

நிகர ஏற்றம்
சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 807.95 புள்ளிகள் அதிகரித்து 38,822.57 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 238.20 புள்ளிகள் முன்னேறி 11,512.40 புள்ளிகளாக இருந்தது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற புதன்கிழமை விடுமுறை என்பதால் இந்த வாரத்தில் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த 4 தினங்களில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். வட்டி விகிதங்கள் பற்றி ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், செப்டம்பர் மாத வாகனங்கள் விற்பனை நிலவரம், 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி புள்ளிவிவரம் மற்றும் உலக நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்கூட்டம்
பாரத ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு 4-ந் தேதி வெளிவருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த ஆய்வுக்கூட்டம் பங்குச்சந்தை வட்டாரங்களின் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கிய நிகழ்வாக இருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை அதிரடியாக 5.40 சதவீதமாக குறைத்தது. அதற்கு ஏற்ப ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் 5.15 சதவீதமாக குறைந்தது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 முக்கிய துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்த துறைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.
இன்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு இத்துறைகளின் ஆகஸ்டு மாத உற்பத்தி புள்ளிவிவரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தை நாளை சந்தைகள் வெளிப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறினர். நடப்பு நிதி ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 5 மாதங்களுக்கான நிதிப்பற்றாக்குறை புள்ளிவிவரமும் இன்று வெளிவர வாய்ப்பு உள்ளது.
வாகனங்கள் விற்பனை
செப்டம்பர் மாத வாகனங்கள் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை நிறுவனங்கள் நாளை வெளியிட உள்ளன. மோட்டார் வாகனத் துறை தேக்கம் கண்டு இருக்கும் நிலையில் மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், அசோக் லேலண்டு ஆகிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி நிலவரம் அனைத்து தரப்பினரின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக இருக்கும்.
2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக பல புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு (2019 ஏப்ரல்-செப்டம்பர்) தொடர்பாகவும், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள் தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற மற்ற சர்வதே நிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.