தைகள் பேசிவிட்டு தேசியக்கொடியை ஏற்றினார். இதை எதிர்பாராத போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கொடியை இறக்கினர். அந்த பகுதியே போர்க்களமானது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள். 170 பேர் படுகாயமடைந்தனர்.
தேசிய கொடியை மீட்க நடந்த இந்த போராட்டத்தால் மைதானமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. எனவே ஆகஸ்ட் கிராந்தி மைதானம் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய நினைவிடமாக உள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்டு புரட்சி தினத்தில் அனைத்து கட்சியினரும் மைதானத்தில் உள்ள நினைவு இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர போராட்ட களமாக மாறுவதற்கு முன் அந்த மைதானம் பசு மாடுகளை குளிப்பாட்டும் இடமாக இருந்துள்ளது. அப்போது அதன் பெயர், கவாலியா டேங்க் மைதானம். தென் மும்பையை சுற்றி வாழும் மக்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தான் பசுக்களை குளிப்பாட்டி வந்துள்ளனர். எனவே தான் அந்த மைதானம் கவாலியா டேங்க் என அழைக்கப்பட்டுள்ளது. காய் (பசு), வாலா (மாட்டுக்காரர்) என்ற வார்த்தை சேர்ந்து தான் கவாலியா என வந்து உள்ளது.
தற்போது இந்த மைதானம் 5 பகுதிகளாக உள்ளது. கால்பந்து, கைப்பந்தும் விளையாடப்படுகிறது. அக்டோபர் 2, ஆகஸ்டு 15, ஜனவரி 26 போன்ற நாட்களில் அரசியல் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தும் போது தான், இது வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்பதையே உணர முடியும். வருடத்தின் மற்ற நாட்களில் இது விளையாட்டு மைதானமாகவே உள்ளது.