

கால்கள், இறக்கைகளை பயன்படுத்தி அதிர்வுகள் மூலமாகப் பூச்சிகள் தொடர்புகொள்வது புதிய செய்தி அல்ல. சில பூச்சிகள், சிறிய சத்தங்கள் வழியாகவும், தாம் வாழும் தண்ணீரில் அலைகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும், காற்றலைகள் வழியாகவும் பேசிக்கொள்கின்றன.
அந்த சத்தங்கள் குறைந்த அதிர்வெண்ணில் இருப்பதால், மனிதர்களால் இந்த அதிர்வு சமிக்ஞைகளை கேட்க முடிவதில்லை. அத்துடன் சில நேரம் முரண்படும் ஒலியியல் அம்சங்களின் கலவையாகவும் அவை இருக்கும். கொசு, வண்டு உள்ளிட்ட பூச்சிகளின் ரீங்காரம் போன்ற சமிக்ஞைகளை மனிதர்களால் கேட்க முடிகிறது. கொசுக்களால் பரவும் மலேரியாவை புரிந்துகொள்வதற்கு கொசுவின் ரீங்காரத்தை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
உலகை நிசப்தம் இல்லாமல் வைத்திருக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையும் வகையும் பிரமாண்டமானது என்பதால், அவை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளும் விதவிதமானவை. ஆனால், பூச்சிகளை பொறுத்தவரை காற்று, மழை, இலைகளின் சலசலப்பு என தன்னை சுற்றியுள்ள அத்தனை சத்தங்களையும் பிரித்தறிய முடியும். மனிதர்களுக்கு பூச்சிகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தெரியாவிட்டாலும், ஈக்கள், சில்வண்டுகள், வெட்டுக்கிளிகள் பரஸ்பரம் தங்கள் இனத்தை அடையாளம் காண்பதற்கும், இணையை கவர்வதற்கும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எதிரிகள், ஒட்டுண்ணிகளை பற்றி எச்சரிக்கை செய்வதற்கும் பிரமாதமான தொடர்புத்திறன்களை கையாள்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு ஒட்டுண்ணி குளவிகள் அருகில் இருக்கும்போது பழ ஈக்கள், மற்ற பழ ஈக்களை எச்சரிக்கின்றன. புழுப்பருவத்தில் இருக்கும் பழ ஈக்களிடம் குளவிகள் தங்கள் முட்டைகளை இட்டுவிடுகின்றன. படிப்படியாக வளரும் பழ ஈயை அது கொன்றுவிடக்கூடும். இதனால் குளவிகளை பார்த்தவுடன் பழ ஈக்கள் எச்சரிக்கை அடைந்து முட்டை இடுவதை நிறுத்திவிடும். பழ ஈக்கள், குளவியை பார்த்தவுடன் சிறகை அசைத்து மற்ற பழ ஈக்களையும் முட்டையிடுவதை நிறுத்துமாறு வேண்டிக்கொள்வதாக அமெரிக்காவின் டார்மவுத்தில் உள்ள கெய்சல் மருத்துவக்கல்வி நிலையத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒரே இனத்தை சேர்ந்த பூச்சிகள் தங்களுக்குள் தொடர்புகொள்ளும் அளவுக்கு, பிற இன பூச்சிகளிடம் தொடர்புகொள்ள முடிவதில்லை. ஆனால், அவை ஓரிடத்தில் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டால் அவற்றால் கூடுதலாக தொடர்புகொள்ள முடிகிறது, என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.