

உலகில் உள்ள பெரும்பாலான பறவைகள் தாங்கள் இடும் முட்டைகளை தங்களின் உடல் வெப்பம் மூலம் அடைகாத்து குஞ்சு பொரிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், எரிமலைகளில் இருந்து வெளிவரும் சுடு சாம்பல் மற்றும் புவிவெப்ப ஆற்றலை பயன்படுத்தி முட்டைகளை அடைகாக்கும் விசித்திரமான ‘மெகாபோட்’ (Megapode) பறவைகள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கிரேக்க மொழியில் மெகாபோட் என்றால் ‘பெரிய கால்கள்’ என்று பொருளாகும். கோழி வடிவத்தில் இருக்கும் இந்த பறவைகள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகின்றன. இவை தங்களின் பலமான கால்களால் பெரிய குழிகளை தோண்டுவதில் வல்லவை என்பதால் இப்பெயர் பெற்றுள்ளன.
முட்டையிடும் காலம் வந்தவுடன் இந்த பறவைகள் மைல் கணக்கில் பயணித்து, செயல்படும் எரிமலைகளுக்கு அருகிலோ அல்லது புவிவெப்ப நீரூற்றுகள் உள்ள பகுதிகளுக்கோ செல்கின்றன.
எரிமலை சாம்பல் எப்போதுமே வெதுவெதுப்பாக இருக்கும் என்பதால், அங்கு தன் கால்களால் சுமார் 3 முதல் 4 அடி ஆழத்திற்கு பெரிய குழி ஒன்றை தோண்டுகிறது. முட்டைகள் பொரிப்பதற்கு தேவையான துல்லியமான வெப்பநிலையை (சுமார் 33°C) இப்பறவைகள் தங்களின் அலகு மற்றும் தொண்டை மூலமாக உணர்கின்றன.
வெப்பநிலை சரியாக இருக்கும் பட்சத்தில், பெண் பறவை குழியின் உள்ளே முட்டையிட்டு, மீண்டும் அதை சாம்பலால் மூடிவிட்டு அங்கிருந்து நிரந்தரமாக பறந்து சென்றுவிடுகிறது. அதன்பின்னர், எரிமலை சாம்பலின் வெப்பமே ஒரு இயற்கை ‘இன்குபேட்டர்’ போல செயல்பட்டு முட்டையை தானாகவே அடைகாக்குகிறது.
சுமார் 60 முதல் 80 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், தங்களுக்கு மேலே இருக்கும் 4 அடி ஆழ சாம்பலை தாங்களாகவே தோண்டி மேலே வர வேண்டும். இந்த குஞ்சுகள் பிறக்கும் போதே முழுமையான சிறகுகளுடன் பிறக்கின்றன.
இதனால் சாம்பலிலிருந்து வெளியே வந்த முதல் நாளே ஓடவும், உணவை தேடவும், பறக்கவும் கூடிய அசாத்திய திறனை பெற்றிருக்கின்றன. தங்களின் வாழ்நாளில் இவை தங்களை பெற்ற பெற்றோரை சந்திப்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.