

ராணி ராம்பால்: இவர் அரியானா மாநிலத்திலுள்ள ஷாஹாபாத் மார்கண்டா பகுதியை சேர்ந்தவர். ராணி ராம்பாலின் இளமைக் கால வாழ்க்கையை வறுமை அபகரித்திருந்தது. தந்தை கைவண்டி இழுத்து குடும்பத்தை நகர்த்தினார். அவரது தினசரி வருமானம் 80 ரூபாயாக இருந்தது. தாயார் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்கள் வசித்த பகுதிக்கு அருகில் இருந்த ஆக்கி அகாடமியில் ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்றனர். அதை பார்த்ததும் ராணி ராம்பாலுக்கும் ஆக்கி விளையாடும் ஆசை உருவானது. ஆனால் அவருடைய தந்தையால் ஆக்கி `ஸ்டிக் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. அதனால் உடைந்த ஆக்கி `ஸ்டிக்களை கொண்டு பயிற்சி பெற்றவர், பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தேசிய அணிக்கு தேர்வாகி இந்திய அணியின் கேப்டனாகவும் ஆகிவிட்டார்.
இளம் பெண்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றிய இடத்தில் பிறந்து வளர்ந்தேன். அதனால் ஆக்கி விளையாட விரும்பியபோது பெற்றோரோ, நண்பர்களோ என்னை ஆதரிக்கவில்லை. என் பெற்றோர் ஏழ்மையான குடும்ப பின்னணியில் வளர்ந்தவர்கள். அதிகம் படிக்கவில்லை. என் உறவினர்கள் என் தந்தையிடம், உன் மகளை ஆக்கி விளையாட அனுமதிக்காதே. அவள் குட்டை பாவாடை அணிந்து மைதானத்தை சுற்றி ஓடி, குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவாள் என்று கூறுவார்கள் என்று வேதனையோடு சொல்கிறார். இப்போது அவர்களே பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
குர்ஜித் கவுர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த இவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் பருவத்தின் பல ஆண்டுகளை கிராமத்திலேயே கழித்ததால் ஆக்கி என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்திருக்கிறார். வீட்டில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளிக்குச் சென்றபோதுதான் குர்ஜித் கவுருக்கு முதன் முதலில் ஆக்கி அறிமுகமானது. அப்போது ஆக்கி பற்றி தெரியாததால் மற்ற பெண்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து பொழுதை போக்கி இருக்கிறார். அதுவே நாளடைவில் ஆக்கி மீது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஆக்கியே அவரது உலகமாக மாறி இருக்கிறது. ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் அடித்த கோல்தான், அரைஇறுதிப் போட்டிக்கு இந்திய அணியை நுழைய வைத்து புதிய வரலாறு படைக்க காரணமாக அமைந்தது. பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார், குர்ஜித் கவுர்.
சுசீலா சானு: மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்த 29 வயதான சுசீலா சானு அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுள் ஒருவர். இவரது தந்தை டிரைவர். தாயார் வீட்டு வேலை செய்பவர். தனது 11-வது வயதில் சுசீலா ஆக்கி விளையாட தொடங்கினார். 2002-ல் மணிப்பூரில் உள்ள ஆக்கி அகாடமியில் சேர்ந்தார்.திறமையான வீராங்கனையாக தன்னை நிலைநிறுத்திய பிறகும் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆக்கி விளையாடுவதை நிறுத்தினார். மூத்த வீரர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் மீண்டும் களம் இறங்கியவர், ஒலிம்பிக்கில் முழு மூச்சாக உழைத்திருக்கிறார்.
சலீமா டெட்: நக்சலைட்டு ஆதிக்கத்தால் பாதிப்புக்குள்ளான ஜார்க்கண்டின் சிம்தேகாவில் உள்ள பட்கிசாபர் கிராமத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரும் ஆரம்பத்தில் ஆக்கி `ஸ்டிக்கள் வாங்க முடியாமல் மரக் குச்சிகளை கொண்டே பயிற்சி பெற்றிருக்கிறார். அவரது கிராமத்தில் உள்ள அனைவரும் ஆக்கி விளையாடுவார்கள் என்பதுதான் சலீமாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல். சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் எனது கிராமத்தை சேர்ந்த முதல் வீராங்கனை நான் என்பது பெருமையாக இருக்கிறது என்கிறார். டீப் கிரேஸ் ஏக்கா: ஒடிசாவின் லுல்கிகி கிராமம் இவருடைய பூர்வீகம். ஏக்காவின் தந்தை, மாமா, மூத்த சகோதரர் ஆகியோர் ஆக்கி வீரர்கள். ஆயினும் ஏக்கா ஆக்கி `ஸ்டிக்கை கையில் எடுத்தபோது அவரது குடும்பத்தை கிராம மக்கள் கடுமையாக விமர்சித்தார்கள். வீட்டு வேலைகளை கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஆக்கி `ஸ்டிக்கை அவள் கையில் எப்படி திணிக்கலாம் என்று வசைபாடி இருக்கிறார்கள். அதனை பொருட்படுத்தாமல் குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு காரணமாக 16 வயதில் தேசிய போட்டிகளில் விளையாட தொடங்கிவிட்டார். 2014-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல ஏக்காவின் பங்களிப்பு முக்கியமானது.
வந்தனா கட்டாரியா: இவர் உத்தரகாண்டில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இவருக்கு ஆக்கி மீது ஆர்வம் துளிர்விட்டிருக்கிறது. இது பெண்களுக்கு ஏற்புடைய விளையாட்டு அல்ல என்று சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் மறைவான இடத்தில் மரக்கட் டையைக் கொண்டு ஆக்கி விளையாட பயிற்சி பெற்றிருக்கிறார். வந்தனாவின் தந்தை மட்டுமே மகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் காலமானார். அந்த சமயத்தில் பயிற்சி காரணமாக வந்தனாவால் தந்தையின் இறுதி சடங்குக்கு செல்ல முடியவில்லை. துயரங்களை தாங்கிக்கொண்டு பயிற்சி பெற்றவர், ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.
லால்ரெம்ஸியாமி: ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு நான் தேர்வாக வேண்டும் என்பது மறைந்த என் தந்தையின் கனவு. அது நனவாகி இருக்கிறது என்று பெருமிதம் கொள்ளும் லால்ரெம்ஸியாமி, ரைசிங் ஸ்டார் விருது பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை தன்வசப்படுத்தியவர். மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராம விவசாய குடும்பத்தில் பிறந்தவரான லால்ரெம்ஸியாவின் ஆக்கி ஆர்வத்திற்கு தந்தை பக்கபலமாக இருந்திருக்கிறார். ஆக்கி அணியில் இணைந்தபோது இவரால் மற்ற வீராங்கனைகளுடன் சரளமாக ஆங்கிலமோ, இந்தியோ பேச முடியவில்லை. ஆரம்பத்தில் கை சைகை மூலமே சக வீராங்கனைகளை தொடர்பு கொண்டிருக்கிறார். பிறகு புத்தகங்கள் உதவியுடன் இரு மொழிகளையும் கற்று தேர்ந்திருக்கிறார்.
சவிதா புனியா: கோல் கீப்பரான சவிதாவின் அசாத்தியமான செயல்பாடும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைந்தது. இவரது பூர்வீகம் அரியானாவிலுள்ள ஜோத்கான் கிராமம். ஆக்கியில் தனது திறமையை மெருகேற்றிக்கொள்வதற்காகவே பள்ளி பருவத்தில் ஒவ்வொரு வாரமும் 6 முறை 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார். சவிதாவுக்கு முன்பு, அவரது குடும்பத்தில் யாரும் எந்த விளையாடும் விளையாடியதில்லை. அவரது தாத்தாதான் சவிதாவை ஆக்கி விளையாடுவதற்கு ஊக்குவித்திருக்கிறார்.