புரட்சியின் புதுமை பகத்சிங்...!

இன்று (மார்ச்23-ந்தேதி) பகத்சிங் நினைவு தினம். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் மண்ணில் சில காலம் வாழ்ந்து மறைகின்றனர். ஒரு சிலர் மட்டும் காலம் கடந்தும் வாழ்கின்றனர். இருபத்தி மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்ந்து, இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருப்பவர்தான் பகத்சிங்.
புரட்சியின் புதுமை பகத்சிங்...!
Published on

பகத்சிங், நாட்டுப்பற்றுடைய ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலேயரின் ஒவ்வொரு செயலும், நம்மை அடிமைப்படுத்துகிறது என்பதை உணர்ந்தவர். வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள். மன்னர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி செய்தனர். ஆங்கிலேயரின் ஒவ்வொரு சட்டமும் இந்தியர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தியது.

ஆங்கிலேயரின் சட்டங்களை எதிர்க்க மக்களும் நேரம் பார்த்து காத்து இருந்தனர். இந்த நேரத்தில், பால்டுவின் என்ற இங்கிலாந்து நாட்டின் பிரதமர், இந்தியர் அல்லாத சைமன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவை இந்தியாவிற்கு அனுப்பினார். அரசியலமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்காக அக்குழு அனுப்பப்பட்டது. இந்தியர் அல்லாத சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 1928-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி ஊர்வலம் நடைபெற்றது.

லாலா லஜபதிராய் ஊர்வலத்திற்கு தலைமையேற்றார். ஊர்வலத்தை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர் முடிவு செய்தனர். ஆங்கிலேய அதிகாரி ஸ்காட்டின் உத்தரவின் பேரில், ஆங்கிலேய அதிகாரி சவுந்தர் தலைமையில் இருந்த ஆங்கிலேய காவலர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை அடித்தனர். அதில் சவுந்தர், லாலா லஜபதிராயை பலமாக தாக்கினார். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பகத்சிங், ரத்த வெள்ளத்தில் இருந்த லாலா லஜபதிராயை கண்டு மனம் வெதும்பினார்.

தன் மீது பட்ட அடியே, இந்தியர்கள் மீது படும் கடைசி அடியாக இருக்க வேண்டும் என்று கூறிய சில நாட்களில், அதாவது 1928-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி லஜபதிராய் இறந்தார். லஜபதிராயின் இறப்பு, மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக சிந்திக்கத் தூண்டியது.

மேலும், லஜபதிராயை கொன்ற ஆங்கிலேய அதிகாரியை தட்டிக்கேட்க 30 கோடி இந்தியர்களில், இளைஞர்கள் உயிருடன் இருக்கிறீர்களா? அல்லது இறந்துவிட்டீர்களா, இந்திய இளைஞர்கள் யாராவது என் கேள்விக்கு பதில்தர முன்வருவீர்களா? எனக் கேட்ட தேசபந்து சி.ஆர். தாசின் மனைவி பசந்தி தேவியின் கேள்விகள் பகத்சிங்கின் சிந்தையை துண்டிவிட்டன.

ஆங்கிலேய அதிகாரி ஸ்காட்டையும், சவுந்தரையும் கொல்வதற்கான மசோதாவை தனது கட்சியான ஹிந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரி-பப்ளிக்கன் அசோசியேசனில் கொண்டு வந்தார் பகத்சிங். அசோசியேசனின் உறுப்பினர்கள் மசோதாவை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

1928-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி லஜபதிராயை தாக்கிய ஆங்கில அதிகாரி சவுந்தர், சைக்கிளில் தனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பகத்சிங், ஆசாத், சிக்தேவ், ராஜகுரு மற்றம் ஜெய் கோபால் ஆகியோர் துப்பாக்கி ஏந்திய கைகளுடன் விடுதலை வேட்கையை தாங்கி நின்றனர். மறுபக்கத்தில் சவுந்தரின் சைக்கிள் அலுவலக வாயிலை நெருங்கியது. பகத்சிங்கின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் சவுந்தரின் தலையை சுக்குநூறாக ஆக்கும்வரை ஓயவில்லை. போலீசின் கைகளில் சிக்காமல் சிம்லாவிற்கு சென்றார் பகத்சிங்.

இந்நிலையில் ஆங்கில அரசாங்கம் டெல்லியிலுள்ள மத்திய சட்டமன்ற கவுன்சில் அறிமுகப்படுத்திய, பொது பாதுகாப்பு மசோதாவும், வியாபாரிகள் பிரச்சினை மசோதாவும், இந்தியர்களை மேலும் அடிமைப்படுத்துவதாக இருந்தன. மேலும், இந்தியர்களின் உழைப்பையும், வளத்தையும் சுரண்டுவதாக இருந்தன. அதனை நிறைவேற்றுவதற்கு மத்திய சட்டமன்ற கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆங்கில அரசாங்கம், எதிர்ப்பினை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்தது. மக்களை அடிமைப்படுத்தும் மசோதாக்களுக்கு மக்களின் சார்பாக புரட்சி செய்து எதிர்ப்பினை தெரிவிக்க முன்வந்தனர். 1929-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி மத்திய சட்டமன்ற கவுன்சிலில் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்தின் சுவற்றின் மீது பகத்சிங்கும், அவரது நண்பர் பத்துகேஸ்வரும் குண்டுகளை எறிந்தனர். சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக இரண்டு குண்டுகள் வானம் பார்த்து முழங்கப்பட்டன. கேட்காத காதுகளுக்கு கேட்க குண்டுகள் தேவை என்ற வாசகம் அடங்கிய தாளை அந்த சட்டசபை கவுன்சிலின் உள்ளே போட்டுச் சென்றனர்.

வாழும் நாட்களில், ஒருநாள் வாழ்ந்தாலும் வீரமகனாக மண்ணில் மடிய வேண்டும்; தனி நபரின் புரட்சியை விட, ஒட்டுமொத்த மக்களின் எழுச்சியே நாட்டின் விடுதலையை உறுதி செய்யும்; தான் கையில் எடுத்த ஆயுதத்தின் நோக்கம் அடிமைத்தளையை அறுப்பதே; இதனை உணரவைக்க என் உயிர் போனாலும், பல உயிர் என்பின்னே தழைக்கும் என்று சூளுரைத்தார் பகத்சிங்.

இந்திய மக்களின் உணர்வும், உணர்ச்சியும் ஆங்கிலேயருக்கு உரக்க உரைக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஆங்கிலேயரின் கைகளில் பிடிபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றாலும் மக்களிடத்தில் புரட்சியாளர்களின் எண்ணங்களை புரியவைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்தார் பகத்சிங். 1929-ம் ஆண்டு ஜூன் 4-ந்தேதி நீதிபதி முன் பகத்சிங்கும், பத்துகேஸ்வர் தத்தாவும் கொண்டுவரப்பட்டனர். புரட்சி என எதை நீங்கள் கருதுகிறீர்கள்? என நீதிபதி கேட்டார்.

எங்களால் முடியும் என்பதை வலிமையாக மனதில் நிலைநிறுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஆட்சி செய்யும் அரசாங்க அரசியலிலும் மாற்றம் கொண்டு வருவது, இந்தியர்களை சுரண்டும் ஆங்கிலேயரின் போக்கை தகர்த்தெறிவது, இந்திய மக்களின் உண்மையான உரிமையை நிலைபெறச் செய்வது, விடுதலை பெறும்வரை எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அதனை மகிழ்ச்சியாய் ஏற்பதே புரட்சி என முழங்கினார் பகத்சிங்.

ஆங்கிலேய அதிகாரி சவுந்தரை கொன்ற வழக்கில் மரணதண்டனை விதித்து 1931-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் தூக்கிலிடப்பட்டனர். அடிமைத்தளைக்கு எதிராக போராடியவர்தான் பகத்சிங். பகத்சிங்கின் பருப்பொருளாய் விளங்கும் இளைஞனே! உன் அறிவை கூர்மையாக்கு! உன் திறமையை பட்டைதீட்டு!

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, தன் இன்னுயிர் நீத்த தியாகிகளின் புனித மண் இது! நம் சந்ததியினர் வாழ, தூய காற்று, தெளிந்த நீர், விளையும் நிலம் உருவாகிட வழி கொடுத்திடு! உன்னையும், உன் வீட்டையும் உயர்த்திப்பார், நாடு தானே உயர்ந்து விடும்! பகத்சிங்கின் புரட்சி மொழியை உனதாக்கு! உற்றார், உறவினர் உன் வழியில் பகத்சிங்கின் ஆன்மாவைக் காணட்டும்!

- இரா.பிறையா அஸ்வத், உதவி பேராசிரியர், வரலாற்றுத்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com