63 ஆண்டுகளாக அசைவத்தை தொடாத அதிசய கிராமம்

ஊர் கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை பிடிப்பதில்லை.
63 ஆண்டுகளாக அசைவத்தை தொடாத அதிசய கிராமம்
கிராமம்
Published on: 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்பட்டி கிராம மக்கள், கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து, சைவ உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சைவத்திற்கு மாறிய மக்கள்

வாடிமனைப்பட்டி கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 1963-ம் ஆண்டுக்கு முன்பு வரை இங்குள்ள மக்கள் சைவம், அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தனர். ஆனால், 1963-ம் ஆண்டு முதல் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியை ஏற்றுக்கொண்ட ஊர் மக்கள் அனைவரும், அசைவத்தை தவிர்த்து முழுமையாக சைவத்திற்கு மாறினர்.

தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களிலும், வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு செல்லும்போதும் கூட இவர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுகின்றனர். வெளியூரில் இருந்து இந்த ஊருக்கு திருமணமாகி வரும் பெண்களும், இந்த ஊர் பாரம்பரியத்தை ஏற்று சைவத்திற்கு மாறிவிடுகின்றனர்.

75 வயது மூதாட்டி நெகிழ்ச்சி

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஜெயமணி கூறியதாவது:-

"நான் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவள். திருமணத்திற்கு முன்பு அசைவம் சாப்பிட்டு வந்தேன். திருமணமாகி இங்கு வந்த பிறகு, எனது கணவர் சைவ உணவையே சாப்பிட்டார். அதனால் நானும் முற்றிலும் சைவத்திற்கு மாறிவிட்டேன். எனது 4 மகள்களுக்கும் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். அவர்களும் நமது ஊர் பாரம்பரியத்தை கைவிடாமல் இன்றளவும் சைவ உணவையே பின்பற்றி வருகின்றனர்" என்றார்.

உயிர் கொலை தவிர்ப்பு

ஆடு, கோழிகளை வளர்த்து விற்றால் அவை பலி கொடுக்கப்படலாம் என்பதால், இங்கு யாரும் ஆடு, கோழி வளர்ப்பதில்லை. பசு மாடுகளை மட்டுமே வளர்க்கின்றனர். ஊர் கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை பிடிப்பதில்லை.

மதுவற்ற கிராமம்

பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மதுப்பழக்கம் கிடையாது. வெளியூரில் இருந்து யார் வந்தாலும் அன்புடன் உபசரித்து, உணவளிக்காமல் அனுப்புவதில்லை. சன்மார்க்க முறைப்படியே திருமணங்கள் நடக்கின்றன.

இயற்கை விவசாயம்

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இவர்கள், விளைநிலங்களுக்கு எந்தவித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அடிப்பதில்லை. இதனால் விளைபொருட்கள் இயற்கையாகவும், உயிரினங்களுக்கு பாதிப்பு இன்றியும் விளைகின்றன.

அ எழுத்தில் பெயர்

வள்ளலாரின் மகாமந்திரமான "அருட்பெருஞ்ஜோதி"யின் அடிப்படையில், இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் 'அ' எழுத்தில் தொடங்கும் பெயர்களையே சூட்டுகின்றனர். மேலும், வாரந்தோறும் திங்கட்கிழமை பசு மாடுகளை குளிப்பாட்டி சிறப்பான உணவு வழங்கி பராமரிக்கின்றனர்.

X