உலகளவில் மிக அதிகம்: ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம்!..

ஜப்பானிய நிறுவனமான செல்லாட்டோ தயாரித்துள்ள 'பியா குயா' என்ற ஐஸ்கிரீம்தான் உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
உலகளவில் மிக அதிகம்: ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம்!..
Published on: 

ஜப்பான்,

உலகளவில் மிக அதிகபட்சமாக ஜப்பானில் ஒரு 'பியா குயா' ஐஸ்கிரீம் ரூ.5 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஜஸ்கிரீம் பற்றிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் 'ஜில்' ருசியால் வளைத்திருப்பது ஐஸ்கிரீம். வெனிலா, சாக்லேட், ஸ்டிராபெர்ரி என விதவிதமான சுவைகளில் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை சில நூறு ரூபாய்கள் வரை இருக்கும். ஆனால் ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீம் ரூ.5 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது. அதையும் ஐஸ்கிரீம் பிரியர்கள் வாங்கி ருசிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'பியா குயா'

ஜப்பானிய நிறுவனமான செல்லாட்டோ தயாரித்துள்ள 'பியா குயா' என்ற ஐஸ்கிரீம்தான் உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐஸ்கிரீமில் உள்ள அரிய பொருட்கள்

புதுமையான 'பியூஷன்' சமையல் பாணிக்குப் பெயர் பெற்ற ரிவி என்ற உணவகத்தின் தலைமைச் சமையல் கலைஞர் தடாயோஷி யமடா இந்த ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளார். இத்தாலியின் ஆல்பா பகுதியில் இருந்து பெறப்படும் விலை உயர்ந்த வெள்ளை ட்ரபிள் எனப்படும் ஒரு வகையான காளான், உண்ணக்கூடிய தங்க இழைகள், பார்மிஜி யானோ ரெஜியானோ சீஸ் மற்றும் 'சகே' என்ற மதுபான தயாரிப்பில் மீதமாகும் 'சகே லீஸ்' போன்ற அரிய பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளை 'ட்ரபிள்'தான் விலை உயர்வுக்கு காரணம்

இந்த ஐஸ்கிரீமின் ஜப்பானிய யென் விலை 8 லட்சத்து 73 ஆயிரத்து 400. அதாவது சுமார் ரூ.5.24 லட்சம். இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இதில் பயன்படுத்தப்படும் வெள்ளை 'ட்ரபிள்'தான். இதன் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.12 லட்சம் ஆகும்.

ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு சோதனைகள்

ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய உயர்தரப் பொருட்களை ஒரே ஐஸ்கிரீமில் இணைப்பதே 'பியாகுயா'வின் சிறப்பம்சம். இதில் சரியான சுவையை உருவாக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக செல்லாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com