கோடிகள் புரளும் மொய்விருந்தின் பின்னணி ரகசியங்கள்

மொய் விருந்து பற்றிய விஷயங்களை இப்போது இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தேடிப்பிடித்து படிக்கிறார்கள். அந்த அளவுக்கு அதை பற்றி தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
கோடிகள் புரளும் மொய்விருந்தின் பின்னணி ரகசியங்கள்
Published on

தற்போது தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் வருவதுபோல், மொய்விருந்து நிகழ்ச்சியை காணவும் வெளிநாட்டினர்கள் விரைவில் தமிழ் நாட்டிற்கு வரும் சூழல் உருவாகிவிட்டது.

மொய்விருந்தின் அன்றைய, இன்றைய, நாளைய நிலை பற்றி புதுக்கோட்டை மாவட்டம் செரியலூரை சேர்ந்த சின்னையன் விளக்குகிறார்.

1980-90-ம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி பகுதியில் பைங்கால், தென்னங்குடி, குருவிக்கரம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் விருந்து நடத்தி, மொய் வாங்கியவர்கள் தேங்காய் வியாபாரத்தில் முதலீடு செய்தனர். அப்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பணம் வசூலானது. அவர்களே அடுத்தடுத்த மொய் விருந்துகளில் ரூ.1 கோடிக்கு மேல் மொய் வாங்கி தொழிலை விரிவு செய்தனர். ஆனாலும் அவர்கள் கடந்த 10 ஆண்டு களாக மொய் விருந்துகளில் பங்கேற்காமல் குறைத்துக்கொண்டே வருகின்றனர். அதே நேரத்தில் புதிய நபர்கள் மொய் விருந்து களில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்கள்.

பின்பு தென்னை, பலா மரங்களையும் நட்டு வளர்த்து வருமானம் பார்த்தார்கள். அப்படி வளர்த்த மரங்களைதான் கஜா புயல் அழித்துவிட்டது. அதனால் மீண்டும் ஏழ்மை நிலைக்கு சென்ற விவசாயிகள், அடுத்து வாழையில் இருந்து விவசாயத்தை தொடங்கி கடுமையாக உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மொய் பணத்தை தொழில், விவசாயத்தில் முதலீடு செய்தவர்கள் பிரச்சினைகள் இன்றி மொய் விருந்துகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த மொத்த பணத்தையும் பயன்படுத்தி வீடுகட்டியவர்களும், பயனற்ற வகையில் உள்ள நிலங்களில் முதலீடு செய்தவர்களும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் அடமானம்வைத்தும், கடன் வாங்கியும் சொத்துகளை இழந்து வருகின்றனர் என்று கூறிய சின்னையன், 29 வருடங்களுக்கு முன்பு தான் நடத்திய மொய்விருந்து பற்றிய சுவாரசியங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

நான் 1990-ல் முதல் மொய் விருந்து நடத்தினேன். அதில் கிடைத்த பணத்தில் நிலம் வாங்கினேன். தென்னை விவசாயமும் செய்தேன். அதில் கிடைத்த வருமானத்தில் மொய்யை திரும்பிச் செலுத்தினேன். அடுத்த மொய் விருந்து பணத்தில் விவசாயத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தேன். இப்படி படிப்படியாக 5 மொய் விருந்துகளுக்கு மேல் செய்துவிட்டேன். இப்போதும் தொடர்கிறேன்.

1980 முதல் மொய் விருந்துகள் நடத்தி வந்த பலரும் அதிலிருந்து விலகிவிட்டாலும், புதிய நபர்கள் மொய் விருந்துகளில் பங்கேற்று வருவதால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.500 முதல் 750 கோடிகள் வரை மொய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை தான். அதே நேரத்தில் எதிர்காலத்தில் இந்த மொய் விருந்துகள் குறைந்துவிடும் என்றோ, முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும் என்றோ சொல்லிவிட முடியாது என்றார்.

அமெரிக்காவில் விருந்து

தமிழகத்தில் நடைபெறும் மொய்விருந்து கலாசாரத்தை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களும் பின்பற்றி உள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு வழங்கவும் மொய் விருந்துகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதில் பல வகையான இந்திய உணவு களை பரிமாறி மொய் வசூல் செய்து நிதி திரட்டினார்கள்.

அந்த மொய்விருந்துகளில் அதைப் பற்றி அறியாதவர்களும் கலந்து கொண்டு மொய் எழுதியுள்ளனர். இதேபோல பல்வேறு நற்பணிகளுக்காக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் ஏதேனும் ஒரு பொதுஇடத்தில் மொய் விருந்துகளை நடத்தி மொய் வசூலை வழங்கி வருகின்றனர். அமெரிக்காவில் நல்ல செயல்களுக்காக வசூலிக்கப்படும் மொய் பணத்தை யாரும் திரும்ப செய்வதில்லை. அது தாய் தமிழ் உறவுகளுக்காக செய்யும் சிறு உதவி என்பது, அமெரிக்காவில் மொய் விருந்து நடத்தியவர்களின் கருத்து. அங்கு மொய்ப்பணம் ஆன்லைன் வழியாகவும், டாலராகவும் செலுத்தப்பட்டுள்ளது.

மொய் விருந்தில் பெண்கள்

மொய் விருந்துகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றில்லை. பெண்களும் கலந்து கொள்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் குடும்பத்தலைவரான ஆண் இறந்திருப்பார், அதனை தொடர மகன்கள் இல்லை என்றால் பெண்களே அதை தொடர்கிறார்கள். பெண்கள் தொடரும்போது கணவர் பெயரில் உள்ள மொய் கணக்குகளை அடுத்தடுத்து தன் பெயருக்கு மாற்றிக்கொள்வதுண்டு.

அதாவது கருப்பையா என்பவர் பெயரில் மொய் வாங்கி இருந்தால் அவர் மறைந்து விட்டாலோ அல்லது உடல்நலம் குன்றிவிட்டாலோ மொய் விருந்தை தொடர நினைக்கும் அவரது மனைவி கருப்பையா என்ற பெயரில் முதலில் செய்த மொய்யை செய்துவிட்டு, மேற்படியார் மனைவி என்று தன் பெயரை அடுத்த வரியில் இணைத்துக் கொள்வார். அதன்பிறகு மனைவி பெயரே மொய் கணக்குகளில் காட்டப்படும்.

விருந்தில் ஆட்டுக்கறி ஏன்?

மொய் விருந்துகளில் ஆட்டுக்கறி மட்டுமே உணவுக்காக சமைக்கப்படுகிறது. ஏன் கோழிக்கறி சமைத்தால் செலவு குறையுமே என்ற கேள்வி எழத்தான் செய்யும். கேள்வி சரி தான் என்றாலும், அதிகாலை 2 மணிக்கே ஆடுகள் அறுக்கப்பட்டு வெட்டப்படுகிறது. காலை 8 மணிக்குள் சமையல் பணிகள் முடிந்து, 10 மணி முதல் விருந்து தயாராகிவிடும். கறி குழம்புகளாகவும், ரத்தம், குடல், தலை தனியாக கூட்டுகளாகவும் வைக்கப்படுகிறது. மாலை 3 மணி வரை வரும் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. அதுவரை ஆட்டுக் கறி சுவைகுன்றாமல் இருக்கும். ஆனால் கோழிக்கறி என்றால் அதனோடு வேறு கூட்டு, பொரியல் வைக்க காய்கறிகள் தேவைப்படும். அதுமட்டுமின்றி கோழிகளை அறுத்து சுத்தம் செய்ய தாமதம் ஏற்படும். ஒரு முறை குழம்புகளை கலக்கி எடுக்கும் போதே கோழிக்கறித்துண்டுகள் உடைந்து நொறுங்கி விடும். விருந்து சாப்பிடுபவர்களுக்கு கறியை துண்டு களாகவும் எடுத்து வழங்கவும் முடியாது. ஆட்டுக்கறியை பலரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். இப்படி பல்வேறு காரணங்களுக்காக மொய்விருந்தில் ஆட்டுக்கறி மட்டும் வழங்கப்படுகிறது.

பேராவூரணி பகுதியில் அனைத்து மண்டபங்களும் கடைவீதியிலேயே இருப்பதால் மொய் செய்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் சாப்பிட்டுவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால் செலவு தொகை அதிகமானது. ஆகவே மொய் செய்பவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்டு வந்தது. அதிலும் குழம்பு தனியாகவும், கறி தனியாகவும் வைக்கப்படும். அதற்கு அகப்பை கறி என்று பெயர். மொய் விருந்து நடத்துவதில் ஜாதி, மதம் என்ற எந்த பேதமும் இல்லை.

கும்பிடு பணம்

தஞ்சாவூர் மாவட்டம் வேம்பங்குடி - பைங்கால், தென்னங்குடி, ஆவணம், குருவிக்கரம்பை, வீரியங்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் உள்ள பெண்களும் கும்பிடு பணம் என்ற பெயரில் மொய் செய்து, அந்த பணத்தை தனது குடும்பத்தின் மொய் விருந்து நாளில் தனியாக வாங்குவதும் தொடர்கிறது. அந்த கும்பிடு பணம் என்ற மொய் வரவு செலவுகளை பெண்கள் கவனித்துக் கொள்கிறார்கள். இதில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கும்பிடு பணம் மொய் வாங்கிய பெண்களும் உள்ளனர்.

அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றவர்களின் மனைவிகள், அம்மாக்கள் மொய் விருந்து பந்தல்களுக்குச் சென்று மொய் எழுதி வருகின்றனர்.

( நிறைவடைந்தது )

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com