

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ திரைப்படத்தில் வரும் முதல் காட்சியில், படத்தின் கதாநாயகனும், அவரது நண்பரும் சேர்ந்து, தொழிலதிபர் ஒருவரின் இடத்திற்குள் புகுந்து ரகசியமான ஆவணங்களை எடுக்க முயற்சிப்பார்கள். அப்போது அந்த தொழிலதிபர் கதாநாயகன் டிகேப்ரியோவை மடக்கிப் பிடித்து, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவார்.
அந்த சமயத்தில்தான் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் புரியவரும். படத்தில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது எதுவும் நிஜம் அல்ல. அத்தனையும் கனவு. அதுவும், ஆழ்மனதில் பதிந்த தகவல்களை திருடுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கனவு. கதாநாயகன் கனவில் இருந்து விடுபட்டு நிஜ உலகிற்கு வரும் அந்த காட்சியை கிறிஸ்டோபர் நோலன் தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக படமாக்கியிருப்பார்.
அதே சமயம், கனவில் இருந்து விடுபட்டு ஒரு மனிதன் நிஜ உலகிற்கு வரும் அந்த நொடி எப்படி இருக்கும்? கனவிற்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத தவிப்பு எப்படி இருக்கும்? என்பதை ‘Dream is Collapsing' என்ற பின்னணி இசைக்கோர்வை மூலம் நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்.
ஹாலிவுட் திரையுலகில் தற்சமயம் நம்பர் 1 இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஹான்ஸ் புளோரியன் ஜிம்மர். இவர் 1957-ம் ஆண்டு ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் பிறந்தார். இளம் வயதில் பல்வேறு இசைக்குழுக்களில் கீபோர்டு வாசித்த இவர், விளம்பர படங்களுக்கு ஜிங்கிள்ஸ் எனப்படும் இசைத்துணுக்குகளை உருவாக்கிக் கொடுத்து வருமானத்தை தேடிக் கொண்டார்.
இதன் பின்னர் பிரிட்டிஷ் இசையமைப்பாளர் ஸ்டான்லி மயர்ஸ் உடன் கூட்டணி சேர்ந்து, 1980-களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வந்தார். 1988-ம் ஆண்டு ‘ரெய்ன் மேன்’(Rain Man) திரைப்படத்திற்காக ஹான்ஸ் ஜிம்மர் முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் ஹாலிவுட் வட்டாரங்களில் ஜிம்மரின் புகழ் உயர்ந்தது. பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் வந்தன.
தி லயன் கிங்(The Lion King), கிளாடியேட்டர்(Gladiator), பேட்மேன்(Batman), பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்(Pirates of the Carribean), தி டாவின்சி கோட்(The Davinci Code), இன்டர்ஸ்டெல்லார்(Interstellar), டியூன்(Dune) உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார். இதுவரை 12 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். இது தவிர பல கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம்கள் மற்றும் ஆவணப் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஹான்ஸ் ஜிம்மர், பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரிகளை(Concert) நடத்தி வருகிறார். பொதுவாக இசைக் கச்சேரிகளில் பாடல்கள் பாடப்படும். ஆனால் பின்னணி இசைக் கோர்வைகளை மட்டுமே வைத்து ஹான்ஸ் ஜிம்மர் தனது கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
திரைப்படங்களில் இசை என்பது இன்றியமையாத ஒரு கதாபாத்திரமாக இருக்க வேண்டும் எனவும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்துவதே தனது நோக்கம் என்றும் ஹான்ஸ் ஜிம்மர் கூறியுள்ளார்.
‘இன்டர்ஸ்டெல்லார்’ ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருந்தாலும், அந்த படத்தின் மையக்கரு தந்தை-மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். கிறிஸ்டோபர் நோலன் முதலில் ஹான்ஸ் ஜிம்மரிடம் கதையை சொன்னபோது, படத்தில் உள்ள விண்வெளி சமாச்சாரங்களை கூறாமல், வெறும் தந்தை-மகள் பற்றிய கதை என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டு அவர் அமைத்த இசைக்கோர்வை(Cornfield Chase) தற்போது ரசிகர்களால் விண்வெளி சார்ந்த ஒரு கதைக்கான மிகப்பொருத்தமான இசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், ‘இன்டர்ஸ்டெல்லார்’ படத்தின் இசைக்காக நூற்றாண்டுகள் பழமையான ஒரு தேவாலயத்தில் இருக்கும் ‘ஆர்கன்’(Organ) இசைக்கருவியை ஹான்ஸ் ஜிம்மர் பயன்படுத்தியுள்ளார்.
‘தி லயன் கிங்’ என்ற அனிமேஷன் படத்திற்கு இசையமைத்ததற்காக ஹான்ஸ் ஜிம்மர் ஆஸ்கார் விருது வென்றார். அனிமேஷன் படமாக இருந்தாலும், தந்தை-மகன் உறவைப் பற்றியும், வாழ்வில் நமது கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவது பற்றியும் ‘தி லயன் கிங்’ திரைப்படம் பேசுகிறது. அந்த படத்தில் வரும் ‘சிம்பா’ என்ற சிங்கம், தனது தந்தை முபாசாவை இழந்து தவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
ஹான்ஸ் ஜிம்மரும் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் ஆவார். ‘தி லயன் கிங்’ படத்தை தனது தந்தைக்கான ஒரு சமர்ப்பணமாக நினைத்து பணியாற்றியதாக ஹான்ஸ் ஜிம்மர் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் வரும் ‘ரிமெம்பர்’, ‘திஸ் லேண்ட்’, ‘கிங் ஆப் பிரைட் ராக்’ உள்ளிட்ட இசைக்கோர்வைகள் புகழ்பெற்றவை.
இயக்குநர் டென்னிஸ் வில்லினெவ் இயக்கிய 'டியூன்’(Dune) திரைப்படத்தின் இசைக்காக ஹான்ஸ் ஜிம்மர் தனது 2-வது ஆஸ்கர் விருதைப் பெற்றார். அந்த படம் எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தின் தீவிர ரசிகரான ஜிம்மர், திரைப்படத்தின் இசைக்காக, பி.வி.சி. பைப் போன்ற பொருட்களை வைத்து புதிய சத்தங்களை எழுப்பக்கூடிய கருவிகளை உருவாக்கி, அதனை இசை வடிவமாக திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், ஆர்வ மிகுதியால் திரைப்படம் வெளியான பிறகும் ஹான்ஸ் ஜிம்மர் தொடர்ந்து 'டியூன்’ படத்திற்கான பின்னணி இசையை உருவாக்கிக் கொண்டே இருந்தார் எனவும், ‘அதனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த பாகத்தில் பயன்படுத்துகிறேன்’ என்று அவரிடம் கூறியதாகவும் இயக்குநர் டென்னிஸ் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
தற்போது இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இசையமைப்பதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி அமைத்துள்ளார். ‘ராமாயணா’ படத்தின் விஷுவல் பிரம்மாண்டத்திற்காக ஒருபுறம் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தாலும், இசை ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
'நான் இசையை விரும்புகிறேன். பிடித்ததை செய்வதற்கு எனக்கு கிடைத்திருப்பது இந்த ஒரு வாழ்க்கைதான். எனவே அதை நான் சரியாக செய்ய வேண்டும், சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.'
ஹான்ஸ் ஜிம்மர்