பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு ரூ.24.29 லட்சம் கோடியாக உயர்வு

பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.24.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு ரூ.24.29 லட்சம் கோடியாக உயர்வு
Published on

மும்பை

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

சென்ற நிதி ஆண்டில் (2017-18) பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் மொத்தம் ரூ.4.75 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இத்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. முந்தைய நிதி ஆண்டு இறுதியில் அது ரூ.18.30 லட்சம் கோடியாக இருந்தது.

அந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.19.52 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து இருந்தது.

இந்நிலையில், இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு ரூ.24.29 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீத வளர்ச்சியாகும். எனினும் நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது சொத்து மதிப்பு சற்றே சரிவடைந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டால் 5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எச்.டீ.எப்.சி. நிறுவனம் கூறி உள்ளது. 7 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுக்குள்) இத்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது. அப்போது சொத்து மதிப்பு ரூ.94 லட்சம் கோடியை எட்டும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) தெரிவித்துள்ளது.

தேர்ச்சி, அனுபவம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com